விளையாட்டில் மறைந்த விரோதம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

பார்வதி ‘கடுகடு’ என்று உட்கார்ந்திருக்கும்போது பரமசிவன் போய் அவள் காலில் விழுகிறார். “ப்ரணத சிவ” – ப்ரணாமம், நமஸ்காரம் பண்ணுகிறாராம் சிவபெருமான்!

ஜடாபாரத்தை அம்பாள் பாதத்தில் தடாலென்று அவர் சாய்க்கிறபோது அதிலுள்ள பிறைச்சந்திரன் ‘குபுக்’ கென்று நன்றாக வெளிப்பட்டு ப்ரகாசிக்கிறது.

இங்கிருந்துதான் சந்த்ரமௌளி ஸமாசாரம் ஆரம்பிக்கிறது.

ஈச்வரன் அம்பாள் பாதத்தில் நமஸ்கரிக்கும் கோலத்தில் சந்த்ர கண்டம் (பிறைச்சந்திரன்) நன்றாகத் தெரிகிறது.

யானைக்குட்டி என்ன பண்ணுமென்றால் குளத்திலே, ஓடையிலே புகுந்து அமர்க்களம் செய்யும்போது அதிலிருக்கும் தாமரைத் தண்டுகளை முறித்து, உள்ளேயிருக்கும் நூலை ஆசையோடு தின்னும். வாழைத் தண்டைவிடக்கூட இன்னம் நூல்மயமாக இருப்பது தாமரைத் தண்டு. யானை அந்தத் தண்டை முறித்து முறுக்குகிறபோது உள்ளேயிருக்கும் அத்தனை நூலிழையும் கத்தையாக ஒன்று சேர்ந்து முறுக்கிக் கொண்டு வெள்ளை வெளேரென்று வரும். அதை யானைக் குட்டி ஆசை ஆசையாகத் தின்னும்.

இப்போது வெள்ளை வெளேரென்று ரேகா ப்ரமாணமாகத் தெரிகிற சந்திரனைப் பார்த்ததும் பாலகணேச யானை இது அந்த மாதிரியான தாமரை நூல் கத்தைதான் என்று நினைத்துக்கொண்டது. ‘இதென்ன, தாமரை நூல் கத்தையா?’ என்று அதற்குக் கேள்வி வந்துவிட்டது. “ஸ்புரத் – அமல – பிஸ – ஆசங்கயா”: ப்ரகாசிக்கின்ற – நிர்மலமான – தாமரைத்தண்டு (பிஸம் என்றால் தாமரை நூல்; தண்டு என்றும் சொல்லலாம்) -என்ற ஸந்தேஹத்தினால் (‘ஆசங்கா’ என்றால் கேள்வி, இது இப்படியிருக்குமோ என்னும் ஸந்தேஹம். ஸந்தேஹம் என்பதைவிட guess , ஊஹம் என்று சொல்லி விடலாம்.)

சந்த்ர கண்டத்தைப் பார்த்ததும் இது தாமரை நூல் கத்தை என்று பிள்ளையார் guess பண்ணினார்.

உடனே அதைப் பிடித்திழுக்க வேண்டுமென்று ஆசை ஏற்பட்டுவிட்டது : “ஆக்ரஷ்டுகாம :”

எதற்காக? தின்பதற்காகத்தான்.

நிஜமாகத்தான் இப்படி ஸந்தேஹம் வந்ததோ? விளையாட்டுக் குறும்பில், அப்பா அம்மாவைச் சேர்த்து வைக்கவேண்டுமென்றே அப்படி நடித்தாரோ? “பால லீலாபிராம:” – குழந்தை விளையாட்டில் குஷிப்படுகிறவர் என்று பின்னாடி (கவி) முடித்திருக்கிறாரே? இங்கேயும் ஒரு ‘லீலா லோலம்’ வேறு போட்டிருக்கிறார்!

பஜனைகளில் ‘லீலா லோலா’, ‘ராஸலீலா லோலா’ என்றெல்லாம் கேட்டிருப்பீர்கள். ஒன்றுக்கு ஆசைப்பட்டுக் கொண்டு ஆடுவதுதான் ‘லோலம்’. விளையாட்டு ப்ரியனாக விஹாரம் செய்பவன் லீலா லோலன்.

