வித்யாஸமான முத்தொழில்கள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

நிஜமான தாத்பர்யம் என்ன?

குருவானவர் ப்ரஹ்ம – விஷ்ணு – மஹேச்வரர்கள் செய்யும் ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரத்தையே தாமும் அச்சடித்தமாதிரி செய்யவில்லை. இந்த ஜன்மாவைக் கொடுப்பது, லோக வாழ்க்கையில் காப்பாற்றுவது, அப்புறம் அதை முடித்து வைப்பது என்ற கார்யங்களை அவர் பண்ணவில்லை. அவற்றைச் செய்யத்தான் அந்த மும்மூர்த்திகள் இருக்கிறார்களே!

அதனால் அவரை மும்மூர்த்திகளாகச் சொல்லும்போது அவர்கள் பண்ணும் முத்தொழிலைப் போலவே இவரும் என்னவோ செய்கிறாரென்றுதான் தாத்பர்யமே தவிர, அவற்றையே என்றல்ல.

இவர் மூன்று கார்யங்கள் செய்கிறார். அவை த்ரிமூர்த்திகள் செய்யும் முத்தொழில் மாதிரியே இருக்கின்றன. அதனால் இவரை அவர்களாகவே சொல்லியிருக்கிறது. உபமாலங்காரமாக, அதாவது, உவமையணியாக, சொல்லியிருக்கிறது.

‘கண்ணே, மணியே!’ என்று குழந்தையைச் சொன்னால் அது நிஜமாகவே கண், மணி என்றா அர்த்தம்? கண் என்பது எப்படி நமக்கு இன்றியமையாததாக இருக்கிறதோ, மிகவும் ப்ரியமான அங்கமாக இருக்கிறதோ, ஜாக்ரதையாக இமையால் மூடிக் காப்பாற்ற வேண்டியதாக இருக்கிறதோ அப்படியே, நமக்குக் குழந்தை இன்றியமையாததாக, ப்ரியமாக, கவனமாக ஸவரக்ஷணை பண்ண வேண்டியதாயிருப்பதாலேயே கண் என்றும், அந்தக் கண்ணிலும் கருவான பாகமாக இருக்கப்பட்ட மணி என்றும் (‘கண்ணே, கருமணியே!’ என்றுகூடச் சொல்வதுண்டு) சீராட்டுவது. ‘மணி’ என்றால் நமக்கு மிகவும் அலங்காரமாக உள்ள நவரத்ன மணி என்றும் வைத்துக்கொள்ளலாம். ‘முத்தே, மாணிக்கமே!’ என்றுகூட நவமணிகளின் பெயரிலும் சீராட்டிச் சொல்லுகிறோமே!

“மழபாடியுள் மாணிக்கமே!”

என்று பகவானையே கொஞ்சுகிறார்கள்.

இதெல்லாம் உவமித்துச் சொல்வது. ஒரு வஸ்துவை எடுத்துக் கொள்கிறோம். அது உபமேயம். அதற்கு இன்னொன்றை ஒப்புக் காட்டுகிறோம். இது உபமானம். ஏதோ சில அம்சங்களில் அதுவும் இதுவும் ஒன்றாயிருக்கிறது. அதனால் உபமேயத்துக்கு உபமானம் காட்டுகிறோம். சில அம்சங்களில்தான் ஒப்பே தவிர முழுக்க அல்ல. அப்போது (முழுக்க ஒப்பிருந்தால்) உபமான, உபமேயம் என்று பிரித்துச் சொல்வதற்கேயில்லாமல் ஒன்றாக அல்லவா ஆகிவிடும்? ஒன்றைப் போல இன்றொன்று இருப்பதுதான் உவமை. அசல் அதுவாகவே இருந்துவிட்டால் உபமாலங்காரம் பிறக்க முடியாது. சந்திரனைச் சந்திரனுக்கே உவமை காட்ட முடியுமா? உபமான – உபமேயங்கள் முற்றிலும் ஒன்றே இல்லை என்றாலும் அவற்றுக்குள் சில அம்சங்களில் ஒற்றுமை இருக்கும். இப்படிச் சொல்லும்போதே, சிலதில் இருக்காது என்றும் ஆகிவிடுகிறது. ‘சந்த்ரவதனம்’ – சந்த்ரனைப் போன்ற முகம் – என்னும்போது முகத்தில் ‘சந்திரனைப் போன்ற காந்தி, பரிசுத்தம், குளுகுளுப்பு, மனஸைக் கவர்கிற வசீகரம் ஆகியவை இருப்பதாக அர்த்தம். இந்த அம்சங்களில்தான் ஒற்றுமை. மற்றதில் இல்லை. சந்திரனுக்கு மநுஷ முகத்திள்ளதுபோல கண், காது, மூக்கு இல்லை. முகம் ஆகாசத்தில் மிதப்பதில்லை; அது பதினைந்து நாளுக்கு ஒரு முறை தேய்வது, வளர்வது என்பதும் கிடையாது.

