ஆசார்யாள் அளிக்கும் ஆசார்ய லக்ஷணம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

“விவேக சூடாமணி” யில் ஆசார்யாளைப் பற்றி வர்ணிக்கும்போது ‘ஆசார்யாள்’ என்றாலே இவர்தான் என்றாகிவிட்ட நம்முடைய பகவத் பாதாள்,

தீர்ணா: ஸ்வயம் பீம – பவார்ணவம் ஜநாந்
அஹேதுநா – (அ) ந்யாநபி தாரயந்த:

என்கிறார். (குரு) ஸ்வயமாக இந்த பயங்கரமான ஸம்ஸார ஸாகரத்தைத் தாண்டியவராயிருக்க வேண்டும். ‘பீம பவார்ணவம்’ என்றால் பயங்கரமான ஸம்ஸார ஸாகரம். குருவாக இருப்பவர்கள் அதை, ‘தீர்ணா:’ – தாண்டியிருப்பவர்கள். இப்படி இருந்து கொண்டு, ‘அந்யாந் அபி’ – மற்றவர்களையும், ‘தாரயந்த:’ – தாண்டுவிப்பவர்களாக… இருக்கிறார்கள். ‘இருக்கிறார்கள்’ என்று (ஆசார்யாள்) மொட்டையாகச் சொல்லி நிறுத்தியிருக்கவில்லை. குருமார்கள் என்ன மாதிரி இதைச் செய்கிறார்களென்பதை ச்லோகத்தின் முன் பாதியில் ரொம்பவும் அழகாகச் சொல்லியிருக்கிறார். நான் சொன்னது பின் பாதி. முன் பாதி:

சாந்தா மஹாந்தோ நிவஸந்தி ஸந்தோ
வஸந்தவல் – லோகஹிதம் சரந்த:

சொல்லழகோடு பொருளழகும் கூடிய வாக்கு. குருவுக்கு அநேக அடைமொழிகள் கொடுத்திருக்கிறார். ‘சாந்தா:” – பரம சாந்தர்கள்; ‘மஹாந்த:’ – மஹான்களாக இருப்பவர்கள்; ‘ஸந்த:’ – ஸாதுக்கள். அப்புறம் வருகிறதுதான் ரொம்பவும் அழகானது; ஆசாரியாளின் பக்குவமான கவியுள்ளத்தைக் காட்டுவது. ‘வஸந்த வல்லோகஹிதம் சரந்த:’ – ‘வஸந்த வத்’: வஸந்த காலத்தைப் போல; ‘லோகஹிதம்’: உலக நலனை; ‘சரந்த:’ : ஆற்றுகிறவர்கள்.

வஸந்த காலம் வந்ததென்றால் லோகமெல்லாம் பச்சுப் பச்சென்றாகி விடுகிறது. அதுவரைக்கும் பனியில் உலகம் நடுங்கிக்கொண்டிருந்தது. இலையுதிர் காலம் என்று மரத்தையெல்லாம் வழித்துவிட்டு, பார்த்தாலே என்னவோ மாதிரி இருந்தது. வஸந்த காலம் வந்ததோ இல்லையோ கிளு கிளு கிளு என்று எங்கே பார்த்தாலும் துளிர்விட்டு விடுகிறது. நடுக்கும் குளிர் போய், கொளுத்தும் வெய்யிலாகவுமில்லாமல் சீதோஷ்ணம் ஹிதமாக ஆகிறது. ஒரே மல்லிப் பூவும், மாம்பழமுமாக வாஸனை தூக்குகிறது.

ஆனாலும் வஸந்தம் என்று ஒன்று கண்ணுக்குத் தெரிகிறதோ? இல்லை. தன்னை அடையாளங்கூடக் காட்டிக் கொள்ளாமல், அப்படியொரு அஹங்கார லேசமேயில்லாமல், இத்தனை நல்லதைப் பண்ணி விடுகிறது!

