கோயிலில்லாத கடவுள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

நம் தேசத்தில் இத்தனை ஆயிரம் கோயிலிருந்தும், ஒவ்வொரு கோயிலிலும் ஏகப்பட்ட ஸந்நிதிகள் இருந்தும், அநேக உத்ஸவாதிகள் நடத்தப்பட்டபோதிலும் ப்ரம்மாவுக்கு எதுவுமே காணோம்! அபூர்வமாக எங்கேயாவது புஷ்கர் மாதிரி ஒரு க்ஷேத்திரத்தில்தான் தேடித்தேடி அவருக்குக் கோயில் பார்க்க முடிகிறது. பிரம்மா கோயில் என்றாலே புஷ்கரைத்தான் இன்று நினைக்கிறார்கள். நம்முடைய கும்பகோணத்திலேயே ப்ரம்மாவுக்குத் தனிக் கோயில் இருப்பது ரொம்பப் பேருக்கு தெரியவில்லை. காஞ்சீபுரத்திலும் கும்பகோணத்திலும் தடுக்கிவிழுந்த இடமெல்லாம் கோவில்கள் என்பார்கள். காஞ்சீபுரத்தில் நாம் ஜென்மாவில் பண்ணுகிறதற்கெல்லாம் கணக்கு எழுதும் சித்திரகுப்தனுக்கு அபூர்வமாகக்கோயில் இருக்கிறதென்றால், கும்பகோணத்தில் ஜென்மாவைத் தரும் ப்ரம்மாவிற்கு அபூர்வமாகக் கோயில் இருக்கிறது! திருக்கண்டியூர் என்று திருவையாற்றுக்குக் கிட்டே இருக்கிறது. அது பரமசிவன் ப்ரஹ்மாவுக்கு ஆதியில் இருந்த ஐந்து தலைகளில் ஒன்றைச் சேதித்த க்ஷேத்ரம். அங்கே சிவனுக்கு பரஹ்மசிரக்கண்டீசர் என்றே பேர். அங்கே ப்ரஹ்மாவுக்கும் ஸந்நிதி இருக்கிறது. கொங்கு நாட்டிலுள்ள த்ரிமூர்த்தி க்ஷேத்ரமான பாண்டிக் கொடுமுடியிலும் இருக்கிறது. திருச்சிராப்பள்ளிக்கு பக்கத்தில் உத்தமர் கோயிலில் த்ரிமூர்த்திகளுக்கும் ஸந்நிதி இருப்பதில் ப்ரம்மாவும் இருக்கிறார். சிதம்பரத்தில் ப்ரஹ்மாவையே சண்டேச்வரர் என்று சொல்லி, (கனக) ஸபையைச் சுற்றி வரும்போது அவருக்கு ஒரு சின்ன கோஷ்டம் காட்டுகிறார்கள். ஆனாலும் இதெல்லாம் ஸமுத்ரத்தில் ஒரு துளி மாதிரிதான். நம் தலையெழுத்தை எழுதுகிறவரின் தலையெழுத்து இப்படி இருக்கிறது!

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பண்டிகை இல்லாத கடவுள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பூஜை இல்லாத காரணம்
Next