இங்கே நம் ச்லோகத்தில் ‘லீலாலோலம்’ என்று சொல்லியிருப்பது முழுப் பிள்ளையாரையும் இல்லை. முழுப் பிள்ளையாரையும் இல்லை என்றால் என்ன அர்த்தமென்றால், இங்கே குறிப்பாக அவருடைய தும்பிக்கை நுனிதான் விளையாட்டில் ப்ரியத்தோடு அசைந்தாடிக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. பின்னால் அவரையே, அதாவது முழுப் பிள்ளையாரையும் லீலாபிராமன் என்றவர் இங்கேயும் ‘லீலாலோலன்’ என்று சொன்னால் புனருக்தி தோஷம் (கூறியது கூறல் என்ற குற்றம்) ஏற்பட்டுவிடும். அதனால் இங்கே அவருடைய ஒரு அங்கமாக மட்டுமுள்ள தும்பிக்கை நுனிக்கும் தனியாக ஒரு விளையாட்டு ஆசை இருப்பதாக, ‘கராக்ரம் லீலாலோலம்’ என்கிறார். ‘கர அக்ரம்’: யானையின் கையாகிய துதிக்கையின் நுனி. தும்பிக்கையை ஆட்டி ஆட்டிக்கொண்டு அதன் நுனியால் எதை உறிஞ்சலாம், எதைத் துழாவலாம், முறுக்கலாம், உடைக்கலாமென்று அவர் போவதைப் பார்த்தால், அந்தத் தும்பிக்கைக்கே தனியாக ஒரு உயிர் இருந்து, அதுதான் விளையாட்டில் ஆடி அசைகிறது என்று நினைக்கும்படி இருக்கிறது!

வெள்ளை வெளேரென்று சந்திரன் தாமரை நூல் கத்தை மாதிரி இருக்கிறது. இரண்டும் குளிச்சியாக இருப்பவை. நிலாக் கிரணங்கள் தனித்தனித் தாமரை நூலிழைகள் மாதிரி இருக்கின்றன.

பராசக்தி குண்டலிநீயாக ஸூக்ஷ்ம ரூபத்தில் ஒரு தாமரை நூலிழைப் பரிமாணத்தில்தான் இருக்கிறாள். ‘பிஸதந்து தநீயஸி’ என்று (லலிதா) ஸஹஸ்ரநாமத்தில் இருக்கிறது.

தாமரை நூல் கத்தை, அல்லது தண்டு போல இருக்கும் சந்திரப் பிறையைக் கண்டதும் அதை இழுக்கப் பிள்ளையார் ஆசைப்பட்டாரல்லவா? உடனே விளையாட்டு விநோதமாக ஆடிக்கொண்டிருக்கும் துதிக்கை நுனியை நீட்டி… “ப்ரஸார்ய” என்றால் நீட்டி…எட்டியிருப்பதை இருந்த இடத்திலிருந்தே தொட்டிழுத்துக்கொள்ள வாகாக நீட்டுமாறு பிள்ளையாருக்குத் தும்பிக்கை இருப்பதால் அதை நீட்டி, அம்மா பாதத்தில் விழுந்துள்ள அப்பாவின் சிரஸிலுள்ள சந்திர கலையை இழுக்க முயற்சி பண்ணினார்.

யானைக்குட்டி, ப்ரிய புத்ரன், குறும்பாக விளையாடிக் கொண்டு தன் தலையில் இருக்கும் சந்திரனைத் தும்பிக்கையால் பிடித்திழுக்கிறது என்றால் அந்தப் பரமேச்வரத் தகப்பனாருக்குத் எத்தனை ஸந்தோஷமாக இருக்கும்? கல்பனையாக நினைத்துப் பார்த்தாலும் நமக்கே அந்தக் காட்சியில் ஆனந்தம் பொங்கிக் கொண்டு வரும்போது, நேராக தாமே அந்த விளையாட்டுக்கு ஆளானவருக்கு அதுவும் ஸொந்தப் பிதாவாகவும் இருப்பவருக்கு அப்படியே பூரித்துக்கொண்டு தானே ஸந்தோஷம் ஏற்பட்டிருக்கும்? சந்த்ரமௌளீச்வரன் என்று தனக்குப் பெரிய பெயர் கொடுத்துள்ள அந்த சிரோபூஷணத்தைப் பிள்ளை அபஹரிக்கப் பார்ப்பதே மகுடாபிஷேகம் செய்விக்கிற மாதிரி அவருக்குப் பேரானந்தத்தைக் கொடுத்தவிட்டது!

