அம்பா, மாதா: அம்மன், தாயார் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

‘மாதா’, ‘அம்பா’ என்று இரண்டு வார்த்தைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் குழந்தை வாயில் ‘அம்பா’ என்றுதான் சட்டென்று வரும். ‘அம்மா’, ‘அம்பா’ இரண்டும் ஒன்றுதான். ‘மாதா’ என்பது இலக்கண ரீதியான வார்த்தை. தமிழில் ‘தாயார்’ என்கிற மாதிரி. அம்பா, அம்மா என்கிறபோது ரொம்ப எளிமை. மாதா, தாயார் என்கிறபோது ஒரு ஸ்தானம் கொடுத்து உயர்த்தி வைத்தாற் போல இருக்கிறது. பரமேச்வர பத்னியாக இருக்கப்பட்ட தேவியைப் பற்றிச் சொல்லும்போது ‘அம்மன்’, ‘அம்மன் ஸந்நிதி’ என்கிறோம். ‘அம்மன்’ என்னும்போது ‘அம்மா’ என்பதை விடவும் குழந்தை பாஷையில் சொல்கிற மாதிரியிருக்கிறது. அப்பா – அப்பன் மாதிரி அம்மா – அம்மன். ஸாதாரணமாக ஆண்பால் பெயர்கள்தான் ‘ன்’ னில் முடியும். குழந்தை பாஷைக்கு இலக்கணமில்லை. அதனால் ‘அம்மா’ வும் ‘அம்மனா’ கி விடுகிறது. பரமேச்வர பத்னியை அம்மன் என்கிறோம். பொது வழக்கிலேயே பரமேச்வர பத்னியை அம்பா, அம்பாள் என்று சொல்லுகிறோம். மஹாவிஷ்ணுவின் பத்னியைப் பற்றிச்சொல்லும்போதோ ‘தாயார்’, ‘தாயார் ஸந்நிதி’ என்கிறோம்.

(ஸம்ஸ்க்ருத அகராதியான) ‘அமர (கோச)’த்தில் பார்த்தாலும் இப்படியே இருக்கிறது. விஷ்ணு பத்னியைச் சொல்லும்போது, “இந்திரா, லோக மாதா” என்று குறிப்பிட்டுவிட்டு, சிவபத்னியைச் சொல்கிறபோது, “அபர்ணா பார்வதீ துர்கா ம்ருடாநீ சண்டிகா அம்பிகா” என்று, ‘அம்பா’ ப் பேருக்கே அழகு பண்ணி ‘அம்பிகா’ என்று குறிப்பிட்டிருக்கிறது.

தனம் வேண்டுமென்றே லக்ஷ்மியிடம் போகிறோமாதலால், அவளை நிறைய தனம் படைத்த பெரிய சீமாட்டியாக பாவித்துத்தான் ‘தாயார்’ என்றும் ‘மாதா’ என்றும் மரியாதை செய்கிறோம் போலிருக்கிறது!

‘மாத: அநிசம் கலயந்து நாந்யே’ என்று மாதாவாக அவளைக் கூப்பிடுபவர், ‘ஸரோருஹாக்ஷி’ என்றும் ச்லோகத்தில் பெயர் கொடுத்திருக்கிறார். தாமரை போன்ற கண் படைத்தவள் என்று அர்த்தம். பகவானுக்கும் புண்டரீகாக்ஷன் என்று இதே அர்த்தத்தில் பெயரிருக்கிறது. ஸதிபதிகள் ஒற்றுமை.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is நமஸ்காரமே செல்வம்:ஆசார்யாள் உணர்த்துவது
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  நமஸ்காரம் அளிக்கும் பயன்கள்
Next