இந்த நமஸ்காரம் தான் நமக்கு மஹா பெரிய செல்வம். ஆசார்யாள் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்.
அவர் பால ப்ரம்மசாரியாக இருந்த காலத்தில் ஒரு ஏழை ப்ராம்மண ஸ்த்ரீக்கு இரங்கி லக்ஷ்மியிடம் ப்ரார்த்தித்துக் கொண்டு ‘கனகதாரா ஸ்தவம்’ பாடின கதை தெரிந்திருக்கலாம்.
அவர் ப்ரார்த்தித்துக்கொண்டவுடன் லக்ஷ்மி வந்து கனக வர்ஷமாகப் பொழிந்துவிட்டாள். அது ஏழை ப்ராம்மணக் குடும்பத்துக்காக. ஆசார்யாள் அதில் ஒரு குன்றிமணிகூட எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் லக்ஷ்மிக்கு த்ருப்தியாக இருக்குமா, அவர் கேட்டுக்கொண்டாரே என்று வேறே யாருக்கோ வாரி வழங்கிவிட்டு, இதனை அழகான ஸ்துதி பண்ணின அவதாரக் குழந்தைக்கு எதுவும் கொடுக்காமல் போவதற்கு? ஆசார்யாளுக்கும், ‘வேறே யாருக்கோ தான் உன் அநுக்ரஹம் தேவைப்பட்டது; அதற்காக ப்ரார்த்தித்துக் கொண்டேன்; எனக்கு உன்னிடமிருந்து ஒன்றும் தேவையில்லை என்கிற மாதிரி இருந்துவிட்டால் அது மரியாதைக் குறைச்சல். அதனாலே நாம் சின்னவன் மாதிரி இருந்து மஹாலக்ஷ்மியிடம் நமக்காகவும் ஏதாவது கேட்டுக் கொள்ளவேண்டும்’ என்று தோன்றிற்று. ஆனால் அவருக்கு எந்த ஆசையும், எந்தத் தேவையும் வாஸ்தவத்தில் இல்லாததால் என்ன கேட்பது என்று தெரியவில்லை. அவளையே நமஸ்காரம் பண்ணி அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்று நினைத்து நமஸ்கரித்தார். உடனேயே, “அவளிடம் வேறென்ன செல்வத்தைக் கேட்கவேண்டும்? இப்படி நாம் சின்னவராக நின்றுகொண்டு ஒருத்தரிடம் ப்ரியத்தோடு, அடக்கத்தோடு, நன்றியோடு நமஸ்காரம் செய்யும்போது மனஸுக்கு எவ்வளவு நிறைவாக இருக்கிறது? அதனால் இந்த நமஸ்காரமேதான் பெரிய செல்வம். ‘இந்த நமஸ்காரச் செல்வத்தை எனக்குக் கொடு’ என்றே ப்ரார்த்தித்துக் கேட்டு வாங்கிக்கொள்வோம்” என்று தோன்றிற்று. அதையே ச்லோகமாகப் பாடிவிட்டார்.
ஸம்பத்கராணி ஸகலேந்த்ரிய நந்தநாநி
ஸாம்ராஜ்ய தாந நிரதாநி ஸரோருஹாக்ஷி
த்வத் வந்தநாநி துரிதோத்தரணோத்யதாநி
மாமேவ மாதரநிசம் கலயந்து நாந்யே
“நாந்யே” – முடிவாக, முடிந்த முடிவாக இந்த வார்த்தையைப் போட்டிருக்கிறார். “Final word” என்றால் அப்புறம் வேறே தீர்மானமில்லை என்று அர்த்தம்! ‘நாந்யே’ ‘ந அந்யே’ என்றால், ‘வேறு எதுவும் இல்லை’, – அதாவது ‘வேறு எதுவும் வேண்டாம்’. “அம்மா, மஹாலக்ஷ்மி! உனக்குப் பண்ணும் நமஸ்காரமே செல்வநாயகியான நீ எனக்குக் கொடுக்கும் பெரிய செல்வம். அதைத் தவிர வேறே எதுவும் வேண்டாம்!”
‘த்வத் – வந்தநாநி’ – உனக்கான நமஸ்காரங்கள்; ‘மாமேவ’ – என்னை (‘மாமேவ’ ஸமாசாரத்திற்கு அப்புறம் வருகிறேன்); ‘அநிசம்’ – இடையறாமல்; ‘கலயந்து’ – வந்தடையட்டும். ‘ந அந்யே’ – வேறே எதுவுமில்லை.
‘எப்போது பார்த்தாலும் உன்னை வணங்கிக்கொண்டிருக்கும்படியான இந்த நமஸ்கார ஸ்ரீயைத் தவிர வேறு எதுவும் நான் உன்னிடம் ப்ரார்த்திக்கவில்லை’.
“செல்வத்துட் செல்வம் அருட்செல்வம்* ” என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். அருள் ஆண்டவன் செய்வது. ஆசார்யாள் சொல்லும் நமஸ்காரமோ நாம் செய்வது. நம்மைப் போன்றவர்கள் அவனுடைய அருட்செல்வத்தை வேண்டி நமஸ்காரம் செய்கிறோம். ஆசார்யாளோ நாம் நமஸ்கரித்து வேண்டி அதற்குப் பலனாக அப்புறம் அவன் அருளென்ற செல்வத்தைத் தரவேண்டுமென்று நினைக்கவில்லை. நாம் செய்கிற நமஸ்காரமே அவன் தரும் பெரிய செல்வம் என்று நினைத்து, இது தவிர “எதுவும் வேண்டேன்” என்கிறார்! “இது மட்டுமே என்னை அடையட்டும்”: “த்வத் – வந்தநாநி… மாமேவ மாதரநிசம் கலயந்து.”
‘மாத:’, ‘அநிசம்’ என்பவை சேர்ந்து ‘மாதரநிசம்’. “மாதா!” என்று லக்ஷ்மியைக் கூப்பிட்டு, ‘அநிசம்’ – எப்போதும், இடையறாமல் – நமஸ்கார லக்ஷ்மி தன்னிடம் தங்கியிருக்கட்டுமென்கிறார்.
* “அருட் செல்வம் செல்வத்துட் செல்வம்” – குறள். 241