பொதுஜனப் பெரும் ஸமுதாயம்:பிரத்யேக குரு இல்லாவிடினும்,
பொதுவான குரு தேவை
ஜனங்களுக்கெல்லாம் தெய்வ சிந்தனை இருக்கவேண்டும். அதற்கான பூஜை, பாராயணம், பஜனை எல்லாமும் எல்லாரிடமும் விருத்தியாக வேண்டும். அதே ஸமயம் எல்லாருக்கும் பணிவு என்ற குணம் விருத்தியானால்தான் அஹங்கார - மமகாரங்களில் மாட்டிக்கொண்ட அழிந்து போகாமல் ஆத்மாவைக் காப்பாற்றிக் கொள்ளமுடியுமாதலால் எல்லாரும் குரு என்று ஸ்தானம் கொடுத்து ஒருவரிடம் பணிவோடு பக்தி பாராட்டவும் வேண்டும்.
இதன் பொருட்டாக அத்தனை ஜனங்களுக்கும் - லக்ஷே£பலக்ஷம் என்று சொன்னேனே, கோடாநுகோடி என்றே சொல்லியிருக்கவேண்டும், அத்தனை பேருக்கும் - குரு பக்தி எப்படியாவது இருந்தேயாக வேண்டும் என்று நினைக்கிறேன். அத்தனை பேரையும் பார்த்துப் பார்த்துப் பயிர் பண்ண அத்தனை குருமார்கள் - அதிலும். எவரையம் கேள்வியோடேயே பார்க்கிற குணம் ஜனங்களுக்கெல்லாம் விருத்தியாகிவிட்ட தற்காலத்தில் - கிடைப்பார்களா? கஷ்டம்தான். குரு என்று சொல்லிக் கொள்ளத் தகுதி வாய்ந்தவர்கள் இருந்தால்கூட அவருடைய தகுதியை உணர்ந்து தங்களைச் சிறுக்கிக் கொண்டு ஜனங்களும் போக வேண்டுமே அப்படி இத்தனை கோடி பேருக்கும் வாய்க்குமா - குரு - சிஷ்ய உறவு வாய்க்குமா - என்றால் ரொம்பவும் ஸந்தேஹம்தான்.
ஆனாலும் இன்றைய ஸமுதாயத்தில் ஜனங்களில் அத்தனை பேரில் ஒவ்வொருவரும் எவராவது ஒருவரை மஹான், தெய்வ புருஷர் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவநம்பிக்கை யுகம் என்றே இக்காலம் பேர் வாங்கி விட்டாலும், மஹான்கள் என்று நம்பப்படுகிறவர்களிடமும், அநேகம் அநேகம் கூட்டங்களாக அத்தனை ஜனங்களும் எவராவது ஒருவரிடம், போய்க் கொண்டுதானிருக்கிறார்கள். பல பேர் பல மஹான்களிடமும் போகிறார்கள். என்றாலும் ஒவ்வொருவருக்கும் குறிப்பாக அவர்களில் ஒருவரிடம்தான் ஜாஸ்தி ஈடுபாடு உண்டாகிறது.
அந்தப் பெரியவர்கள் ஒவ்வொருவரும் தெய்வ ஸம்பந்தமாகவும், லோக வாழ்க்கையை எப்படி வாழ்ந்தால் நல்லது என்பதைப் பற்றியும் உபதேசம் செய்கிறார்கள். ஜனங்கள் அவர்களிடம் போவது தங்களுடைய கஷ்டம் தீர வேண்டும், தாங்கள் ஆசைப்படுவது நடக்கவேண்டும் என்பதற்காகவே என்று முடிந்துவிடாமல், அவர்களுடைய உபதேசப்படிக் கேட்டு அப்படி நடக்கவேண்டும் என்று நினைப்பதாகவும் ஆனால்தான் அந்த பக்தியும் ஈடுபாடும் நிஜமானவை, அர்த்தமுள்ளவை. அநேகமாக எல்லா ஜனங்களுமே இப்படித் தாங்கள் ஆச்ரயிக்கிற பெரியவரின் வழிகளை, கொள்கைகளை கொஞ்சம் கொஞ்சமாவது பின்பற்றாமலிருக்க மாட்டார்கள். குறைந்த பக்ஷம், பின்பற்ற வேண்டும் என்ற முயற்சி, அந்த எண்ணமாவது உள்ளவர்களாகவே இருப்பார்கள்.
இந்த இடத்தில் அந்த மஹான் குருவாகவும், அவரிடம் போகிற ஜனங்கள் சிஷ்யர்களாகவும் ஆகிவிடுவார்கள்.
