நமஸ்கார பலனாக முதலில் சொன்ன ஸம்பத்து, ஸகல இந்த்ரிய ஆனந்தங்கள், ஸாம்ராஜ்யாதிகாரம் என்ற மூன்றில் எதையுமே தாம் ஏற்க முடியாமலிருக்கும்போது, இவற்றைத் தர வல்லதான நமஸ்கார க்ரியை தமக்கு வேண்டுமென்றால் ஸரியாயில்லையே! அதனால்தான் தாமும் விரும்புவதற்குரிய பலனாக வேறே என்ன சேர்க்கலாமென்று யோசித்து – ரொம்ப யோசிக்கவில்லை; க்ஷணம் அல்லது அதற்கும் குறைச்சலாக யோசித்து – “துரிதோத்தரணம் செய்வதாகவும் நமஸ்கார க்ரியை இருக்கிறதே! ஆகையால் இந்தப் பலனை நாமும் வேண்டிக்கொள்வதாக (ச்லோகத்தை) மேற்கொண்டு கவனம் பண்ணி முடித்துவிடலாம்” என்றுமுடிவு பண்ணி அப்படியே செய்துவிட்டார். வாஸ்தவத்தில் துரித லேசமும் அண்ட முடியாத பவித்ர புருஷர் நம் ஆசார்யாள். ஆனாலும் நமக்காக, நமக்கு ப்ரார்த்திக்கக் கற்றுக்கொடுக்கிறபோது, நம் நிலையில் தன்மையும் நிறுத்திக்கொண்டு, தமக்கும் துரித நிவ்ருத்தி தேவையாயிருப்பது போலச் சொல்லி, அதை அளிக்க வல்லதான நமஸ்கார ஸ்ரீயை மஹாலக்ஷ்மியிடம் வேண்டிக் கொண்டு ச்லோகத்தைப் பூர்த்தி பண்ணிவிட்டார். ஸம்பத்து ஸர்வேந்திரிய ஆனந்தம், ராஜ்யாதிகாரம் ஆகியவை இம்மையின்பங்களாகவே இருக்க, இந்த பாபோத்தரணம்தான் மறுமைக்கு உதவுவதாக இருப்பது. இது ஒன்றுதான் பாரமார்த்திக ப்ரயோஜனம் உடையது. இந்த ‘டிஸ்டிங்க்ஷ’ னைத் தெளிவு படுத்தும் விதத்தில் முதல் மூன்றை ‘வந்தநாநி’ என்பதற்கு முன்னாடி போட்டு, அப்புறம், தனியாகப் பிரித்து, ‘வந்தநாநி’ என்பதற்குப் பின்னாடி “துரிதோத்தரணோத்யதாநி” என்று போட்டு ச்லோகத்தை அமைத்திருக்கிறது.