குருவும் இப்படித்தான். அஹங்கார லேசமும் இல்லாதவர். ஆனால் அடையாளம் காட்டிக்கொள்கிறாரே என்றால், அதுவும் நம்முடைய நிமித்தமாகத்தான். நமக்கு ஈச்வரனை அடையாளம் தெரியவில்லையே என்று தவித்துக் கொண்டிருக்கும்போது அவனே நம் பொருட்டுத் தன்னுடைய அடையாளமாக அனுப்பி வைப்பவர்தான் குரு என்பவராயிருக்க, அவர் அடையாளம் காட்டிக் கொள்கிறாரே என்று கேட்டால் அர்த்தமில்லை. ஆனால் ‘நானாக்கும் பண்ணுகிறேன்’ என்று பெருமைப்படுவதற்காக அவர் தம்மைத் தெரிவித்துக்கொள்ளவில்லை. நமக்கு அடையாளம் தேவை என்பதற்காகவே காட்டுகிறார். அவர் வாஸ்தவத்தில் அடையாளமில்லாத ப்ரஹ்மவஸ்து. ‘நிர்லிங்கம்’ என்பார்கள், அது. ‘லிங்கம்’ என்றால் அடையாளம்.

குருதான் இப்படிப் பண்ணுகிறாரென்று அடையாளம் தெரியாமலேயும் அநேக நல்லதுகள் நமக்கு அவை பாட்டுக்கு நடக்கிறாற்போலவே நடப்பதுண்டு. சட்டென்று ஒருநாள், ‘இது எப்படி நடந்தது? இதனாலா? அதனாலா? அப்படித்தான் தோன்றிற்று. ஆனால் இது, அது எல்லாம் எப்படி இவ்வளவு சீராகச் சேர்ந்து நமக்கு ஸாதகமாகக் கார்யத்தை நடத்தித் கொடுத்தது? அதெல்லாமில்லை. குரு க்ருபைதான் ஸூக்ஷ்மமாக இப்படி எல்லாவற்றையும் சேர்த்து வைத்திருக்கிறது’ என்று மனஸுக்குப் பளிச்சென்று தெரியும்.

வஸந்தத்துக்கும் குருவுக்கும் இவை எல்லாவற்றையும் விடச் சிறப்பான ஒற்றுமையை, – (ஆசார்யாளின்) ச்லோகத்தில் சொல்லியிருப்பதை – இதுவரை நான் சொல்லவில்லை. அது சின்ன வார்த்தை, நாலு எழுத்தில், போட்டு அதை ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்.

‘அஹேதுநா’ என்பதுதான் அந்த வார்த்தை. “தீர்ணா ஸ்வயம் பீம பவார்ணம் ஜநாந் அஹேதுநா- (அ) ந்யாநபி தாரயந்த:” என்று போட்டிருக்கிறார்.

‘அஹேதுநா’ என்றால், ‘காரணமில்லாமல்’. காரணமே இல்லாமல் வஸந்த காலத்தைப்போல் குரு அருள் பண்ணிக்கொண்டு லோகத்தில் இருந்து வருகிறார். ‘நிவஸந்தி’ – இருக்கிறார்கள், வஸித்து வருகிறார்கள். ஆசார்ய புருஷர்கள் சாந்தர்களாக, மஹான்களாக, ஸாதுக்களாக, பயங்கரமான பவஸாகரத்தைத் தாண்டியவர்களாக, தாங்கள் தாண்டியதோடு பிறரையும் தாண்டுவிப்பவர்களாக, வஸந்த காலத்தைப் போல் ஒரு காரணமும் இல்லாமல் (‘அஹேதுநா’) உலக நலனைச் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று ச்லோகம் சொல்கிறது.

