புஸ்தகத்திலே – அச்சில் வந்திருக்கும் எடிஷன்களில் நான் பார்த்த பலவற்றிலே – தப்பாக இருக்கிறது. “துரிதாஹரணோத்யதாநி” என்று போட்டிருக்கிறது. ஸரியான பாடம், “துரிதோத்தரணோத்யதாநி” என்பதே. திருத்திக் கொள்ளவேண்டும்.
‘துரிதம்’ என்றால் பாபம்.
இப்போது தப்பாக ஸங்கீதத்திலே ‘துரித காலம்’ என்று சொல்கிறார்கள்! வேகமாகப் பாடுவதை அப்படிச் சொல்கிறார்கள்! விளம்பமாகப் பாடினால்தான் புண்யம், வேகமாகப் பாடினால் பாபம் என்று அர்த்தமில்லை! ‘த்ருதம்’ (Drutam) என்றால் ‘வேகமாக’ என்று அர்த்தம். அதைத்தான் ‘துரிதம்’ (Duritam) என்று ‘பாப’ மாக மாற்றிவிட்டாற்போலிருக்கிறது! ஒரே வேகமாக அடித்துத் தள்ளிக்கொண்டு பாடினால் பாவம் எல்லாம் போய், ‘ஐயோ பாவமே!’ என்ற மாதிரிதான் ஆகிவிடும்! ‘த்வரிதம்’ (Tvaritam) என்றும் ஒரு வார்த்தை இருக்கிறது. அதற்கும் ‘வேகமாக’ என்றே அர்த்தம். அதுவும் இப்படித் திரிந்திருக்கலாம்.
துரிதம் என்றால் பாபம். எந்தக் கர்மாவுக்கும் ஸங்கல்பம் செய்துகொள்ளும்போது “துரித – க்ஷய – த்வாரா பரமேச்வர ப்ரீத்யர்த்தம்” என்கிறோம். ஈச்வரனை ப்ரீதி செய்வதே நம்முடைய லக்ஷ்யம். நாம் பண்ணிய பாவம் ஈச்வரப்ரீதி கிடைக்கவொட்டாமல் தடுக்கிறது. பாபம் நசித்தாலே, துரிதம் க்ஷயமானாலே, அதன் வழியாக – (அதாவது) துரிதக்ஷயத்வாரா – ஈச்வர ப்ரீதியை ஸம்பாதிக்க முடியும்.
‘துரிதாஹரணோத்யதாநி’ என்பது ‘துரித ஆஹரண உத்யதாநி’ என்று பிரியும். ஹரணம், ஆஹரணம் என்ற இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். போக்குவது என்று இங்கே அர்த்தம். ‘உத்யதாநி’ என்றால் ‘முனைந்திருப்பவை.’ ‘துரிதஹாரணோத்யதாநி’ என்றால் ‘பாபத்தைப் போக்குவதில் முனைந்திருப்பவை’. மஹாலக்ஷ்மிக்குச் செய்யும் நமஸ்காரங்கள் நம்முடைய பாபங்களைப் போக்கடிப்பதில் முனைந்து செயல்படுகின்றன என்று அர்த்தம். (இது) ஸரியாகத்தானே இருக்கிறது என்று தோன்றும்.
ஆனால் ஹரணம், ஆஹரணம் இரண்டுக்கும் ஒரே அர்த்தம் இலக்கணப்படி இருந்தாலும், டிக்ஷ்னரியில் அப்படிப் போட்டிருந்தாலும், வழக்கில் ‘ஹரணம்’ என்றாலே ‘போக்குவது’ என்றும் ‘ஆஹரணம்’ என்றால் ‘கொண்டு வந்து சேர்ப்பது’ என்றும்தான் வைத்துக்கொண்டிருக்கிறோம். ‘ஹரண’த்துக்கு வலிவூட்டுவதற்காக, மேலும் எதிரிடை அர்த்தம் தரும் ‘அப’ சேர்த்து ‘அபஹரணம்’ (‘ஸீதாபஹரணம்’) என்று சொல்வதும் வழக்கமாயிருக்கிறது. ‘ஆஹரணம்’ என்று முதலில் சேர்க்கிற ‘ஆ’ இப்படி எதிரிடையாக ‘போக்குவது’ என்ற அர்த்தம் கொடுக்காமல், இன்னும் வலுவாகச் ‘சேர்த்துவைப்பது’ என்றே பொருள் கொடுக்கும். ஆனாலும் ‘ஆஹரணம்’ என்றால் போக்குவது என்றும் அர்த்தமிருப்பதால் அப்படிப் போட்டிருக்கவே முடியாது என்று ஸாதிப்பதற்கில்லை.
