ப்ரம்மாவை முழுமுதற் கடவுளாக என்றைக்குமே லோகத்தில் உபாஸித்ததாகத் தெரியவில்லை. பஹுகாலமாக ஸ்ருஷ்டிகர்த்தா என்ற முறையில்கூட அவருக்கு உபாஸனை இல்லாமலே இருக்கிறது. இத்தனை பண்டிகைகள் இருக்கின்றன. பிள்ளையார் சதுர்த்தி, ஸ்கந்த ஷஷ்டி, ராமநவமி, கோகுலாஷ்டமி, வரலக்ஷ்மி வ்ரதம், ஸரஸ்வதி பூஜை, நவராத்ரி, சிவராத்ரி – இவை எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்தவை. இவை போக இன்னம் அநேகம். பஞ்சாங்கத்தைப் பார்த்தால் அநேகமாக தினமும் ஏதாவது ஒரு தெய்வத்துக்கான ஒரு பண்டிகையாக இருக்கும்; ஒரு நாளிலேயே இரண்டு மூன்று சேர்ந்துகூட வரும். இப்படி கணக்கு வழக்கில்லாமல் பண்டிகைகள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் ப்ரம்மாவுக்கென்று ஒன்றுகூட நாம் கொண்டாடுவதாக இல்லை.
உங்களகங்களில் ஸ்வாமி விக்ரஹங்கள், படங்கள் எவ்வளவு வைத்திருக்கிறீர்கள்? ஆனால் ப்ரஹ்மாவுக்கு உண்டா? மஹா விஷணு சயனித்துக் கொண்டிருக்கும் கோலத்தில் படம் இருந்தால் அதில் பகவானின் நாபி கமலத்தில் அவர் இருப்பார். திருக்கல்யாணப் படங்கள் இருந்தால் அதில் ‘பண்ணி வைக்கிற சாஸ்த்ரி’ களாக உட்கார்ந்து கொண்டிருப்பார். ஆனால் அவர் பாட்டுக்கு கூட்டத்தோடு கூட்டமாக என்னவோ இருப்பாரே தவிர அவரை நாம் பூஜார்ஹமான (பூஜை பெறத் தகுதி பெற்ற) ஒருவராக நினைத்து வழிபடுவதென்பதில்லை. கூட்டத்திலே ஒருவராக அவர் வந்து நிற்பதோடு ஸரி.