இவருக்கே இப்படியென்றால் அம்மாவுக்கு எப்படியிருந்திருக்கும்? குழந்தையின் விளையாட்டில் அப்பாவைவிட அவள்தான் அதிக ஸந்தோஷம் அடைவாள். அதுவும் இப்போது அப்பாக்காரர் இவள் காலிலே தழைந்து விழுந்து கிடக்கிறார். இவளானால் ‘உர்உர்’ என்றிருக்கிறாள். இந்த ஸமயத்தில் அவருக்கு மிக அழகான சிரோபூஷணமாக இருந்துகொண்டு சந்த்ரமௌளி, இந்து சேகரர் என்றெல்லாம் அவருக்கு லோக ப்ரக்யாதியை உண்டாக்கும் பிறையைக் குழந்தை, ப்ரிய வத்ஸன், இழுத்தால், “வேணும், வேணும், இவருக்கு நன்னா வேணும்! பிள்ளை கையிலே சந்திரனைக் கொள்ளை கொடுத்துவிட்டு நிற்கட்டும்!” என்று தானே தாங்கமுடியாத ஆனந்தம் ஏற்படும்?

பிள்ளை சேஷ்டையின் ஸந்தோஷத்தில் இரண்டு பேருக்குமே தங்கள் சண்டை ஸமாசாரம் மறந்துபோய் விட்டது! தான் உர்ரென்று மூஞ்சியைத் தூக்கிவைத்துக் கொண்டு சண்டைக்கு முஸ்தீபாக இருக்கவேண்டும் என்பது அம்பாளுக்கும், தான் அவளுடைய காலைப் பிடித்துக் கொண்டு மன்றாடியாவது மறுபடி ப்ரேமையை ஸம்பாதித்துக் கொள்ளவேண்டும் என்பது ஸ்வாமிக்கும் மறந்தே போய் விட்டது. குழந்தை விளையாட்டில் தங்கள் விரோதத்தை மறந்து சிரித்து விடுகிறார்கள். இருவரும் ஸந்தோஷப்பட்டுக் கொண்டு ஹ்ருதயம் ரொம்பி சிரித்துக்கொண்டு… “ஹ்ருத்ய ஸ்மிதாப்யாம்” என்பது ஹ்ருதய பூர்வமாக சிரிக்கிற பார்வதீ பரமேச்வரர்களைக் குறிப்பிடுவது… வாய் சிரிப்பது மட்டுமில்லை; இவள் போலியாய்க் கோபித்துக் கொண்டிருப்பது, அவர் போலியாய் இவளுக்கு அடிமை மாதிரி நமஸ்காரம் பண்ணுவது – போலில்லாமல், போலிச் சிரிப்பாய், பொய்ச் சிரிப்பாய் இல்லாமல் வாய்ச் சிரிப்பாய் மட்டுமில்லாமல், ஹ்ருதயமே மலர்ந்து, அந்த மலர்ச்சியில் வாயாலும் சிரிப்பவர்களாக அவர்கள் ஆகிவிடுகிறார்கள்.