இம்மாதிரிதான் குருவை த்ரிமூர்த்திகளாகச் சொல்லும் போது ஏதோ சிலவற்றில் ஒற்றுமை, மற்றதில் வேற்றுமை என்று இருக்க வேண்டும்.

இன்னொரு ச்லோகம், நம் மத ஸ்ம்ப்ரதாயங்கள் எல்லாவற்றுக்கும் மூல புருஷராகவுள்ள வ்யாஸாசார்யாளை பற்றியது, ஞாபகம் வருகிறது. அதிலே வ்யாஸருக்கும் த்ரிமூர்த்திகளுக்கும் ஒற்றுமை இல்லாத ஒவ்வொரு அம்சத்தைச் சொல்லியே வேடிக்கை செய்திருக்கிறது. “இவர் ப்ரஹ்மா என்றால் நாலு மூஞ்சி இல்லையே! அசதுர்வதநோ ப்ரஹ்மா! விஷ்ணு என்றால் இரண்டு கைதானே இருக்கு? நாலு இல்லையே! த்விபாஹுரபரோ ஹரி:! சிவன் என்றால் நெற்றிக்கண் எங்கே போச்சு? அபால லோசந: சம்பு:‘ என்று அந்த ச்லோகம்.

அசதுர்வதநோ ப்ரஹ்மா

த்விபாஹுரபரோ ஹரி:

அபால லோசந: சம்பு:

பகவாந் பாதராயண:

பாதராயணர் என்பது வேத வ்யாஸரின் இன்னொரு பேர். ‘பதரி’ என்ற இலந்தை மரத்தடியை இருப்பிடமாக (‘அயன’மாக) க் கொண்டு, அதாவது பதரி விருக்ஷத்திற்கு அடியில் உட்கார்ந்துகொண்டு நெடுங்காலம் தபஸ் செய்தவராதலால் ‘பாதராயணர்’ என்று பெயர்.

ப்ரஹ்ம – விஷ்ணு – மஹேச்வரர்களாக குருவை உபமாலங்காரத்தில் சொல்லியிருக்கிறதென்றால் அவர்களுக்கும் குருவுக்கும் ஒற்றுமையும் இருக்க வேண்டும், வேற்றுமையும் இருக்க வேண்டும்.

முத்தொழில் செய்பவர்களென்பதால் அவர்களை நாம் நமஸ்காரம் பண்ணுவதற்கில்லை என்று பார்த்தோமல்லவா? அந்த அம்சத்தில் வேற்றுமை இருந்துவிட்டால் ஸரியாய்ப் போய்விடும். ச்லோகம் கோளாறில்லை. தாறுமாறாகச் சொல்லவில்லை என்றாகிவிடும்.

அப்படியிருக்கிறதா, பார்க்கலாம்.

