ஹிந்து மதமும் மதமாற்றமும்;முதல் மாற்றத்தைச் சரி செய்யும் மறுமாற்றம்

ஹிந்து மதமும் மதமாற்றமும்:முதல் மாற்றத்தைச் சரி செய்யும் மறுமாற்றம்

பிறரைத் தம் மதத்திற்கு மாற்றும் கொள்கையை அடியோடு கைக்கொள்ளாத ஒரே பெருமதமான ஹிந்து மதத்திற்கு இவ்வாறு அதன் கொள்கைகளில் சுய விருப்பம் ஏற்பட்டதன் மீதேதான் பிற நாட்டு நல்லறிஞர், அநுபவிகள் ஆகியோர் ஈர்க்கப் பெற்று அதனைத் தழுவியிருக்கின்றனர் என்பது கவனத்திற்குரியது.

ஹிந்து மதத் தலைவர்களும் பழங்காலங்களில் பவுத்த - சமண மதத்தினரை ஹிந்து மதத்திற்கு மாற்றியுள்ளனரே என எதிர்க் கேள்வி விடுக்கலாம். இதற்கு நமது விடை, அதற்கு முற்காலங்களில் ஹிந்துக்களாகவே இருந்து அப்புறச்சமயிகளின் பிரசாரத்தால் அச்சமயம்களுக்கு மாறியோரைத்தான் அத் தலைவர்கள் மீண்டும் தாய்ச் சமயத்திற்கு மாற்றினர் என்பதேயாம்.

பிற்காலங்களிலோ ஹிந்து மதத் தலைவர்கள் அவ்விரு புற மதங்களில் தலைமுறைகளாக இருந்துவந்த ஆதி ஹிந்துக்களை மீண்டும் தாய்ச் சமயம் மாற்றுவதில் ஈடுபடவில்லை. ஹிந்துக்களில் புதிய தலைமுறையினர் அம்மதங்களுக்கு இழுக்கப்படுவதை மட்டுமே தடுக்க முயற்சி செய்யலானார்கள்.

கவனத்திற்குரிய ஒன்றுண்டு, யாதெனில், இந்நாட்டிலேயே தோன்றிய பவுத்த - சமண சமயங்களுக்கு வேறாகப் பிறநாட்டுச் சமயத்தினருக்கும் கிறிஸ்து சமயம் தோன்றியதற்கு முன்பிருந்தே, அலெக்ஸாந்தர் காலத்திலிருந்து நம் நாட்டுடன் தொடர்பு உண்டாகி, அவர்கள் அரசியல் ரீதியிலும் வாணிப ரீதியிலும் இங்கு குடியேறினரெனினும் அவர்களை ஹிந்து சமயத்திற்கு மாற்ற ஹிந்துக்கள் எண்ணியதுகூட இல்லை. பின்னாளில் முசல்மான்களும், கிறிஸ்துவர்களும் இங்கு பெருமளவில் பிரவேசித்து, அதோடு நில்லாது, ஹிந்துக்களை வலிவுடனேயே மத மாற்றம் செய்தபோதுங்கூட, பிறப்பாலேயே அப்பிற மதத்தாராக இருந்தோரை ஹிந்துக்களாக மாற்ற ஹிந்துக்கள் எண்ணவில்லை. அதனினும் குறிப்பிட்டத்தக்கதாக, அப்பிற மதங்களை ஏற்கனவே தழுவிவிட்ட ஹிந்துக்களைக்கூட மீண்டும் தாய்மதம் மாற்றாமல் புதிதாக மேன்மேலும் ஹிந்துக்கள் அம்மதங்களுக்கு இழுக்கப்படுவதைத் தடுப்பதற்காக மட்டுமே எதிர்ப் பிரசாரம் செய்தனர்.