தங்களுடைய ஊடல் மறந்து போய், இரண்டு பேருக்குமே குழந்தையை அப்படியே கட்டி அணைத்துக் கொள்ளவேண்டுமென்று ஆர்வம் பொத்துக்கொண்டு வருகிறது. “நான், நான்” என்று போட்டிபோட்டுக்கொண்டு இரண்டு பேரும் பால கணேசனை இறுக ஆலிங்கனம் செய்து கொள்கிறார்கள். “ஹ்ருத்ய ஸ்மிதாப்யாம் அஹமஹமிகயா ஆலிங்க்யமான: சிவாப்யாம்” – ஹ்ருதயம் ரொம்பிச் சிரித்துக்கொண்டு ‘நான்தான் நான்தான்’ என்று முண்டியடித்துக்கொண்டு… “அஹம் அஹமிகா” என்றால் நான் நானென்று ஒருத்தரோடொருத்தர் போட்டி போடுவது, அப்படிக் ‘குழந்தையை நான்தான் முதல்லே கட்டியணைச்சுப்பேன்’ என்று பார்வதீ பரமேச்வராள் போட்டி போட்டுக்கொண்டு ஆலிங்கனம் பண்ணிக் கொள்கிறார்கள்.

“சிவாப்யாம்”: அவர் சிவன். அவள் சிவா. அம்பாளுக்கு சிவா என்று பெயர். ஸர்வமங்களா என்று அர்த்தம். ‘சிவாப்யாம்’ என்றால் ‘சிவன் சிவா ஆகிய இருவராலும். ‘இருவராலும் விக்நேச்வரர் ஆலிங்கனம் செய்து கொள்ளப்படுகிறார்: “ஆலிங்க்யமான: சிவாப்யாம்”. குழந்தையை அணைத்துக் கொள்வதில் பெற்றோர் அடையும் ஆனந்தத்தைக் குறளில் கூடச் சொல்லியிருக்கிறது – மெய்தீண்டல் என்று சொல்லியிருக்கிறது.* ‘சாகுந்தல’த்தில் துஷ்யந்தன் சகுந்தலையைத் திரஸ்காரம் பண்ணிப் பல வருஷங்களுக்கு அப்புறம் கச்யபரின் ஆச்ரமத்தில் பரதனைத் தன் பிள்ளையென்று தெரிந்து கொள்ளாமலே பார்க்கிறான். பார்த்தமாத்திரத்தில் அவனைக் கட்டியணைத்துக் கொள்ளணும்போல அவனுக்கு ஒரு தாபம் உண்டாகிறது. இந்த இடத்தில் காளிதாஸனும் துஷ்யந்தன் வாயிலாகக் குழந்தையை மடியோடு அணைத்து வைத்துக்கொண்டு கொஞ்சுவதன் ஆனந்தத்தைச் சொல்லியிருக்கிறார். அப்புறம் அவன் வாஸ்தவமாகவே குழந்தையை மெய்தீண்டியதும் புல்லரித்துப் போகிறான் என்று கதை போகிறது. இதே போல பவபூதியும் “உத்தர ராம சரித”த்தில் லவகுசர்களை ராமர் இன்னாரென்றே தெரிந்து கொள்ளாமல் ஆலிங்கனம் செய்து கொண்டபோது எப்பேர்ப்பட்ட ஆனந்தமடைந்தாரென்று சொல்லியிருக்கிறார். அப்படியானால் அன்பே உருவான ஸாக்ஷாத் விக்நேச்வர மூர்த்தியைக் குழந்தையென்று பார்வதி பரமேச்வரர்கள் கட்டியணைத்தது எத்தனை பேரானந்தமாயிருந்திருக்கும்?

போட்டி போட்டுக்கொண்டு இரண்டு பேரும் குழந்தையை ஆலிங்கனம் பண்ணிக் கொள்கிறார்கள். குழந்தையையா பண்ணிக் கொள்கிறார்கள்? அவர்களே பண்ணிக்கொண்டு விடுகிறார்கள்! குழந்தை நடுவிலே இருக்கிறது. அதை இரண்டு பக்கமும் இரண்டு பேருமாக ஏக காலத்தில் அணைத்துக்கொள்கிறார்களென்றால், அந்த அவஸரத்தில் தங்களை அறியாமல் தாங்களே பரஸ்பரம் ஒருத்தர் முதுகில் இன்னொருத்தர் கைபோட்டுக்கொண்டு தானே விடுவார்கள்?