மும்மூர்த்திகள் பேரை வரிசையாக (ச்லோகத்தில்) சொல்லியிருப்பதால் இவரும் முத்தொழில் போலவே செய்கிறாரென்று தெரிகிறது. அதையே செய்யவில்லை. அதுபோல (செய்கிறார்).

ஏதோ ஒரு விதத்தில் இவர் ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரம் செய்பவராக இருக்கிறார். எந்த விதத்தில்?

யோசித்துப் பார்த்தால் புரிகிறது:

இவர் நமக்கு ஞான லோகத்தில், அத்யாத்ம லோகத்தில் புதுப் பிறவி கொடுக்கிறார். நமக்கு அறிவுக் கண்ணைத் திறந்து வைத்து, நம்முடைய மனப்பான்மையை மாற்றி அது வேறொன்றாக ரூபம் கொள்ளும்படிச் செய்கிறார். மாற்றுவது, வேறு ரூபம் தருவது என்றால் ஸ்ருஷ்டிப்பது, புது ஜன்மா தருவது என்றுதான் அர்த்தம். குருவானவர் நமக்கு ஞானப் பிறவி தருவதால், நமக்குள் ஞானம் பிறக்கும்படிச் செய்வதால், ஸ்ருஷ்டிகர்த்தாவான ப்ரஹ்மாவாகிறார்!

அப்புறம் ஸ்திதி – பரிபாலனம். எப்படிப் பரிபாலிக்கிறார்? ஞான வாழ்க்கையில் நாம் அத்யாத்ம ஸம்பத்துக்களைப் பெறும்படிச் செய்து பரிபாலிக்கிறார். தேஹ போஷணைக்காக மஹாவிஷ்ணு செல்வம், ஆரோக்யம் முதலானவற்றை கொடுத்து ரக்ஷிப்பதுபோல ஆத்மாவின் போஷணைக்காக உபதேசம், புஸ்தகங்கள், ஸாதனாமார்க்கம் முதலானவற்றைக் கொடுத்து ரக்ஷிக்கிறார். தம்முடைய வாழ்க்கையையே நம் பொருட்டாக த்யாகம் செய்துவிட்டு – நிம்மதியாகத் தாம்பாட்டுக்கு ஸமாதி நிலையில் ஸுகித்துக் கொண்டிருக்காமல், நம்மிடம் முட்டிக்கொண்டு – நம்மைக் கரையேற்றத் தம்மாலானதெல்லாம் செய்கிறார். இஹ லோகத்திலுங்கூட நம்முடைய கஷ்டங்களைத் தீர்த்து வைத்துப் பரிபாலிக்கிறார். ஸெளகிகத்திலும்கூட நாம் எப்படியெப்படி இருந்தால் நல்லதோ, ஆத்மாபிவ்ருத்திக்கு உதவியாக இருக்குமோ அப்படி இருப்பதற்குச் சொல்லிக் கொடுக்கிறார். ஆனாலும் ஆத்யாத்மிகமான ஞானப் பரிபாலிப்பே அவர் முக்யமாகச் செய்வது. இதனால் பரிபாலன கர்த்தாவான விஷ்ணுவாக இருக்கிறார்

ஸம்ஹாரம்?

இவர் பரம ஸாத்விகரல்லவா? எப்படி ஸம்ஹாரம் பண்ணுவார்? ருத்ரன், ருத்ரதாண்டவம், ரௌத்ராகாரம் என்றாலே பயமாக அல்லவா இருக்கிறது? இவரோ தயை, அருள் நிரம்பியவரல்லவா? ருத்ரனாக இவரை எப்படிச் சொல்வது? அந்தப் பேரைச் சொல்லி பயமுறுத்த வேண்டாமென்றுதானோ என்னவோ, (ச்லோகத்தில்) ‘ருத்ர’னென்று சொல்லாமல் “குருர் தேவோ மஹேச்வர:” என்று சொல்லியிருந்தாலும் அதனால் குறிப்பிடும் கார்யம் ஸம்ஹாரமாகத் தான் இருக்க வேண்டும். ஸ்ருஷ்டி – ஸ்திதிகளுக்கான ப்ரஹ்ம – விஷ்ணுக்களைச் சொன்னதன் தொடர்ச்சியாக மஹேச்வரனைச் சொல்லியிருப்பதால் வேறுவிதத்தில் அர்த்தம் பண்ணிக்கொள்ள முடியாது.

