மதத் தொடர்பில்லாத உபாயங்கள்;கடும் தண்டனை விதித்தல் வேண்டும்
இதுவரை மதச்சுதந்திரம் பற்றிக் கூறியதெல்லாம் மத விஷயமாகவே பிரசாரம் செய்வது குறித்துத்தான். ஆனால் சரித்திரம் நிகழ்கால நடைமுறையில் காட்டியிருப்பதிலிருந்தோ, தவறான நோக்கம் கொண்ட மதப் பிரசாரம் என்பதைவிடவும் மிகவும் தவறாக, மதத் தொடர்பே இல்லாத உபாயங்களாலும் மதமாற்றம் செய்வதாக ஏற்பட்டிருக்கிறது. எந்தச் சமுதாயத்திலும் அறிஞர்களாகவும், அநுபவிகளாகவும் ஆய்ந்தோய்ந்து பார்க்க அறியாதவர்களாக உள்ளோரே மிகப் பெரும்பாலாராயிருப்பதற்கேற்பவே ஹிந்து சமுதாயத்திலுமுள்ள அப்படிப்பட்ட பாமர மக்கள் இம்முறைகளால்தான் கூட்டம் கூட்டமாக மதமாற்றம் கண்டுள்ளனர்.
இவ்வுபாயங்கள் இரண்டு வகையானவை. இரண்டும் மத அம்சங்களை விளக்கி அவற்றால் பிற மதத்தினருக்கு அதில் சுயமான பற்றுதல் ஏற்படுத்தாதவையே.
ஒன்று பலவந்தம்: மிரட்டி உருட்டிக் கட்டாயக் கெடுபிடியால் மதமாற்றம் செய்வது. ஒரு மதஸ்தரன் ஆட்சி ஏற்படுகையில் பிற மதஸ்தருக்கு வரி விதிப்பது போன்ற நடவடிக்கைகளும் இப்பலவந்தத்தைச் சேர்ந்தனவே.
இரண்டாவது, வசிய உபாயம்:கல்வியளிப்பது, நோய்ப் HE தீர்ப்பது, ஏனைய சமூக நலன்களைச் செய்வது ஆகியவற்றை மத ஸ்தாபங்களின் மூலம் செய்து, உதவி பெறுவோருக்கு உதவு செய்வோரிடம் ஒரு கடப்பாடு உண்டாக்கி, அதை நேர்முகமாகவோ சாதுரியமாகவோ எடுத்துக்காட்டி மதமாற்றம் செய்வது.
இவை யாவற்றினும் கேவலம், லஞ்சமாகப் பொருள் கொடுத்தே ஒரு மதத்தினரை வேறு மதத்துக்கு மாற்றுவது.
பலவந்தம், வசியம் ஆகிய இவ்விரண்டுமே பொய்ப் பிரசாரத்தைவிடவும் தவறான வஞ்சகச் செயற்பாடாக இருப்பதால் சட்டபூர்வமாகப் பெருங்குற்றமாக்கப்பட்டு அவற்றுக்குக் கடும் தண்டனை விதிக்க வேண்டும்.
பிறிதொன்றும் உண்டு. ஒரு பிரஜையின் மதச் சுதந்திரம் என்பது அந்நபர் சுதந்திரமாகச் சுய விருப்பத்தில் ஒரு மதத்தைத் தழுவியிருப்பதற்கான உரிமையாகும். இது அவரது உள்ள உயர்வு என்ற மிகவும் உத்தமமான விஷயம் குறித்ததாகும். உள்ள உயர்வு கண்ட பிரஜைகளால்தான் ஒரு நாட்டின் நல்வாழ்வே என்பதால் அதற்கு ஊறு விளைவித்தால் அது சாதாரணக் குற்றங்களில் சேராமல் பெரிய குற்றங்களிலேயே சேரும். மதச் சுதந்திரம் என்பது அரசியல் நிர்ணயச் சட்டத்தின் அங்கீகாரம் பெற்றுவிடும் போது அச்சுதந்திரத்தில் குறுக்கிடுவதும் மிகப்பெரும் குற்றமாகும் என்ற காரணத்தையும் கருத்தில் கொண்டால், பொய்ப் பிரச்சாரம், பலவந்தம், வசிய உபாயம் ஆகிவற்றால் மதமாற்றம் செய்வது எவ்வளவு பெரிய குற்றம் என்பது தெரியும். எனவே அதற்குரிய கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். ஒருவர் தண்டனைக்காக அஞ்சியே குற்றத்தில்
புகாதபடி தடுப்பதான punishment என்ற கடுந்தண்டனைக்கான குற்றமாகவே அது சட்டபூர்வமாக ஆக்கப்பட வேண்டும்.
ஆனால் வசிய உபாயத்தால் மதமாற்றம் செய்யப்படும்போதா, அதைக் கண்டுபிடித்து நிரூபிப்பது கடினமாக இருக்கும் எனத் தெரிய வருகிறது. சுய மதத்தினர் மாத்திரமின்றி சகல மக்களும் நல்வாழ்வு பெற உதவி புரிய வேண்டுமென்று தமது மதம் சொல்வதால், அந்த அடிப்படையிலேயே ஒருவரது மதத்தைக் கருதாது அனைவருக்கும் சமூக நலப்பணிகள் செய்வதாக இந்த உபாயத்தைக் கைக் கொள்வோர் கூறித் தப்பித்துக் கொள்ள முடியும். என்றாலும் உதவி பெற்றோர் எத்தகையோர் என்பதை, அவர்களின் சமூகநிலை, அறிவுநிலை, அவர்களில் மதம் மாறியோரின் எண்ணிக்கை ஆகியவற்றைத் தீர்க்கமாக அலசிப் பார்த்து ஆழ்ந்து விசாரணை செய்வதால் உண்மையைக் கண்டுபிடித்து விடலாம். நாட்டினரின் மனவளர்ச்சியில் தனது பொறுப்பை ஓர் அரசாங்கம் உணர்ந்திருந்தால், அது இந்தக் குற்றத்தையும் கொள்ளை, கற்பழிப்பு முதலிய குற்றங்களோடு சேர்த்து வைத்து முக்கியமான கவனம் தந்து தீர்க்கமான புலன் விசாரணை செய்தல் வேண்டும். உள்ளவுயர்வுக்கே ஊறு விளைவித்து, ஒருவரது கொள்கை நோன்பைக் குலைப்பது கொள்ளையடிப்பதோடும் கற்பழிப்பதோடும் சேர்த்து மதிக்கப்பட வேண்டியதேயாகும்.