பின்னே ஏன் தப்புப் பாடம், திருத்திக் கொள்ள வேண்டுமென்று சொன்னேனென்றால் “துரிதோத்தரணோத்யதாநி” என்னும்போதுதான் இதைவிட சிறப்பான, பொருத்தமான பொருள் கிடைக்கிறது.
‘துரித உத்தரண உத்யதாநி’ என்பது (இதன்) பதப் பிரிவினை. ‘ஆஹரண’ என்பதற்குப் பதில் ‘உத்தரண’ (uddharana).
‘உத்தரணம்’ என்பது ‘உத்தாரணம்’ என்றும் நீளும். இதற்குக் குறிப்பாக என்ன அர்த்தமென்றால் பிடுங்கி எறிவது. ‘பிடுங்குவது’ என்றால், எதுவோ ஒன்று உள்ளே புதைந்து போயிருக்கிறது, அதைத்தான் பிடுங்கவேண்டியிருக்கிறது என்று உள்ளர்த்தம் கொடுக்கிறது. தரைமட்டத்தில் இருப்பதைப் ‘பிடுங்க’ வேண்டியதில்லை. அப்படியே எடுத்துப் போட்டால் போதும். புதைந்திருக்கும்போது, அதாவது ஆழ உள்ளே போய் மாட்டிக்கொண்டிருக்கும் போதுதான் பிடுங்குவதற்கு அவசியம் ஏற்படுகிறது. (க்ருஷ்ணர்) கோவர்த்தனோத்தரணம் பண்ணினார் என்கிறோம். அதன் முழு அர்த்தம் புரியாமலே, பூமி மட்டத்துக்கு ஸமனாயிருந்த மலையடிவாரத்தில் கையை விட்டுத் தூக்கிவிட்டாரென்று நினைத்து, இதையே அத்புதமாகக் கொண்டாடுகிறோம். அவரானால் இன்னம் பெரிய அத்புதமாக, பூமிக்குக் கீழேயும் ஆழமாகக் கையைவிட்டு மலையை ஆட்டிப் பிடுங்கி வெளியே தூக்கி “உத்தரண” மாகச் செய்திருக்கிறார் – அநாயாஸமாக ஒரு நாய்க்குடையைப் பிடுங்குகிற மாதிரி!
ஆலயத் திருப்பணியை ‘ஜீர்ணோத்தாரணம்’ என்கிறோம். அர்த்தம் தெரியாமலே சொல்கிறோம். ‘ஜீர்ணம்’ என்றால் கிலமானது, இடிந்து போனது என்று அர்த்தம். கோவில் முழுதுமோ, அல்லது அதில் பல இடங்களோ இடிந்துபோன போது என்ன செய்யவேண்டியிருக்கிறது? மேலெழ எதையோ வாரிக் கொட்டிவிட்டால் போதுமா? அல்லது ஒரே போடாகப்போட்டு உள்வரை நொறுக்கித் தள்ளி விட்டால் ஸரியாயிருக்குமா? இப்படியெல்லாமும் கொஞ்சம் செய்யவேண்டியிருக்கும். ஆனால் இதைவிடக் கஷ்டமாக ஒன்று நிறையப் பண்ணும்படியிருக்கும். மேலே இடிந்தும், அதோடு அடிவாரமும் கலகலத்துப் போயும் இருக்கும் பல இடங்களில்கூட உள்ளே கிண்டு கிண்டாகக் கற்கள் இருக்கும். இவற்றை அப்படியே வாரிக் கொட்டவும் முடியாது; நொறுக்கித் தள்ளவும் முடியாது. உள்ளேயிருந்து பிடித்து இழுத்து இழுத்தே அதாவது பிடுங்கியே வெளியேற்ற வேண்டியிருக்கும். கோபுரத்தில், ப்ராகாரத்தில் மரம், செடிகள் வேர்விட்டு முளைத்திருந்தால் இப்படி உள்ளே விட்டுக் குடைந்தே பிடுங்கிப் போடவேண்டும். உள்ளே ஆழமாகக் சொருகிக் கொண்டிருக்கும் கல், மரம், செடி முதலியவற்றை இழுத்துப் பிடுங்கித் தள்ளுவதுதான் ஜீர்ணோத்தாரணம். முள்ளைப் பிடுங்கி எடுத்துப் போடுவதைக் ‘கண்டகோத்தரணம்’ என்று சொல்வார்கள்.