“உபமாலங்காரத்தில் ஒற்றுமை இல்லாத அம்சங்களும் இருக்கும் என்றீர்களே, அந்த ரீதியில் மஹேச்வரனுக்கும் குருவுக்கும் ஸம்ஹார கார்ய்த்தில் ஒற்றுமையில்லாமல், வேறு எதிலேயாவது இருக்குமோ என்னவோ?” என்று கேட்டீர்களானால்,….

அப்படி இருக்க முடியாது.

தொடர்ச்சியாக ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரன் என்று சொல்லிக்கொண்டு போகும்போது முதலிரண்டு பேர் செய்யும் ஸ்ருஷ்டி- ஸ்திதிகளை குரு இன்னொரு தினுஸில் பண்ணுவதாகக் காட்டுகிறபோது மூன்றாவதாக ஸம்ஹாரம் தான் வரவேண்டும். அதுதான் யுக்தம்.

அப்படியானால் ப்ரஹ்மாவாக இருந்து நமக்கு ஞானம் பிறக்கச் செய்து, அந்த ஞானத்தை விஷ்ணுவாக இருந்து வளர்த்துக் கொடுத்துவிட்டு, அப்புறம் (சிரித்துக்கொண்டே) அந்த ஞானத்தை ருத்ரனாக ஹதம் பண்ணிவிடுவாரா?

இல்லை. ஞானம் அடைய முடியாதபடி நம்மை அநேகக் கெட்ட சக்திகள் ஓயாமல் இழுக்கின்றனவே, இதுகளுடன்தான் பொறுமையாகப் போராடி ஹதம் பண்ணுகிறார், ஸம்ஹாரம் பண்ணுகிறார். பயிரை வளர்ப்பதைப்போலவே, அந்தப் பயிர் வளர்வதற்காகவே, களையை அகற்றவேண்டியது மிகவும் அவசியமல்லவா? அப்படித்தான் நமக்கு ஞானத்தை போதிப்பதைப்போல நம்முடைய கனத்த அஞ்ஞானத்தை அகற்றுவதும் முக்யம். ஞானபோதனையைவிட இதுதான் கடினமான கார்யம். சாண் ஏறினால் முழம் சறுக்குகிற வழுக்கு மரத்தில் நம்மை இஞ்ச், இஞ்சாக மேலே ஏற்றிக்கொண்டு போகிற ச்ரம ஸாத்யமான காரியம். கெட்டதுதான் நம்மை அப்படியே கவிந்து மூடிக்கொண்டிருக்கிறது. ஏதோ துளி நல்லது முணுக்கு முணுக்கு என்று தலைநீட்ட ஆரம்பித்தால் உடனே கெட்டது இன்னம் கனாந்தகாரமாக வந்து அழுத்தி அதை அணைக்கப் பார்க்கிறது. இந்த அஞ்ஞான தமஸை, அறியாமை இருளைத்தான் குருவானவர் ருத்ரமூர்த்தியாக இருந்து ஸம்ஹாரம் செய்கிறார். ‘குரு’ என்ற வார்த்தையின் Definition (லக்ஷணை) ஒன்றே அப்படித்தான் சொல்கிறது ‘கு’ என்றால் இருட்டு; ‘ரு’ என்பது அழிப்பதைக் குறிப்பது. இருட்டை அழிப்பவன் ‘குரு’.