இப்படி அவர்கள் அநுக்ரஹிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. எதற்காக அநுக்ரஹக்கிணும்? ராப் பகல் உபதேசம் பண்ணணும்? ஊர் ஜனங்களைக் கட்டிக்கொண்டு மாரடிக்கணும்? ஊர் ஊராகச் சுற்றணும்? நமக்கு இப்படி ஒரு அநுக்ரஹம் பெற என்ன யோக்யதை? இல்லாவிட்டால் நம்மகிட்டே ஏதாவது அவர் கடன்பட்டிருக்கிறாரா, அநுக்ரஹம் பண்ணியாகணுமென்று? இதெல்லாம் போக, அவருக்கு இதனாலே ஏதாவது லாபமுண்டா? லாபமில்லாததோடு இல்லை. ஆத்மாராமராக விச்ராந்தியாக உட்கார்ந்திருக்கக் கூடியவர் நம்முடைய உழப்பறிசல்களை அல்லவா இழுத்துப்போட்டுக் கொண்டிருக்கிறார்?

ஆக, நம்முடைய angle – லிலிருந்து பார்த்தாலும் ஸரி, அவருடைய angle – லிலிருந்து பார்த்தாலும் ஸரி, இப்படி குரு என்று ஒருவர் ஸதா ஸர்வதா அநுக்ரஹம் பண்ணிக் கொண்டிருப்பதற்குக் காரணமேயில்லை. “அஹேதுநா” தான் அவர் இப்படிச் செய்கிறார்.

நம்மை கடைத்தேற்றி அவருக்கு ஒன்றுமே ஆக வேண்டியதில்லை. நமக்கு அந்த யோக்யதை இல்லவேயில்லை. ஆனால் யோக்யதையையும் உண்டாக்கி அப்புறம் கடைத்தேற்றியும் தீர்வது என்று அவர் அசராமல் பாடுபடுகிறார்.

‘வஸந்தவத்’ (வஸந்தத்தைப் போல) என்று போட்டதன் அழகு, பொருத்தம் இந்த ‘அஹேதுநா’ வில் தான் விளக்கம் பெறுகிறது.

பனியில் ஜனங்களெல்லாம் நடுங்கிக்கொண்டு, பயிர் பச்சை எல்லாம் கருகிக்கொண்டிருந்த ஸமயத்தில் லோகத்தையே தளிரும் இலையும் பூவும் பழமுமாக நானா வர்ணாலங்காரம் செய்து, பரம ஹிதமான சீதோஷணத்தைக் கொடுத்துக்கொண்டு வஸந்தம், வஸந்தம் என்று ஒன்று வருகிறதே, அதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? ஒரு காரணமும் தெரியவில்லை. “அஹேதுநா”.

நம்மால் வஸந்தத்துக்கு ஏதாவது ப்ரதி ப்ரயோஜனம் உண்டோ? அப்படியே நாம் அதற்கு ஏதோ செய்ய முடியுமானால்கூட, அது தன்னை அடையாளமே காட்டிக்கொள்ளாமல் அல்லவா நல்லது பண்ணிக் கொண்டிருக்கிறது? ஆகையால் அதை நாம் எப்படிப் பிடித்து நாம் செய்யக்கூடிய ப்ரதியைச் செய்வது?

