ஈச்வர வேதவாயிலாகப் போட்டுக் கொடுத்த கர்ம மார்க்கத்தில் ஒரு பெரிய விசேஷம் என்னவென்றால்:
அப்பப்போ நமக்கே ஒரு யோசனை, ‘இது என்னமோ ஓயாமல் ஒழியாமல் பண்ணிக்கொண்டிருக்கிறோமே! ஆனால் இதனாலே நமக்கு உள்ளே என்னவோ ஒன்று நிறையாமல், எல்லாம் ஏதோ மேலெழுந்தவாரியாக அல்ப ஸுகம் அநுபவித்துத் தீர்ந்து போகிறாற்போலத்தானே இருக்கிறது?’ என்று வருகிறதென்று சொன்னேன். இப்படி ஒரு எண்ணம் வந்தாலும் உடனே பழக்க வாஸனை அதை நல்ல விரக்தி – வைராக்யமாக வளர வொட்டாமல் அமுக்கிப் போட்டு விடுகிறது. ‘பழைய குருடி’ என்று சேற்றுக் குட்டையிலேயே விழுந்து குழப்பிக்கொண்டு, ‘நன்னாயிருக்கு, நன்னாயிருக்கு’ என்று ஸந்தோஷப்படுகிறோம். நம்மாலே எதுவுமே செய்து கொள்ளமுடியாததாக ஒரு சாவு, பெரிய நஷ்டம் என்று ஏதாவது வந்தால் அப்போது மட்டும் — கார்யமே செய்கிற நாம் இதில் செய்துகொள்ள ஒரு கார்யமும் இல்லை என்பதாலோ என்னவோ — கொஞ்சம் வைராக்யமாயிருக்கிற மாதிரி இருப்போம். பிரஸவ வைராக்யம், ச்மசான வைராக்யம் என்பார்கள். ஆனால் அதுவும் நீர் மேல் எழுத்து என்கிற மாதிரி அடித்துக்கொண்டு போய் விடுகிறது. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாகப் ‘பட்டு’க்கொண்டு போனால், பட்டுப் பட்டுக் கொஞ்சத்திலே கொஞ்சம் பக்வம் வரும். அந்த நிலையிலும் நம்மாலே கர்மாவைவிட முடியாதுதான். ஆத்மா-ப்ரஹ்மம்-ஞானம் என்று ஏகாந்தத்தில் போய் உட்கார்ந்து கொண்டு த்யான விசாராதிகள் பண்ணும் யோக்யதை வந்திருக்காதுதான். ஆனாலும் என்றைக்காவது அந்த யோக்யதை வந்தால் தேவலையே என்ற எண்ணம் அடிவாரத்தில் உண்டாயிருக்கும் கார்யங்களில்தான் மனஸின் ப்ரவ்ருத்தி (‘மனஸின் போக்கு’ என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்) இருந்தாலும் அதை விட்டுவிட்டு ஞான விசாரம் பண்ண முடியாவிட்டாலும், ‘கார்யம் விட்டால் தேவலை, ஞான விசாரத்திற்கான யோக்யதை வந்தால் தேவலை’ என்று விருப்பம் உண்டாகும். இம்மாதிரியிருப்பவர்கள் கர்ம ஸங்கிகளில் அதிகம் பேர் இருக்கமாட்டார்கள். ஆனாலும் முமுக்ஷு்க்களாக நிவ்ருத்தி என்றே தீவிரமாகப் போகிறவர்களைவிட நிறையப் பேருக்கு இந்த எண்ணமாவது அடிப்படையில் இருக்கும்.
ப்ரவருத்தி மார்க்கத்தை உத்தேசித்து ஈச்வரனால் வேதத்தின் மூலம் கொடுக்கப்பட்ட அதே கர்ம காண்டத்தின் அநுஷ்டானம் இப்படிப்பட்டவர்களுக்கும் ஒரு பெரிய உபகாரத்தைச் செய்து, நிவ்ருத்தி மார்க்கத்திற்குப் பிற்பாடு ஒரு காலத்திலாவது போய்ச் சேருவதற்கு யோக்யதை உண்டாக்குகிற உபாயமாக அமைகிறது. பரமாத்மா அப்படி அமைத்திருக்கிறார்.
