ஆசார்யாள் காட்டும் சிரத்தையின் சிறப்பு

ஆசார்யாள் காட்டும் சிரத்தையின் சிறப்பு

இப்படி விநயத்தின் அங்கங்களான ப்ரணிபாத - பரிப்ரச்ன - ஸேவைகளை பகவான் சொல்லிவிட்டு அப்புறம் சிஷ்யனின் இன்னொரு கண் மாதிரியான சிரத்தையைச் சிறப்பித்து, "ச்ரத்தாவான் லபதே ஜ்ஞானம்" - "சிரத்தையுள்ளவனே ஞானம் பெறுகிறான்" - என்கிறார். அந்த இடத்தில் ஆசார்யாள் பாஷ்யத்தில் ஒரு ஸ¨க்ஷ்மமான மனோதத்வ ஸமாசாரம் சொல்லியிருக்கிறார்.

பகவான் முதலில் சொன்ன நமஸ்காராதிகளை பாஹ்யமானவை- அதாவது வெளி விஷயங்கள் - என்று ஆசார்யாள் சொல்கிறார். நமஸ்காரம் பண்ணுவதும், கேள்வி கேட்பதும், ஸேவை செய்வதும் வெளியிலே தெரிகிறவைதானே? இப்படி வெளியிலே ஒன்று தெரியும்போது, 'அது வெளிக்கு நன்றாகத் தெரிந்தால் போதும். உள்ளுக்குள்ளே நமக்கு அந்த பாவம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வெளியிலே அப்படி ஒரு 'ஷோ' ஏற்படுத்திவிட்டால் போதும்' என்றும் தோன்ற இடமுண்டாகிறது. அப்படித் தோன்றி, மனஸிலே பக்தி இல்லாமலே விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணலாம். ஸப்ஜெக்டில் நிஜமான இன்டரெஸ்ட் இல்லாமலே இருக்கிற மாதிர ஏதாவது கேள்விகள் கேட்லாம், சரீர கைங்கர்யம் மனஸு கலக்காமலே வெளிப் பார்வைக்குப் பிரமாதமாகப் பண்ணிப்பேர் வாங்கிவிடலாம். அந்த நமஸ்காரம், கேள்வி, கைங்கர்யம் என்கிறவை 'விநயம்' என்பதில் கீழ் வர வேண்டியவையானாலும் அவை நிஜமானதாக இல்லாதபோது எப்படி விநயமாகும்? எப்படிப் பலன் தரும்? கபடமாக நடித்துக்காட்டவும் இடம் தருகிற 'விநய' அம்சங்கள் நாம் நேர் வழியில் 'ஸ்டெடியாக'ப் போகாமல் சலனம் அடையவும் செய்யலாம். முடிவில் நிஷ்பலனே மிஞ்சும். ஆனால் இன்னொரு கண் இருக்கிறதே, 'சிரத்தை' என்று!அந்த அசைக்க முடியாத நம்பிக்கை இந்த மாதிரி வெளிவிஷயமில்லை. அது நம் உள்ளத்திலேயே இருப்பது. கபடம் கலக்காத, கலக்க முடியாத உண்மையான உள்விஷயம் அது. அதற்கு வெளி expression -ஆக நாம் மற்றவர் பார்க்கச் செய்கிற எதுவும் இல்லை. ஆகையினால் அதில் நடிப்பதற்கு இடம் இல்லை. ஆகையால் சிரத்தை என்பதே, மற்ற நமஸ்காராதிகளைப் போல நிஷ்பலனிலும் கொண்டுவிடலாம் என்ற ஆபத்து இல்லாததாகவும், பலன் பெறும் லக்ஷ்ணத்தில் ஸ்டெடியாகச் சேர்ப்பதாகவும் இருக்கிறது- இப்படி ஆசார்யாள் அழகாப் பாகுபடுத்திச் சொல்லியிருக்கிறார். அதனால் தான் "ஞானம் அடைகிறவன் யாரென்றால் ச்ரத்தாவான்தான்" என்று பகவான் ச்ரத்தைக்கு அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கிறாரென்று நமக்குப் புரியவைக்கிறார்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is பரிப்ரச்னம் எப்படி விநயமாகும்?
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  சிரத்தையிலிருந்து சரணாகதி
Next