“ந்யாயேந்து சேகரம்” : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அந்தப் பெரியவர் பண்ணியிருக்கும் க்ரந்தங்களில் ‘ந்யாயேந்து சேகரம்’ என்பது ஒன்று. அது அத்வைத வேதாந்தம், தர்க்க சாஸ்த்ரம் ஆகிய இரண்டும் சேர்ந்த புஸ்தகம். தர்க்க சாஸ்த்ரம் என்று பொதுவாகச் சொல்வதற்கு ‘ந்யாய சாஸ்த்ரம்’ என்றே பெயர். அதனால்தான் அந்த சாஸ்த்ரத்தை ஸம்பந்தப்படுத்தி எழுதப்பட்ட இந்த நூலுக்கு ‘ந்யாயேந்து சேகரம்’ என்று பேர்.

‘ந்யாய பாஸ்கரம்’ என்று ஒரு புஸ்தகம் இருக்கிறது. அது அனந்தார்யர் என்பவர் எழுதியது. அத்வைத வேதாந்த க்ரந்தங்கள் சிலவற்றில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தர்க்க வாதங்கள் சரியானவையில்லை என்று கண்டனம் செய்து தர்க்க ரீதியாக எழுதப்பட்ட புஸ்தகமே ‘ந்யாய பாஸ்கரம்’. அதில் சொல்லியிருக்கும் வாதங்கள்தான் சரியில்லை என்றும், அத்வைத க்ரந்தங்களின் வாதங்கள் சரியானவையே என்றும் நன்றாக அலசி மன்னார்குடிப் பெரியவர் எழுதிய மறுப்பு நூல்தான் ‘ந்யாயேந்து சேகரம்’. ந்யாய சாஸ்திரத்தில் தம்முடைய புஸ்தகம் ஸூர்யன் மாதிரி ப்ரகாசிப்பது என்று பொருள்பட அனந்தார்யர் ‘ந்யாய பாஸ்கரம்’ என்று பெயர் வைத்தார். ஸூர்யன் அஸ்தமித்தபின் குளுகுளுவென்று நிலாவைக் கொடுத்துத் தாபசாந்தி செய்வது சந்திரன். சந்திரனுக்கு இந்து என்றும் பெயர். ந்யாய பாஸ்கரத்தின் வாதங்களை அஸ்தமிக்கப் பண்ணி ஸஹ்ருதயர்கள் மனஸுக்குச் சந்திரிகை மாதிரி ஜிலுஜிலுவென்றிருப்பது தம்முடைய மறுப்பு நூல் என்று காட்டும் விதத்தில் நம்முடைய பெரியவர் தம் புஸ்தகத்துக்குப் பெயர் வைக்க எண்ணினார். ஆகையால் இதற்கு அவர் ‘ந்யாயேந்து’ என்று பேர் வைத்திருந்தாலே போதும். ஆனால் அடக்க குணமுள்ள அவர் தாம் ஸ்வயமாக இப்படி ஒரு பெரிய நூல் எழுதியதாக நினைக்காமல் ஈச்வர ப்ரஸாதமாகவே எழுதியதாகத்தான் நினைத்தார். அதனால் தாம் வைக்கும் பேர் ஈச்வரனையும் ஞாபகப்படுத்துவதாக இருக்க வேண்டுமென்று நினைத்தார். சந்திரன், சிவன் இருவரையுமே ஞாபகப்படுத்துவதாக ‘சந்திர சேகர’ என்ற பெயர் இருக்கிறதல்லவா? இதையே ‘இந்து சேகர’ என்றும் சொல்வார்கள். அதனால்தான் “ந்யாய இந்து சேகரம்”, “ந்யாயேந்து சேகரம்” என்று தம்முடைய புஸ்தகத்துக்குப் பெயர் வைத்துவிட்டார். தலையாக, உச்சியாக விளங்குவது ‘சேகரம்’. அத்வைத ஸித்தாந்தத்தை நிலைநாட்டி அந்த, ஸம்பிரதாயப் புஸ்தகங்களில் கூறியுள்ள வாதங்கள் தர்க்க சாஸ்த்ர ரீதியாக ஸரியானவையே என்று அழுத்தமாக நிரூபிக்கும் தலைசிறந்த நூலாக ‘ந்யாயேந்து சேகரம்’ விளங்குகிறது.

கும்பகோணத்தில் நமது மடத்துப் பரம குரு ஸ்வாமிகள் அத்வைதப் பிரசாரத்துக்காக அத்வைத ஸபா என்று ஆரம்பித்துவைத்து*, அது நம்முடைய ஸித்தாந்தத்துக்காக நல்ல ஸேவை செய்துவருகிறது. அதில் வருஷா வருஷம் நடத்தும் பரீக்ஷைகளில் ‘ந்யாயேந்து சேகரம்’ குறித்தும் ஒரு பரீக்ஷை இருக்கிறது. இதில் சிறப்பாகத் தேறி முதல் பரிசு வாங்குவதுதான் ஸபையின் தலைசிறந்த ஸம்மானமாகக் கருதப்படுகிறது என்பதிலிருந்து நூலின் சிறப்பு புரியும். (அத்வைத ஸபாவின் ஆரம்ப வருஷங்களில் நம்முடைய சாஸ்த்ரிகள் அதில் முக்யமான அங்கம் வஹித்திருக்கிறார்.)


* ஸ்ரீ சரணர்களுடைய குருவின் குருவான ஆறாவது சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் 1894-ல் அத்வைத ஸபையைத் தொடங்கினார்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is மன்னாகுடிப் பெரியவாள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பிள்ளையாரும் தர்க்க சாஸ்திரமும்
Next