வைஷ்ணவ ஸித்தாந்தப்படி பார்த்தால் விஷ்ணு என்பவர் த்ரிமூர்த்திகளில் ஒருவராக ஜகத் பரிபாலனம் பண்ணுவதோடு மட்டும் முடிந்துவிடவில்லை. அவர்தான் முழு முதற்கடவுள். பூர்ணசக்தியாக இருக்கப்பட்ட அவருடைய அம்சங்களாக, அவருக்கு அடங்கி நடப்பவர்களாகத்தான் எல்லா தேவர்களும்- முத்தொழில் செய்யும் தேவர்கள் கூடத்தான் – தங்கள் தங்கள் காரியங்களைச் செய்கிறார்கள். ஆனாலும் சைவர்கள், பஞ்சக்ருத்யம், ஐந்தொழில் என்று முத்தொழிலுக்கு மேலே இரண்டைச் சொல்லி ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவதையைச் சொல்வதுபோல வைஷ்ணவர்கள் சொல்லக் காணோம். ஸம்ஹார மூர்த்தியான ருத்ரனுக்கு வேறேயாக திரோதானத்துக்கு மஹேச்வரனென்றும், அநுக்ரஹத்துக்கு ஸதாசிவனென்றும் சைவர்கள் சொல்வதுபோல திரோதான, அநுக்ரஹ மூர்த்திகளாக இருவரை பரிபாலன மூர்த்தியான விஷ்ணுவுக்கு வேறேயாக பேர் கொடுத்து வைஷ்ணவர்கள் சொல்வதில்லை. பரம், வ்யூஹம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி என்று அவர்களும் ஐந்தைச் சொல்லி அவற்றுக்கான அநேக விஷ்ணு மூர்த்திகளைச் சொன்னாலும் அது வேறுவிதமான ‘க்ளாஸிஃபிகேஷ’னாக இருக்கிறது. கவனித்துப் பார்த்தால், பஞ்ச க்ருத்ய ‘ஐடியா’ அதில் அடங்கியிருக்கலாம். ஆனால் அதற்கு முக்யத்வம் கொடுத்து ஸ்பஷ்டமாகச் சொல்வதாகத் தெரியவில்லை. ருத்ரன் என்ற பெயருள்ளவனுக்கு மேலே சிவன் என்கிறதுபோல விஷ்ணு என்று பெயருள்ள பரிபாலன கர்த்தாவுக்குமேலே தனிப்பெயரோடு ஒரு முழுமுதலை அவர்கள் சொல்லவில்லை. நாராயணன் என்ற பெயருக்கு வைஷ்ணவத்தில் உசந்த மதிப்பு உண்டு. அஷ்டாக்ஷரீ என்றும், த்வயம் என்றும் அவர்களுக்கு முக்கியமாக இருக்கப்பட்ட இரண்டு மந்த்ரங்களிலும் நாராயண நாமாதான் இருக்கிறது. ஆனாலுங்கூட ‘நாராயணன்தான் முழு முதற்கடவுள்; விஷ்ணு அவனுக்கு அடங்கிய, அவனுடைய அம்சம்’ என்று பிரித்திருக்கவில்லை. ஸமய ஸம்பிரதாயத்துக்கே விஷ்ணுவின் பெயரை வைத்து “வைஷ்ணவம்” என்றுதானே பெயர் இருக்கிறது? விஷ்ணு ஸஹஸ்ர நாமம்”, “விஷ்ணு புராணம்” என்றெல்லாம் சொல்லும்போது விஷ்ணுவே தான் முழுமுதல் தெய்வமாக இருக்கிறார். [உடனுள்ள வைஷ்ணவரிடம் விசாரணை செய்துவிட்டு] ‘விஷ்ணு’ என்பது வேதத்தை அநுஸரித்து வந்த வைதிகமான பெயரென்றும், ‘நாராயணன்’ என்பது பாஞ்சராத்ரம் என்பதாக வைஷ்ணவர்களுக்கு முக்யமாக இருக்கிற தந்த்ரத்தை அநுசரித்து வந்த தாந்த்ரிகமான பெயரென்றும் இவர் சொல்கிறார். [சிரித்துக்கொண்டே, அவஸரமாக:] நான் சொல்லலை, நான் சொல்லலை – இவர், வைஷ்ணவர், சொல்வதைத்தான் ஒப்பிக்கிறேன்!