என்ன செய்திருக்கிறாரென்றால், தர்மமான இந்த சாஸ்த்ரோக்த கர்மாக்களைச் செய்தால் அது இரண்டு விதமான பலன்களைக் கொடுக்கும்படியாகச் செய்திருக்கிறார். இரண்டு விதமான லக்ஷ்யங்களை உத்தேசித்துக் கர்மாக்களைச் செய்யும் இரண்டு வகையான ஜனங்களுக்கு அவரவர் லக்ஷ்யத்தையும் நிறைவேற்றித் தருவதாக இரண்டு வித பலனை அமைத்திருக்கிறார்.
ஒரு வகை, பூலோக – ஸ்வர்க்க லோக இன்பங்களுக்கு மேலே எதையும் நினைக்காதவர்கள். இவர்கள் தாங்கள் விரும்பும் இன்பங்களுக்காகத் தங்கள் மனஸுப்படியெல்லாம் செய்தால் லோகத்துக்கும் கஷ்டம் விளைவித்துத் தங்களுக்கும் பாவத்தைத் தேடிக்கொள்கிறார்களே, அதனால் தங்களுக்கும் கஷ்டத்தை உண்டாக்கிக் கொள்கிறார்களே. தாங்கள் ஆசைப்படும் நச்வரமான இன்பங்களையும் அடையாமல் வீணாய்ப் போகிறார்களே என்றுதான் சாஸ்த்ரோக்தமாக கர்ம காண்டம், கர்ம மார்க்கம் என்று ஈச்வரன் போட்டுக் கொடுத்தது. “அப்பா! உன்னாலே ஏதாவது கார்யந்தான் ஸதாவும் பண்ணிக்கொண்டிருக்க முடியும். நான்தான் உன்னை அப்படிப் படைத்திருக்கிறேன். உனக்கு நான் கொஞ்சம் ஸ்வாதந்திரியமும் கொடுத்திருக்கிறேன். வேடிக்கை பார்க்கணுமென்றுதான் இப்படியெல்லாம் செய்திருக்கிறேன். ஆனால் வேடிக்கையாக இல்லாமல் ஒரே வெறிக்கூத்தாக நான் பார்த்து, ‘நம்ம ஸ்ருஷ்டி இப்படியாச்சே!’ என்று நினைக்கும்படிப் பண்ணிவிடாதே! நீ இஷ்டப் படி கார்யம் செய்து உனக்கும் கஷ்டம், ஊருக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம் என்று ஆக்கிவிடாதே! இப்படி ஆகாமலிருக்க வழிதான் கர்ம காண்டம். உனக்குப் பிடித்த பூலோக-ஸ்வர்க்கலோக ஸெளக்யங்களை நிஜமாகவே உனக்குக் கொடுப்பதாக அதில் கர்மாக்களைத் தந்திருக்கிறேன். கார்யம் பண்ணுவதிலேயேதான் உன் ஸ்வபாவம் இருப்பதால் மனஸுப்படிப் பண்ணுவதை விட்டு, இப்படி (சாஸ்த்ரத்தில் கொடுத்துள்ள கர்மாக்களைப்) பண்ண ஆரம்பி. இந்த மாதிரி கர்மாநுஷ்டானம் செய்வதில் கஷ்டங்கள், ச்ரமங்கள், த்யாகங்கள், இருக்கத்தான் செய்யும். ஆனால், ‘நம்மிஷ்டப்படி செய்தால் பின்னால் வருகிற கஷ்டங்கள் இதைவிட ரொம்பப் பெரிசாக அல்லவா இருக்கும்? அது, செய்கிற கொஞ்ச காலத்தில் ஸெளக்யமாயிருந்தாலும், செய்து முடித்தபின் நெடுங்காலம் ஏற்படும் விளைவுகள் பரம கஷ்டமாக இருக்கும். இது (வேத சாஸ்த்ர கர்மாநுஷ்டானம், ஸ்வதர்ம பரிபாலனத்தில் செய்கிற ஒவ்வொரு கார்யமும்) செய்கிற கொஞ்ச காலம் ச்ரமமாகப் பல நியமம், த்ரவியத் தியாகம் என்றிப்படியிருந்தாலும், பலனே பஹுகாலம் ஸந்தோஷத்தைக் கொடுப்பதாக இருக்கிறதல்லவா? அதனால் நம்மைக் கொஞ்சம் ஸரிப்படுத்திக்கொண்டு ஈச்வராஜ்ஞைக்கு அடங்கி இப்படிப் பண்ணுவோம்’ என்று ஒரு தீர்மானம் பண்ணிக்கொள்”- என்றே கர்ம மார்க்கத்தை வேதத்தின் வழியாக பகவான் விதித்திருக்கிறான். இது ஒரு வகையான ஜனங்களுக்கு. ஆத்மாநுபவம், ஈச்வராநுபவம் ஆகியவற்றைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல், ஸந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்தால் போதும் என்று நினைக்கும் ஜனங்களுக்கு.