குரு அடையாளம் காட்டிக்கொள்கிறார் என்று சொல்லி, அதற்குக் காரணம் பார்த்தோம். அதே மாதிரி இங்கேயும், ‘வஸந்தத்துக்கு நாம் எதுவுமே (ப்ரதி) செய்யாத மாதிரி, செய்யமுடியாத மாதிரி குரு விஷயத்தில் இல்லையே! நம்மாலான சிறு சுச்ரூஷை, சின்னத் தொண்டு செய்யத் தானே செய்கிறோம்? த்ரவ்ய ரூபத்தில்கூடக் காணிக்கை கொடுக்கிறோமே? குரு சுச்ரூஷை, குரு தக்ஷிணை ரொம்பவும் முக்யமென்று சாஸ்த்ரத்திலும் நிறையச் சொல்லியிருக்கிறதே!’ என்று கேட்கலாம். அவர் அடையாளம் காட்டிக் கொள்வதற்குச் சொன்ன காரணத்தைத்தான் இங்கேயும் மறுபடி சொல்லவேண்டியிருக்கிறது. அதாவது, நம் பொருட்டாகத்தான் அவர் சுச்ரூஷை, தக்ஷிணை ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது. இதனாலே நமக்கு ஏற்படும் த்ருப்தி, நமக்குக் கிடைக்கும் புண்யபலன் ஆகியவற்றை உத்தேசித்துத்தான் அவர் இவற்றை ஏற்றுக்கொள்கிறாரேயன்றி, அவராக இவற்றை ப்ரதியாக எதிர்பார்த்தோ, இவற்றை நாம் செய்யவேண்டும் என்பதற்காகவோ நமக்கு உபதேசம் முதலிய அநுக்ரஹங்களைச் செய்யவில்லை.

காரணமின்றி வஸந்தம் லோகஹிதம் செய்வதுபோல குருவும் செய்கிறார்.

தன்னையறியாமல் ஒரு கருணை அவரிடம் சுரக்கிறது. ஈச்வரன் அப்படி அவரை சுரப்பிக்கச் செய்திருக்கிறான். அதனால் ‘லோகம் நன்றாயிருக்கட்டும்’ என்ற எண்ணம் அவருக்கு ஸதா காலமும் மனப்பூர்வமாக ஏற்பட்டு, ஹிதத்தைச் செய்து கொண்டிருக்கிறார். இதிலே முடிவாக அவர் செய்வது, ‘பீம பவார்ணவம் ஜநாந்…தாரயந்த:’ என்றபடி மக்களை பவக்கடலிலிருந்து கடத்துவிப்பது. அதை இவரால் எப்படிச் செய்யமுடிகிறதென்றால் இவர் தம்மளவில் அப்படிக் கடந்தவர், அதனால்தான். ‘ஸ்வயம் தீர்ண:’ தாம் கடந்தவர், அந்த பலத்தினாலேயே ‘அந்யான்’ – பிறரை, ‘தாரயந்த’ – கடத்துவிப்பவர்.

‘உபதேச ஸாஹஸ்ரீ’ என்பதாக ஆயிரம் உபதேச மொழிகள் கொண்ட ஒரு நூல் ஆசார்யாள் அநுக்ரஹித்திருக்கிறார்…ஆசார்யாள் என்றால் உடனே நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ‘பஜ கோவிந்தம்’ என்று நினைத்துக் கொள்வார்கள். அடுத்தபடியாக ‘ஸெளந்தர்ய லஹரி’ ப்ரஸித்தமாயிருக்கிறது. ‘விவேக சூடாமணி’ என்ற பேர் காதில் விழுந்தால் நூற்றிலே ஐம்பது பேர் ஆசார்யாளை நினைத்துக் கொள்ளலாம். (நூற்றில்) பத்து பேருக்குத்தான் ‘உபதேச ஸாஹஸ்ரீ’ பற்றி தெரிந்திருக்கக்கூடும். அது உயர்ந்த தத்வங்களையும் அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவருவது எப்படி என்பதையும் சொல்கிற நூல். அதில் முன்பாகம் ப்ரோஸ், பின்பாகம் பொயட்ரி. இந்தப் புஸ்தகத்திலும் ஆரம்பத்திலேயே ஆசார்யாள் இதே கடைத்தேற்றும் விஷயத்தை குருவின் காரியமாகச் சொல்லியிருக்கிறார்:

வித்யாஸந்ததிச்ச ப்ராண்யநுக்ரஹாய பவதி நௌரிவ நதீம் திதீர்ஷோ:

ஸம்ப்ரதாய வித்யையைப் பரம்பரை க்ரமத்தில் உபதேசிப்பதானது ஆற்றைக் கடக்க விரும்புகிறவனுக்குப் படகு உதவுகிற மாதிரி ஜீவ ஸமூஹத்துக்கு உதவுகிறது. அநுக்ரஹிக்கிறது என்று அர்த்தம்.