நாம் ஜீர்ணோத்தாரணம் என்பதை Renovation என்பதற்கு நேர் வார்த்தையாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதாவது புதிசு பண்ணுவது, ‘புதுக்குவது’ என்கிறார்களே அது, என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையிலே பழசை இழுத்துப் பிடுங்கிப்போடுவது என்றே அர்த்தம்.
கலியிலும் அவதார புருஷர்கள் ஜகத்தை உத்தாரணம் செய்ய வருகிறார்களென்றால் என்ன அர்த்தம்? “ஜகதோத்தாரணா!” என்று தாஸர் ஏன் பாடுகிறார்? அதர்மச் சேற்றில் அழுந்திப் போயிருக்கும் ஜகத்தை அவர்கள் அடியில் கை கொடுத்துப் பிடுங்கி வெளியே இழுத்துக்கொண்டு வருவதால்தான்.
வெளியே இழுத்ததை எறியத்தான் வேண்டுமென்றில்லை. அதை நல்லபடியும் பண்ணலாம். அப்படித்தான் இவர்கள் உலகத்தை அதர்மத்திலிருந்து இழுத்துக்கொண்டு வந்த பின் அதற்கு நல்லது பண்ணுவது. அதர்மத்திலிருந்து விடுபடுத்துவதே நல்லதுதான்! கோவர்த்தனகிரியை இழுத்தெடுத்த பின் பகவான் எறிந்துவிடாமல் குடையாக அல்லவா உபயோகப்படுத்தினார்? அதற்குத்தானே அதைப் பிடுங்கியதே?
பிடுங்கி இழுத்து வெளியில் கொண்டு வருவதே உத்தரணம். அதற்கப்புறம் அதை எறிந்துவிடலாம். அழித்து விடலாம், அல்லது நன்றாக உருப்படுத்தலாம், உபயோகம் செய்து கொள்ளலாம். அந்தந்த Context – ஐ (ஸந்தர்பத்தை) வைத்து இவற்றில் எது என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளவேண்டும்.
நம் மனஸுக்குள்ளே ஆழமாக முள் செடி மாதிரி வேரோடித் தைத்திருக்கும் பாபத்தை அப்படியே பிடுங்கி எடுத்துப் போடுவதுதான் “துரிதோத்தரணம்.” உள்ளே தப்பான ஸாமான் சொருகிக் கொண்டிருந்தால் எப்படி சரீரத்துக்கு ஆபத்தோ, அப்படி நம்முடைய பாபங்கள் உள்ளே போய் சொருகிக்கொண்டிருப்பது உயிருக்குப் பெரிய ஆபத்து. அதை நன்றாகக் கிள்ளி எறிவது ‘துரிதோத்தரணம்’.
ஆகையினால், ‘போக்குவது’ என்று லேசாக அர்த்தம் தருகிற வார்த்தையான ‘ஆஹரணம்’ என்றில்லாமல், ஜன்ம ஜன்மாந்தரமாக நாம் பண்ணின பாபம் பெரிய முள்ளு மரமாக நமக்குள்ளே வேரோடியிருக்கிறதை பெரிய கடப்பாரை, அது, இதைப் போட்டு நெம்பிப் பிடுங்கி வெளியிலே இழுத்து அழித்துப் போடவேண்டுமென்று இத்தனை அர்த்தத்தை ரத்னச் சுருக்கமாகக் கொடுக்கும் ‘உத்தரணம்’ என்றிருப்பதுதான் பொருத்தம்.
நம்முடைய ஸகல பாபத்தையும் நிவ்ருத்தி செய்து வாழ்க்கைக்கு ஜீர்ணோத்தாரணம் செய்துவிட்டால் அப்புறம் ஒரே சுத்தந்தான்; அம்ருதத்தாலேயே கும்பாபிஷேகந்தான்! இதை நமஸ்காரமே ஸாதித்துக் கொடுத்து விடுகிறது என்று காட்டுகிறார். அதனால், “அந்த நமஸ்காரம் என்னை வந்தடையட்டும்” என்கிறார். “மாமேவ கலயந்து” – “என்னை வந்தடையட்டும்.”