ஸம்ஸார ஸாகரத்தைத் தாமும் தாண்டி பிறரையும் தாண்டுவிக்கிறவர்தான் குரு என்பதே லக்ஷணம் ( definition ). தாமே ஸாகரத்தில் முழுகுகிறவரானால் இன்னொருத்தரை எப்படி அக்கரை சேர்க்கமுடியும்?
தான் கரையேறாமலே “அத்வைதா” என்று பெரிசாக லெக்சர் பண்ணிப் புஸ்தகம் போடுகிறவர் ப்ரொஃபஸர், டாக்டர் பட்டம் வாங்குகிறவரேயன்றி குரு இல்லை.
தான் கரை சேர்ந்துவிட்டு அப்படியே ஆத்மாராமராக ஒதுங்கியிருந்து விடுபவர் – அவரும், மஹான், ப்ரஹ்ம ஞானி என்று எந்தப் பெயர் வாங்கினாலும் குரு இல்லை. (இதனால் அவரைக் குறைவுபடுத்திச் சொல்வதாக அர்த்தம் இல்லை. யதார்த்தத்தைச் சொன்னேன்.)
தானும் கரை சேர்ந்து, பிறரையும் சேர்ப்பிக்கிற ப்ரஹ்ம ஞானிதான் குரு.
கரை சேர்வது, ஸம்ஸார ஸாகரத்தைக் தாண்டுவது என்பது ப்ரஹ்ம ஞான ஸித்தி தவிர வேறெதுவுமில்லை.
ஆசார்யாள் குறிப்பாக இதைத்தான் குருவின் லக்ஷணமாகச் சொல்வார்: தானும் கரையேறி, பிறரையும் ஏற்றுவது.