விநயமும் ச்ரத்தையும்
அடக்கம் என்பது விநயம். நம்பிக்கை என்பது ச்ரத்தை. இந்த இரண்டுமே நமக்கு இரண்டு கண் மாதிரி. குரு என்றால் வழி காட்டுபவர், அந்த வழியில் போகணுமென்று திரும்பத் திரும்பப் பார்த்தோமோல்லியோ? கண் இருந்தால்தானே ஒரு வழியில் போக முடியும்? அப்படி நமக்கு இரண்டு கண்களாக இருப்பவை விநயமும் ச்ரத்தையுந்தான். இந்த இரண்டில் ஒன்று இருந்தாலே மற்றதும் தன்னால் வந்துவிடும். ஒன்றிடம் நாம் அடங்கிக் கிடக்கிறோமென்றாலே அதுதான் நமக்கு நல்லது செய்யும் என்ற த்ருட நம்பிக்கையில்தானே அப்படிக் கிடக்கிறோம்? அதே மாதிரி, ஒன்றிடம் நாம் அதுவே பரம ப்ரயோஜனம் தருமென்றால் த்ருட நம்பிக்கை வைக்கிறோமென்றால் அந்த ப்ரயோஜனத்தைப் பெற அதனிடம் அடங்கிக் கிடக்கத்தானே செய்வோம்?
கீதையில் பகவான் விநயத்தையும் சொல்லியிருக்கிறார், ச்ரத்தையையும் சொல்லியிருக்கிறார். முதலில் 'ப்ரணிபாதம்' என்கிற நமஸ்காரம், 'பரிப்ரச்னம்' என்பதாக நன்றாகக் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வது, 'ஸேவை' என்பவற்றை சிஷ்ய லக்ஷணமாகச் சொன்னார். ஸேவைதான் குருவுக்குச் செய்கிற தொண்டு, பலவிதமான பணிவிடைகள். அதுவும் வித்யையை ஸ்வீகரிப்பதற்கு ஜீவாதாரமான அம்சங்களில் ஒன்று. அப்புறம் "ச்ரத்தாவான் லபதே ஜ்ஞானம்" 'சிரத்தையுள்ளவனே ஞானம் பெறுகிறான் என்றும் சொல்லியிருக்கிறார். முதலில் சொன்ன ப்ரணிபாத -பரிப்ரச்ன - ஸேவைகள் விநயத்தின் கீழ் வருகிறவையே. ப்ரணிபாதமும், அதாவது நமஸ்காரமும், ஸேவையும் விநயத்தைக் காட்டுபவை என்று எவருக்கும் புரியும். கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வதான 'பரிப்ரச்னம்' எப்படி விநயத்தில் வரும் என்று தோன்றலாம்.