‘நதீம் திதீர்ஷோ:’ – நதியைக் கடக்க விரும்புபவனுக்கு: ‘நௌரிவ’ – படகு போல, ‘நௌ’ என்றாலும் ‘நௌகா’ என்றாலும் படகு என்று அர்த்தம். ‘நௌ’ தான் தமிழ் ‘நாவாய்’. (கிறிஸ்துவ வேதத்திலே, ப்ரளயத்தில் பகவானருளால் நாவாயில் வைத்து ரக்ஷிக்கப்பட்டவனுக்கே நோவா (Noah) என்று பேர் சொல்லியிருக்கிறது! அதுவும் நம் வைவஸ்வத மநுவின் கதைதான்!)

ஸம்ஸாரப் பெருக்கில் படகு ஓட்டுபவர் குரு. ‘கர்ணதாரன்’ என்றால் படகுக்காரன். குருவுக்கும் அதே பெயர் சொல்வதுண்டு.

ஸம்ஸாரத்தைத் தானும் தாண்டி பிறரையும் தாண்டுவிக்கிறவர் என்பதையே வேறே விதமாகச் சொன்னால், தானும் ப்ரம்மமாக ஆகிப் பிறரையும் அப்படி ஆக்குகிறவர். அவர் ப்ரம்மமாயிருப்பதுதான் “குருஸ் – ஸாக்ஷாத் பரம் – ப்ரஹ்ம”

தாம் அப்படி ஆகாமல் வாய்வேதாந்தம் பேசுபவரில்லை. அவரும் நன்றாக விரிவாக வேதாந்தம் பேசத் தொரிந்தவர் தான். தன் ஸித்தாந்தத்துக்கு ஆதரவாக நன்றாக ‘ஆர்க்யூ’ செய்யும் ‘பாஸிடிவ்’ ஆன ‘ஊஹ’ சக்தி, மாற்று ஸித்தாந்தத்தை நிராகரிப்பதிலும் அப்படியே வன்மையாக எதிர்வாதம் செய்யும் ‘அபோஹ’ சக்தி – இவை இரண்டையும் சேர்த்து ‘ஊஹாபோஹம்’ என்று சொல்வார்கள். குரு இந்த இரு சக்திகளும் பெற்றவர். இதையும் ஆசார்யாள் சொல்லிவிட்டு,* இன்னம் அநேக லக்ஷணங்களையும் சொல்லி விட்டு, இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அவரை “ப்ரஹ்மவித், ப்ரஹ்மணி:” ஸ்தித என்கிறார். ‘ப்ரஹ்மவித்’ என்றால் ப்ரம்மத்தை அறிந்தவர். இப்படிச் சொன்னால்கூட அறிவு மட்டத்தில் மட்டும் intellectual – ஆக ப்ரொஃபஸர், டாக்டர் மாதிரித் தெரிந்து கொண்டதோடு ஸரியோ என்ற ஸந்தேஹம் வந்துவிடப் போகிறதே என்றுதான், உடனே ‘ப்ரஹ்மணி ஸ்தித:’ என்றும் போட்டிருக்கிறார். ‘ப்ரஹ்மத்திலேயே நிலைத்து நிற்கிறவர்’ என்று அர்த்தம். அதாவது ப்ரஹ்மமாகவே ஆனவர்.

ஆகையால் “குருஸ் ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம” என்றால் அது ஸரிதான். தஸ்மை ஸ்ரீகுரவே நம: என்னும்போது தான் மறுபடி கேள்வி வருகிறது.


* “உபதேச ஸாஹஸ்ரீ” : முதல் அத்யாயம் – 5

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is கரை ஏறியவர், ஏற்றுவிப்பவர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ப்ரம்மமாயினும் நமஸ்காரத்துக்குரியவரே!
Next