இந்த மாதிரி உத்தேசித்தோ உத்தேசிக்காமலோ, ஸ்வாமியுடைய திவ்ய ஸ்பரிசம் அம்பாளுக்கும், அம்பாளுடைய திவ்ய ஸ்பரிசம் ஸ்வாமிக்கும் ஒரு க்ஷணம் கிடைத்துவிட்டால்கூட, அப்புறம் அவர்களுக்குள் மனஸ் தாபம், ஒருத்தர் உர் உர்ரென்று உட்கார்ந்திருப்பது, இன்னொருத்தர் தவித்துக்கொண்டு காலில் விழுவது ஆகியவை நீடிக்கமுடியுமா? ஊடல் ஓட்டம் பிடித்து அவர்கள் இரண்டு பேரும் – ஸர்வலோகங்களுக்கும் தாய் தந்தையராக இருக்கப்பட்ட இரண்டு பேரும் – பரம ப்ரேமையில் ஒன்று சேர்ந்துவிட வேண்டியதுதானே?

அந்தத் தாய் தந்தையருக்கு நாம் எல்லாருமே குழந்தைகளென்றாலும் பிள்ளையார்தான் முதல் பிள்ளை, தலைச்சன், தலைப்பிள்ளை இரண்டு பேரும் உள்ளம் குளிர்ந்து ஒன்று சேர்ந்து உலகம் முழுதற்கும் ஆசீர்வாதம் செய்யும் படியாக அந்தப் பிள்ளையார் அவர்களைச் சண்டை தீர்த்து வைத்து ஸமாதானமாகப் போகும்படிப் பண்ணிவிடுகிறார். பால லீலா சேஷ்டிதமாகத் தகப்பனாரின் சிரஸிலுள்ள சந்த்ர கலையைப் பிடித்திழுத்து, நம் எல்லோருக்கும் லோக மாதா பிதாக்கள் அருள் கூறும்படியாக அவர்களை ஒன்று சேர்த்துவிடுகிறார்.

பார்வதீ பரமேச்வராள் இவரை அணைத்துக்கொள்ளப் போனதில் தாங்களே பரஸ்பரம் ஸ்பர்சித்துக்கொண்டு ஊடல் தீர்ந்ததை ச்லோகத்தில் உடைத்துச் சொல்லவில்லை. ஹ்ருதயமாரச் சிரித்துக்கொண்டு, போட்டிபோட்டுக் கொண்டு சிவ-பார்வதியரான இருவராலும் விநாயகர் ஆலிங்கனம் செய்து கொள்ளப்படுகிறாரென்று சொல்லி அப்படியே விட்டிருக்கிறது. ஆனால் “க்ரீடாருஷ்டா” என்று அம்பாளின் பொய்க் கோபத்தில் ஆரம்பித்து, சந்த்ர கண்ட சிரஸுக்காரர் அவள் காலில் விழுந்ததைச் சொன்னதால், அந்தக் கதையைப் பூர்த்தி பண்ணாமல் விட்டால் கவிக்கு தோஷம் ஏற்படும். விஷயமறிந்த கவி அப்படி விடவேமாட்டார். ரஸிகர்கள் பூர்த்தி செய்துகொள்ளும்படி ஸூசனை காட்டி, ‘குறிப்பாலுணர்த்தி’, விஷயத்தை விடும் நயமான யுக்தியை இங்கே கையாண்டு ஊடியவர்கள் கூடியதாகக் கதையை முடித்து வைக்கிறார்.

பரம மங்களமாக இப்படிப் பெற்றோரைச் சேர்த்து வைத்த விநாயக மூர்த்தி நாம் விரும்பிய எந்தப் புருஷார்த்தமானாலும் அதை நமக்குச் சேர்த்து வைக்கட்டும்: ந : சிந்திதார்த்தம் கலயது என்று கவி மங்களாசாஸனம் பண்ணுகிறார்.


* “மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம்” – குறள் 65

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஊடல்-கூடலின் தத்வார்த்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  'அந்த'ஸ்லோகத்திற்கு 'இந்த'ஸ்லோகத்தின் அத்தசாட்சி
Next