இன்னொரு வகை சொன்னேன். ஆத்மா என்று விசாரம் செய்யவோ, ஈச்வரன் என்று அப்படி உருகிப்போகவோ முடியாத வகைதான். கார்யத்திலேயே போய்க்கொண்டிருப்பவர்கள்தான். ஆனாலும், ‘செக்குமாடு மாதிரி இதென்ன சுற்றி சுற்றிக் கார்யம்? இதனாலே பெறுகிற இந்த ஸந்தோஷங்கள் தான் என்ன? உள்ளே ஒரு நிறைவைத் தரவில்லையே! அதைப் பெறவேண்டுமே!’ என்கிற எண்ணம் உள்ள ஜனங்கள். இவர்களுக்கும் கர்ம காண்டத்தின் ஸ்வதர்மாநுஷ்டானங்களையேதான் ஈச்வரன் மார்க்கமாகக் கொடுத்திருக்கிறான். ஆனாலும் ஒரு வித்யாஸம். மேலே சொன்னபடி பூலோக-ஸ்வர்கலோக ஸந்தோஷங்களோடேயே த்ருப்திப் பெற்றுவிடுபவர்கள் இந்த ஸந்தோஷ ப்ராப்தி என்ற பலனை உத்தேசித்தே கர்ம மார்க்கத்தில் போகிறார்கள். ஈச்வரனே அந்த மார்க்கத்துக்கு இந்தப் பலன் உண்டு என்று வைத்திருக்கிறான். ஆனால், ‘இந்தப் பலன் வேண்டாம். நச்வரமான இந்த ஆனந்தங்களில் எங்களுக்கு ஆசையில்லை. ஆனாலும் நிவ்ருத்தி மார்க்கத்தில் போவதற்கான சித்தப் பக்குவம் எங்களுக்கில்லை. ஏதாவது கார்யம் பண்ணிக்கொண்டிருப்பதிலேயேதான் எங்கள் ஸ்வபாவம் இருக்கிறது’ என்பதாக இன்னொரு வகை சொன்னேனல்லவா, அவர்களுக்கும் அந்தச் சித்தப் பக்வத்தை சாஸ்த்ரோக்தமான கர்ம மார்க்கமே அளிக்கும்படியாக (ஈச்வரன்) வைத்திருக்கிறான். பலனை விரும்பிப் பண்ணினால் ஒரொரு ஸந்தோஷங்களைக் கொடுத்துவிட்டு அதோடேயே முடிந்து போய்விடும் கர்மாநுஷ்டானத்தையே, பலனை விரும்பாமல், ‘இது ஈச்வராஜ்ஞை. வேதம் வழியாக அவன் போட்டுள்ள ஆஜ்ஞை, அதற்காகவே அடங்கி அதை அநுஷ்டிக்கிறோம். ஆனால் இதனால் ஏற்படும் ஸந்தோஷ பலன் எதுவும் வேண்டாம்’ என்று நினைத்து ஒருவர் செய்து கொண்டுபோனால் அது அவருக்குச் சித்த சுத்தியைக் கொடுத்துவிடும். ஸ்வய லாபம், தன் ஸொந்த ஸந்தோஷம் என்ற பலனில் ஆசையில்லாமல், அதாவது நிஷ்காம்யமாக, ‘லோகம் ஒழுங்காக இருப்பதற்காக பகவான் வகுத்துக் கொடுத்திருக்கிற வழி, கார்ய க்ரமம், இது (கர்ம மார்க்கம்) என்பதற்காக மட்டும் அதன்படிப் பண்ணுவோம்’ என்று ஒருவன் கர்மாக்களைப் பண்ண ஆரம்பித்தால், — தன்னலம் கருதாமலும், ஆசையின் அழுக்குப் படாமலும் பகவான் கட்டளைக்கு அடங்கி, ‘அவனுடைய ப்ரீதிக்கே இதைச் செய்கிறேன்: ‘பரமேச்வர ப்ரீத்யர்த்தம்’ என்று ஸ்வதர்மப்படி ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் அத்தனை கர்மாக்களையும் விடாமல் இழுத்துப் போட்டுக்கொண்டு பண்ண ஆரம்பித்தால் — அவனுடைய சித்தத்திலுள்ள தோஷங்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து மறைந்து போய்விடும். இப்படிப்பட்ட சித்த சுத்தி பெற்றபின் அவனால் கர்மாவை விடமுடியும். ஓயாமல் காரியம் என்று பறக்கும் ஸ்வபாவம் அடங்கிப் போகும். கொஞ்சங் கொஞ்சமாக த்யானம், விசாரம் என்று அதற்கப்புறம் நிவ்ருத்தி மார்க்கத்தில் போகமுடியும்.