இப்படி குருவினால் ஞானத்தில் புனர்ஜன்மம், அதில் பரிபாலிப்பு, அதற்கு எதிராக, தடையாக இருப்பவற்றின் அழிவு ஆகிய மூன்று கார்யங்கள் நடக்கின்றன. அதாவது ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரம் நடக்கிறது. ஆகையால் குருமூர்த்தியே த்ரிமூர்த்தியாகிறார்!

வித்யாஸம் என்னவென்றால், ப்ரஹ்மா ஸ்ருஷ்டித்து, விஷ்ணு ரக்ஷிக்கும் அதே சரீரத்தைத்தான் ருத்ரன் ஸம்ஹாரம் செய்வது. ஆனால் இங்கேயோ குரு ஸ்ருஷ்டிப்பதும், ரக்ஷித்துக் கொடுப்பதும், ஞானத்தை. ஆனால் அழிப்பது ஞானத்தையல்ல. அரும்பாடு பட்டு அவரே படைத்துக் காத்ததை எங்கேயாவது அவரே அழிப்பாரா? த்ரிமூர்த்திகளில் ஆஸாமி வேறாகப் போனதால் வேறே ஒருத்தர் படைத்து, வேறே ஒருத்தர் காப்பாற்றியதை ருத்ரமூர்த்தி அழிக்கிறார். இங்கே மூன்றையும் செய்வது ஒரே ஆஸாமியல்லவா? அதனால் படைத்துக் காப்பது ஞானமாகவும், அழிப்பது அஞ்ஞானமாகவும் இருக்கிறது.

அவர் படைத்துக் காக்கிற ஞானம் நம் சரீரம் மாதிரி ஒருகாலத்தில் அழிவுபடுவதல்ல. அது அம்ருதமானது, அமரமானது. அதை யாராலும் அழிக்கமுடியாது.

இப்படியாக, உலக வாழ்வில் ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன் என்று மூன்று தெய்வங்கள் செய்வதையும் சேர்த்து வைத்து ஞான வாழ்வில் குரு ஒருவரே செய்கிறார். நினைத்துப் பார்த்தால் விசித்ரமாயிருக்கிறது! அழிவதும், சாச்வத ஸெளக்யத்தைத் தரவே முடியாததுமான லோக வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் பெரிசாக மூன்று தெய்வங்கள் வேண்டியிருக்கிறது! அழிவற்றதும், சாச்வத ஸுகமளிப்பதுமான ஞான வாழ்க்கையையோ மநுஷ்ய ரூபத்தில் தெரிகிற ஒரு குரு பண்ணிவிடுகிறார்! ‘அவர்கள் (த்ரிமூர்த்திகள்) கோடாநுகோடி ஜீவன்களுக்குச் செய்ய வேண்டியிருக்கிறது, இவரோ (குருவோ) ஒரு ஸெலக்ட் – க்ரூப்புக்குத்தானே செய்கிறார்?’ என்று ஸமாதானம் சொல்லலாம்.

ஆக, குரு எப்படி த்ரிமூர்த்திகளாயிருக்கிறாரென்று பார்த்தோம். த்ரிமூர்த்திகளும் சேர்ந்து ஒருத்தரான ஒரு ஸ்வாமி தத்தாத்ரேயர் என்று பார்த்தோமே, அவர் மாதிரி தான் எல்லா குருக்களுமே இருக்கிறார்கள்!

த்ரிமூர்த்திகள் சரீரத்தை ஸ்ருஷ்டித்து, பரிபாலித்து, ஸம்ஹரிப்பது போல சிஷ்யனுக்குள் ஞானத்தை ஸ்ருஷ்டித்து, பரிபாலித்து, அஞ்ஞானத்தை ஸம்ஹரிப்பதனால் உபமாலங்காரப்படி, ஒற்றுமை யம்சத்தைக்கொண்டு குருவை ப்ரஹ்மா, விஷ்ணு, மஹேச்வரன் என்று சொல்லியிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is நமஸ்கரிப்பதற்குக் காரணமில்லை!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  நமஸ்காரத்திற்கு உரியவராக
Next