கருத்தில் கொள்ளத்தக்க மற்றோர் அம்சம் உண்டு. யாதெனில், பொதுவாக ஹிந்து சமய மன்னர்கள் யாவரும் அந்த எல்லாப் புறச்சமயிகளும் அவரவரது ஆலயங்களை இங்கு எழுப்பிக் கொள்ளத் தாராளமாக அநுமதித்தனர், அவர்களில் பலர் சமய சமரஸத்தில் மேலும் ஒரு படி சென்று அப்புறச் சமய ஆலயங்களுக்கு மானியம் முதலியன அளித்தனர், இன்னும் சில மன்னர்களோ தாங்களே புறச்சமயங்களுக்காக ஆலயங்கள் எழுப்பித் தந்துமிருக்கின்றனர்.

மொத்தத்தில், ஹிந்துக்கள் தாமாக offensive -ல் எதிர்த்துச் சென்று தமது சமயத்திற்கு ஆள் சேர்த்ததே கிடையாது. மேன்மேலும் தம் மதத்தினரின் சங்கியை சிதைவுறாமல் தடுக்கும் தற்காப்பே ( defensive -ஏ) அவர்கள் செய்தது.

ஹிந்து சமூகத்தினர் பழங்காலங்களில் பெருமளவில் செய்ததும், தற்காலத்தில் சிறிய அளவில் செய்ய ஆரம்பித்திருப்பதும் என்னவெனில் அம் மதத்திற்கு முன்னர் ஏற்பட்டிருந்த எதிர்ப்பை எதிர்த்துச் செய்யும் புனர் - மதமாற்றம் (re-conversion) தானேயன்றி, பிற மதத்தினராகவே இருப்போரை எதிர்த்துத் தம் மதத்திற்கு மாற்றம் செய்வதல்ல.

இந்த அம்சத்தில் பழங்காலத்தில் செய்ததற்கும் இன்று செய்ய ஆரம்பித்திருப்பதற்கும் மாறுபாடொன்றுண்டு. அன்று பாரதத்திலேயே தோன்றிய பிற சமயங்களுக்கு (பவுத்த - சமண மதங்களுக்கு) மாற்றப்பட்டோரை மீண்டும் ஹிந்து சமயத்திற்கு மாற்றினர். இன்று வெளிநாடுகளைச் சேர்ந்த பிற சமயங்களுக்கு அண்மைக் காலத்தில் மாற்றப்பட்டோரை ஹிந்து சமயத்திற்கு மாற்ற முயலப்படுகிறது. இம்மாறுபாட்டுக்குக் காரணம்:இங்கேயே தோன்றிய பர சமயங்களில் சரித்திரத்தின் போக்கில் இந்நாட்டில் பவுத்தம் எடுபட்டேவிட்டதெனுமளவுக்குச் சுருங்கிவிட்டது. சமணமோ ஹிந்து மத அம்சங்களில் பலவற்றைத் தன்னிற் கொண்டு அதன் சகோதர மதம் போலாகிவிட்டது. மேலும் அவ்விரு மதத்தினர் இப்போது நமது நாட்டில் மதமாற்றத்தில் ஈடுபடவுமில்லை. மறுபுறத்தில், வெளிநாட்டுச் சமயங்களைச் சார்ந்தோரின் மதமாற்ற நடவடிக்கைகளோ இன்றும் தீவிரம் குன்றாமலே நடைபெறுகின்றன.

மீண்டும் கவனித்தற்குரிய விஷயம், இத்தகைய நிலவரத்திலுங்கூட ஹிந்துக்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் முசல்மான்களாகவும், கிறித்துவர்களாகவும் இந்நாட்டிற்கு வந்தோரின் வம்சத்தினரை ஹிந்துக்களாக மாற்றுவதல்ல, ஹிந்துக்களிலேயே சில தலைமுறைகளுக்கு முன் அப் புற மதங்களுக்கு மாறியோரின் வழி வந்தோரைக்கூட மீண்டும் ஹிந்துக்களாக்குவதற்கும் அல்ல. அண்மைக் காலத்தில் அவற்றுக்கு மாற்றப்பட்டோரை மீண்டும் தாய் மதத்திற்கு மாற்றுவதற்கே முயலப்படுகிறது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is தவறான உபாயங்களுக்குத் தடை, தண்டனை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  மதத் தொடர்பில்லாத உபாயங்கள்;கடும் தண்டனை விதித்தல் வேண்டும்
Next