கர்ம மார்க்கத்துக்கு இப்படி இரண்டு விதமான பலன். ஒன்று, கர்மாவினால் நேராக ஏற்படும் பூலோக-ஸ்வர்க லோக ஸந்தோஷ பலன். இன்னொன்று இந்தப் பலன் வேண்டாமென்று ஈச்வரார்ப்பணம் பண்ணிவிட்டு, அவனுடைய ஆஜ்ஞை என்பதற்காக மாத்திரம் பண்ணிக் கொண்டுபோனால் நாளடைவில் உண்டாகும் சித்த சுத்தி என்ற பலன். சித்த சுத்தி அதோடு முடிந்துபோவதில்லை. நிவ்ருத்தி மார்க்கமென்கிற ஞானயோகத்தில் ப்ரவேசிப்பதற்கான யோக்யதையை அதுவே உண்டாக்குகிறது.
இரண்டு விதமான பலன் என்று நான் சொன்னாலும், வாஸ்தவத்தில் கர்ம பலன் என்றால் அது அந்தக் கர்மா நேராக பூலோக-ஸ்வர்க்க லோகங்களில் தரும் தாற்காலிக ஸந்தோஷங்கள்தான். இந்தப் பலன் வேண்டாமென்று நினைத்தபோதிலுங்கூட, கர்மா செய்யாமலிருக்க முடியவில்லையே என்பதாலும், விதிப்படி ஸ்வதர்மங்களைச் செய்வதால் நமக்கே ஒரு டிஸிப்ளின் உண்டாகிறது என்பதாலும், இதனால் ஸமூஹத்தின் ஒழுங்கான வாழ்க்கைக்கும் உதவ முடிகிறது என்பதாலுமே ஒருவன் கர்மா பண்ணும்போது அவனுக்குச் சித்த சுத்தி ஏற்படுகிறதென்றால் அந்தச் சித்த சுத்தி நேராக அந்தக் காரியங்களிலிருந்து பலனாக உண்டாகிவிடவில்லை.
காய்கறித் தோட்டம் போடுவதற்கு என்ன பலன்? கத்திரிக்காய் ஸாம்பார், வெண்டைக்காய் கறி இத்யாதி தானே? ஒருத்தருக்கு இந்த ஸாம்பாரும் கறியும் வேண்டியிருக்கவில்லை. ஆனாலும் அவருக்கு என்னவோ வேதனை — புத்ர சோகம், business-ல் loss மாதிரி என்னவோ ஒன்று. அது தெரியாமலிருக்க, வெட்டி, கொத்தி ஏதாவது கார்யம் பண்ணி மறக்கடிக்கலாமென்று காய்கறித் தோட்டம் போடுகிறார். அதற்காக, தோட்டம் போடுவதன் பலன் என்ன என்று கேட்டால், ‘புத்ர சோக நிவ்ருத்தி’ என்று சொல்லலாமா?
இப்படித்தான் ஒரு கர்மாவின் இஹாமுத்ர பலன்* வேண்டாமென்று கர்மா செய்கிறவன் பெறும் சித்த சுத்தியைக் கர்ம பலனாகச் சொல்வதில்லை. அது ஈச்வர ப்ரஸாதமாக அவன் பெறுவதே.