ரொம்பவும் 'ஃபாலோயிங்' உள்ள பெரியவர்கள் என்றால், 'ஃபாலோயர்' என்று இருக்கிற அத்தனை பேர்களில் ஒவ்வொருவரோடும் அவர்கள் நேராகத்
தொடர்பு கொண்டு க்ரமப்படி உபதேசம் தரமுடிவதில்லை. ஆனாலும் அவர்கள் தங்களுடைய உபதேசத்தைப் பொதுப்படத் தருகிறார்களோ இல்லையோ? அதைத் தழுவியே தாங்கள் நடப்பது என்று அவருடைய பக்தர்கள் நினைத்தால் அப்போதுதான் அவர்கள் நிஜமாக 'ஃபாலோயர்' ஆகிறார்கள். குரு நடத்தும் வழியில் செல்லும் சிஷ்யர்களாக, ஒரு பெரியவர் கொடுக்கிற பொது உபதேசத்தை - ப்ரத்யேகமாகத் தங்களில் ஒவ்வொருவருக்கும் அவர் உபதேசிக்காமல் பொதுப்படையாக உபதேசிப்பதையே ப்ரத்யகே உபதேசமாகக் கொண்டு - பின்பற்றுகிற அப்போது - இந்த மாதிரி ஜன ஸமுதாயத்தில் ஒவ்வொருவரும் ஒருவரிடம் போய் அவரைப் பின்பற்றுகிறபோது - எல்லோருக்குமோ, ஒவ்வொருத்தருக்குமே ஒரு குரு கிடைத்து விடுகிறார். தனிப்பட்ட மந்திர தீ¬க்ஷ கொடுக்கும் குரு இல்லாவிட்டாலும், தெய்வ சிந்தனைக்கும் நல்வாழ்க்கைக்கும் வழி சொல்கிறவராக ஒரு குரு கிடைத்துவிடுகிறார்.
நானே இருக்கிறேன், என் மாதிரி வேறே ஸ்வாமிகளும் இருக்கிறார்கள். 'ஜகத்குரு' என்று டைட்டிலும் இருக்கிறது. அதற்காக ஜகத்திலுள்ள ¢ஒவவொருத்தருக்கும் நாங்கள் தனிப்பட உபதேசம் கொடுக்கிறோமா என்ன? கொடுக்க முடியத்தான் முடியுமா என்ன? ஜகத்தில் உள்ள அவ்வளவு பேரையும் எங்களைச் சேர்ந்தவர்களாகக் கொண்டு, எங்கள் மூல புருஷர் தெய்வ ஸம்பந்தமாகவும், வாழ்க்கைத் தர்மமாகவும் என்ன உபதேசித்தாரோ அதை நாங்களும் பொதுப்பட ஜகத் பூராவுக்கும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஜனங்களில் ரொம்பவும் பெரும்பாலான பேர், எங்களையே குருவாகக் கொண்ட சிஷ்ய லோகமாக இருக்கிறார்கள்.
இந்த மாதிரி 'மஹான்' என்று ஆச்ரயித்து, 'குரு' என்று கொள்கிறவனைக் குறித்தே பாராயணம், பூஜை, பஜனை முதலான எதுவானாலும், அதன் முதலில் குரு வந்தனம் பண்ண வேண்டும்.
பாராயண நூலைப் பண்ணியவர், பூஜா கல்பத்தை ஏற்படுத்தியவர், பஜனை ஸம்பிரதாயத்தை உண்டாக்கித் தந்தவர் ஆகியவர்களையும் குருவாக நமஸ்கரிக்க வேண்டும். அவர்கள் இன்னார் என்று தெரியாதபோதுங்கூட, 'எவராயிருந்தாலும் அவருக்கு நமஸ்காரம்' என்று (சிரித்து) 'எந்தோ மஹாநுபாவுலு' மாதிரி' எவரோ மஹாநுபாவுலு'வுக்கும் பண்ணவேண்டும்.
மொத்தத்தில் விஷயமென்னவென்றால், ப்ரத்யகேமாக குரு என்று ஒருவரிடம் உபதேசம் பெற்றுத்தான் பண்ணவேண்டும் என்று இல்லாத சின்ன உபாஸனைகளும் இருக்கின்றன. பெருத்த ஜன ஸமுதாயத்தில், அவரவரும் ஸம்ஸார வாழ்க்கை விஷயமாகவே ஆலாய் பறந்து கொண்டிருக்கிற போக்கில் அத்தனை ஜனங்களும் மேற்கொள்ளக்கூடியதாக இந்த பாவனைகள் இருக்கின்றன. குரு, பூஜை எடுத்து வைப்பவர் என்றெல்லாம் ஒருத்தருமே கிடைப்பதற்கில்லாத இடமாக லோகத்தில் எங்கெங்கோ எல்லாமோ நம் ஜனங்கள் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கை கொடுப்பதாகச் சில உபாஸனைகள் - வழிபாட்டு முறைகள் - இருக்கின்றன. இவற்றை விட்டால் இன்று லோகத்தில் ச்ரேயா மார்க்கமே (உயர் நலனுக்கு வழியே) இல்லை. ஆனபடியால் இவற்றிலேயே பெரும்பாலான ஜனங்கள் போனாலும் போகட்டும்.
அதில் தப்பில்லை. நல்லதே
ஆனாலும் அப்போதுங்கூட நம்முடைய ஸநாதன தர்ம ஆலவிருக்ஷம் ஒரு பெரிய வேராக பாய்ச்சியிருக்கிற குரு பக்தியை விட்டு விடாமல், பிரத்யகேமாக இல்லாவிட்டாலும் பொதுப்படையாகத் தனக்கு நல்ல வழி காட்டுகிறவரை ஒவ்வொருவரும் தியானித்து விட்டே உபாஸனை செய்வது நல்லது என்று தோன்றியதால் சொன்னேன்.
அடக்கமும், தன்னம்பிக்கையும் லோகத்தில் தழைப்பதற்கு குரு உபாஸனையே வழியாயிருப்பதால் சொன்னேன்.