ஊடல் – கூடலின் தத்வார்த்தம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

‘அத்ரி – ஜா’ என்னும் ‘மலைமகள்’ இருக்கிறாளே, ஸாக்ஷாத் பார்வதி, அவளுக்கு பர்த்தாவிடத்தில் பொய்க்கோபம். ‘க்ரீடா ருஷ்டா’ என்று விளையாட்டுக் கோபக்காரியைச் சொல்லியிருக்கிறார் (கவி). இப்படி நாயகி ஊடல் செய்யும்போது நாயகன் அவள் காலிலேயே போய்விழுவதாகச் சொல்வது கவி மரபு. ‘கீத கோவிந்த’ த்தைப் பார்த்தால் க்ருஷ்ணன் ராதையின் காலில் போய் விழுந்தான் என்று இருக்கும். அருணகிரிநாதரில் (அவரது திருப்புகழில்) பார்த்தால் வள்ளிக்குறத்தியின் காலிலே போய் சிவசக்தி குமாரராக இருக்கப்பட்ட ஸுப்ரஹ்மண்யர் விழுந்தாரென்று இருக்கும்.

என்ன அர்த்தம்? ஜீவாத்மாதான் நாயகி. நாயகன், பரமாத்மா, ஜீவாத்மா எத்தனை பிணங்கிக்கொண்டு போனாலும் பரமாத்மா அதன் காலில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடியாவது தன்னுடன் சேரும்படிப் பண்ணும் என்பதே அர்த்தம். இரண்டு பேரையும் எப்பாடு பட்டாவது சேர்த்து வைக்கும் ஸகி என்று ஒருத்தி வருவாள். அவர்களிடையே தூது போவாள். ஜீவாத்ம – பரமாத்மாக்களைச் சேர்த்து வைக்கும் ஆசார்யர்தான் அந்த ஸகி. வெளியிலே பார்த்தால் ஏதோ காதல், விரஹம் என்று இருந்தாலும் உள்ளே இப்படிப் பாரமார்த்திகமாக இருக்கும்.

நம்முடைய ச்லோகத்தில் ஸகி செய்வதை ஒரு புது மாதிரியாக விளையாடிவிடுகிறார் இருவருக்கும் குழந்தையான விக்நேச்வரர்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 'மங்கள'ஸ்லோகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  விளையாட்டில் மறைந்த விரோதம்
Next