“நேர்ப் பலன் தனக்கு வேண்டாமென்றிருந்தும், நம்முடைய ஆஜ்ஞை என்பதாலும், ஸமூஹ ஒழுங்கை உத்தேசித்தும் நம்முடைய ப்ரீதிக்காகவே இவன் இவ்வளவு நன்றாகக் கர்மாநுஷ்டானம் செய்கிறானே! இந்த மனோபாவத்துக்காக இவனுடைய சித்தத்தின் அசுத்தங்களைப் போக்குவோம்” என்று ஈச்வரனே அநுக்ரஹிப்பதுதான் சித்த சுத்தி.
நேர்ப்பலன் என்பதைக்கூட கர்மாவே கொடுப்பதில்லை தான். ஜடமான கர்மா எப்படிப் பலன் தரமுடியும்? பலதாதாவான ஈச்வரன்தான் அதையும் கொடுக்கிறான். என்றாலும், அதிலேயே வித்யாஸம் பண்ணி, வெளி வஸ்துக்களாலேயே ஒருத்தனுக்கு ஏற்படும் பூலோக-ஸ்வர்க லோக பலன்களை மட்டும் கர்மாவின் நேர்ப் பலனாகவும், உள்ளே அந்தஃகரணத்தில் ஜீவனுக்கு உண்டாகும் சித்த சுத்தியைத் தன்னுடைய ப்ரஸாதமாகவும் காட்டுகிறான். ஆகையால் சித்த சுத்தியைக் கர்ம பலன் என்று சொல்லும் வழக்கமில்லை. கீதாதி சாஸ்த்ரங்களிலும் கர்ம பலம், கர்ம பல த்யாகம் என்றெல்லாம் சொல்லும்போது இந்த அர்த்தத்தில்தான் சொல்லியிருக்கிறது. சித்த சுத்தி (என்பது) கர்ம பலனில்லை, (அது) கர்ம பலனைத் தியாகம் செய்வதாலேயே கிடைப்பது.
ஞான மார்க்கத்தில் போகவும் யோக்யதை இல்லை, கர்மாவில் உண்டாகும் ஸந்தோஷங்களிலும் நிறைந்த நிறைவில்லை என்றிருக்கிறவர்களிடம் பகவான், “உன்னால் கார்யங்களை விடமுடியாததால், பண்ணிக்கொண்டே போ. ஆனால் பலனில் ஆசை வைக்காதே. பலத்யாகம் பண்ணி, என் ப்ரீதிக்காகவே கர்மங்களை அநுஷ்டி. அதனால் கால க்ரமத்தில் சித்த சுத்தி உண்டாகும். அப்புறம் ஞான மார்க்கத்தில் பிரவேசிக்கலாம்” என்கிறார். கர்ம மார்க்கம் என்பது இங்கே கர்ம யோகம் என்றே உயர்வு பெற்று விடுகிறது. ஞான மார்க்கம் எப்போதுமே ஞானயோகம் தான்.
யோகம் என்றால் சேர்ந்திருப்பது, சேர்ப்பது. பரம ஸத்யத்தில் ஒரு ஜீவனைச் சேர்ப்பதற்கு உதவும் வழிகளை அத்யாத்ம சாஸ்திரங்களில் யோகம், யோகம் என்று சொல்லியிருக்கும். நேராக இவற்றில் ஒவ்வொன்றுமே முடிவான ஸத்ய லக்ஷ்யத்தில்கொண்டு சேர்த்துவிட வேண்டுமென்பதில்லை. மெயின் ரோடில் கொண்டுபோய்ச் சேர்க்கிற சந்து மாதிரி இருந்துவிட்டால்கூடப் போதும், இதுவும் யோகம்தான். லக்ஷ்யத்தில் நேரே சேர்ப்பது ஞானயோகம். அந்த மெயின் ரோடுக்குக் கொண்டுவிடுவது கர்ம யோகம். அதற்குப் பல ஜன்மா பிடித்தாலும் பிடிக்கும். ஆனாலும் ஒரு நாள் கொண்டு விட்டுவிடும்.
* இஹ-அமுத்ர பலன்: பூலோக, ஸ்வரக்கலோக இன்பப் பயன்கள்.