குரவே நம: : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

(குருர்-ப்ரஹ்மா) ச்லோகத்துக்குப் போகலாம். அதில் முதலில் குருவை ப்ரஹ்மா என்றும், அப்புறம் விஷ்ணு என்றும் சொல்லி மூன்றாவதாக மஹேச்வரன் என்று சொல்லி முத்தொழில் புரியும் மூன்று மூர்த்திகளாகக் காட்டி விட்டு, முடிவாக அவரே முழு முதல் தெய்வமான ‘ஸாக்ஷாத் பர ப்ரஹ்மம் என்று சொல்லியிருக்கிறது. ஐந்தொழில் என்பது சைவர்களும் சாக்தர்களும் மட்டுந்தான் சொல்வது. பொதுவாக உலகத்தில் சொல்கிறபடி, (ச்லோகத்திலும்) முத்தொழிலைச் சொல்லி, அவற்றுக்குரிய மூர்த்திகளைச் சொல்லி, அப்புறம் மூலப்பரம்பொருளைச் சொல்லி, குருதான் இந்த மூர்த்திகள் யாவரும்; அவருக்கு நமஸ்காரம் – “தஸ்மை ஸ்ரீ குரவே நம:” என்று முடித்திருக்கிறது. “குருமூர்த்தியாக உள்ள அவருக்கு – ‘தஸ்மை’ என்றால் ‘அவருக்கு’ – நமஸ்காரம்”.

அத்வைத சாஸ்த்ரங்கள் அத்தனையையும் பிழிந்து ஸாரமாகத் தருவதுபோல ஆசார்யாள் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் ஒன்று செய்திருக்கிறார். “தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்” என்று சொல்வார்கள். அஷ்டகம் என்றால் எட்டு ச்லோகம் கொண்ட ஸ்தோத்ரம். ஆனாலும் இதில் எட்டுக்குப் பிறகும் சில ச்லோகங்கள் இருக்கின்றன. (நூற்பயனைச் சொல்லும்) பலச்ருதியாக ஒரு ச்லோகம் மாத்திரமில்லாமல் மேலும் நாலைந்து ச்லோகங்கள் இருக்கின்றன. எல்லாமே ரொம்ப அர்த்த புஷ்டியும் அழகும் கொண்டவை. ‘குருர் – ப்ரஹ்மா’ ச்லோகத்தில் ‘தஸ்மை ஸ்ரீ குரவே நம:’ என்று முடித்திருப்பது போலவே, ஆசார்யாளும் அந்த ஸ்தோத்ரத்தில் (முதல் ஒன்பது ச்லோகங்களில்) ஒவ்வொரு ச்லோகத்தையும்

தஸ்மை ஸ்ரீ குரு மூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தயே என்று முடித்திருக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is வைஷ்ணவத்தில்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  எதற்காக நமஸ்காரம்?
Next