பிள்ளையாரும் தர்க்க சாஸ்திரமும் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஸரி, தர்க்க சாஸ்த்ரத்துக்கும் பிள்ளையாருக்கும் என்ன ஸம்பந்தம்?

தர்க்க சாஸ்த்ரத்தில் ‘இதனால் இது இப்படி’ என்று காரண – காரியங்களை அறிவு ரீதியில் இசைத்துக் காட்டி வகுத்துள்ள விதிகளுக்கு ‘ந்யாயம்’ என்று பெயர். அதனால் தான் அந்த சாஸ்த்ரத்துக்கே ‘ந்யாயம்’ என்று விசேஷப் பெயர் ஏற்பட்டிருக்கிறது. உவமைகளைக் கொண்டும் நமக்குப் புரியுமாறு பல ‘ந்யாய’ங்களை வகுத்துத் தந்திருக்கிறது. ந்யாய சாஸ்த்ர நூல்களில் சொல்லியிருப்பவற்றோடு ஆன்றோர் வசனத்திலும் பொது வழக்கிலும் பிறந்த இப்படிப்பட்ட அநேக ந்யாயங்களும் உள்ளன. உதாஹரணமாக: உத்தேசமில்லாமல் தற்செயலாக ஒன்றை அடுத்து இன்றொன்று நடக்கும்போது ‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது’ என்கிறோமல்லவா? இதற்குக் ‘காக – தாளீய ந்யாயம்’ என்று பெயர். ‘தாளி’ என்றால் பனை. ‘தாலி’ கூட அதிலிருந்து வந்ததுதான். ஸம்ஸ்க்ருதத்தில் ‘ல’வுக்கும் ‘ள’வுக்கும் பேதம் கிடையாது.

ஸ்திரீகளின் ஸெளமங்கல்யத்துக்கு முக்கியமான சின்னங்கள் காதுத் தோடும், கழுத்திலுள்ள மங்கள ஸூத்ரப் பதக்கமும்தான். ஆதியில் ரொம்பவும் எளிமையாக நம் பெரியோர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருந்தபோது இந்தக் காதணி, கழுத்தணி இரண்டுமே பனையோலையால் ஆனதாகத்தான் இருந்தன. அதனால் தான் வைரத் தோடானால்கூட அதைப் பிற்காலத்திலும் வைர ஓலை என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. ‘ச்யாமளா நவரத்னமாலை’ யில் அம்பாளையே ‘தாளீ பலாச தாடங்காம்’ என்று சொல்லியிருக்கிறது. அம்பிகையே பனை ஓலையைத்தான் தாடங்கமாகச் சுருட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறாளாம். கழுத்தின் மங்கள ஸூத்ரப் பதக்கமாகவும் அந்த ஓலை நறுக்கே இருந்திருப்பதால்தான் அதற்குத் தாலி என்று பேர் ஏற்பட்டிருக்கிறது.

பிள்ளையாரை விட்டு விஷயம் எங்கேயோ போய்விட்டது!

அத்வைத வேதாந்தம், ந்யாய ஸித்தாந்தம் ஆகியவற்றைப் பற்றிய ‘ந்யாயேந்து சேகர’ த்தில் பிள்ளையாரைப் பற்றி இருப்பதைச் சொல்லவந்தேன்.

‘இன்ன அடிப்படையினால் இது இப்படி நிரூபிக்கப்படுகிறது’ என்று காட்டுவனவாக ந்யாயங்கள் என்று பல உண்டு என்று சொன்னேனல்லவா? ஒரு புஸ்தகம் என்றிருந்தால் அதில் முதலில் ‘மங்கள ச்லோகம்’ என்று இருக்கும். ‘பாயிரம்’, ‘கடவுள் வணக்கம்’ என்றெல்லாம் சொல்வது இதைத்தான். சற்றுமுன் சொன்னாற்போல், இப்படிப்பட்ட மங்கள ச்லோகங்களில் எடுத்த எடுப்பில் உள்ளது பிள்ளையாரைப் பற்றியதாகத்தானிருக்கும். ‘ந்யாய ஸம்பந்தமாக நாம் எழுதுகிற இந்தப் புஸ்தகத்தில் ஆரம்ப ச்லோகமாயிருக்க வேண்டிய பிள்ளையார் ஸ்துதியிலேயே ஏதாவதொரு ந்யாயத்துக்கு எடுத்துக்காட்டு கொடுத்துவிட்டால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும்?’ என்று ராஜு சாஸ்திரிகள் (மன்னார்குடி பெரியவர்கள்) நினைத்தார். மஹா பண்டிதரானதால் நினைத்தபடியே ச்லோகம் பண்ணி விட்டார். பிள்ளையாரை அதுதான் தர்க்க சாஸ்த்ரத்தோடு ஸம்பந்தப்படுத்திவிடுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 'ந்யாயேந்து சேகரம்'
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  'பெரியவா'ளின் பிள்ளையார் ஸ்லோகம்
Next