இந்தியாவின் உயிர்நிலையே மதமும் ஆன்மிகமும்தான்
நவீன சிர்த்திருத்தக்காரர்களும் போற்றும் பல கருத்துக்களைக் கொண்ட விவேகானந்தர் போன்றோரும், அன்னி பெசன்ட் போன்ற மேல்நாட்டு நல்லறிஞர்களுங் கூட இந்தியாவின் உயிர்நிலையே மதத்தை மையமாகக் கொண்ட அதன் ஆத்மிகந்தான் என்றே வலியுறுத்தியிருக்கின்றனர். அதனை மறந்து, மற்ற துறைகளில் இந்நாடு எத்தனை முன்னேற்றம் கண்டாலும் அது உயிரிழந்த சவத்திற்குச் செய்யும் அலங்காரமாகத் தானிருக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் உலகவியல் ஆசைகள் வெறித்தனமாக வலுக்காதவாறு ஹிந்து மதம் எனப்படும் சநாதன தர்மத்தினால் அவர்களுக்கு ஆன்மிகவியலை மதாசரணைகளாகவும் தத்துவக் கோட்பாடுகளாகவும் கொடுத்து, அவர்களது உலக வாழ்வு சம்பந்தப்பட்ட அனைத்தையும்கூட ஈசனை மையம் கொண்ட சடங்குகளாகப் புனிதப்படுத்தியளித்து, உலகியலுமே ஆன்மவியலுக்கு உபாயமாகுமாறு உயர்த்திச் சிறப்புச் செய்து ஆதி காலத்திலிருந்து உலக நாடுகளிடையில் தனிச் சிறப்புப் பெற்றது நமது பாரத நாடு. மதவியலின் மூன்று அங்கங்களில் ஒன்றான தர்மம் என்பதை விரித்துக் கூறும் சநாதன தர்ம சாத்திரங்கள், ஒரு மானுடன் செய்யக்கூடிய சகல காரியங்களுமே ஆன்ம நலனுக்குப் பயனாகும்படியாக அவை ஒவ்வொன்றுக்கும் விதி வகுத்துக் கொடுத்துள்ளன. நல்லொழுக்கமாம் அத்தர்மம் ஈசனைச் சுற்றியே படர்ந்திருப்பதாகவும் ஆக்கிக் கொடுத்திருக்கிறது. இவ்வழி முறைகளையே இந்நாட்டு மக்கள் பூர்வ காலத்திலிருந்து பற்றியழுகி வந்திருப்பதால்தான் பிற நாட்டின் மேன்மக்களும் ஒப்புக்கொண்டு பாராட்டுமாறு இந்நாட்டிலேயே அதிக பட்சமாக மஹான்களும் மத நூல்களும் தத்துவ சாஸ்திரங்களும் தோன்றி, பிற நாட்டுப் பூர்வ காலப் பெரியோர்களும் அவற்றிலிருந்து ஆன்மிக உயர்வு கண்டு வந்திருக்கின்றனர். இவற்றின் துணை கொண்டு தத்தமது சூழ்நிலைகளுக்கேற்ற சித்தாந்தங்களை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இவ்வாறாக, பிற நாடுகளின் உலகியற் போக்கைச் சமனப்படுத்தும் நாடாகவும் நமது நாடே திகழ்ந்திருக்கின்றது. இன்றைக்கும் மேநாட்டின் உலகியல் சக சாதனங்கள் யாவற்றையும் ஆண்டநுபவித்தும் வாழ்க்கையின் நிறைவைக் காணாத அந்நாடுகளின் பக்குவம் பெற்ற நன்மக்கள் நம் நாட்டுக்கே வந்து ஆன்மவியலில் ஈடுபட்டு அந்நிறைவை எய்துவதைக் கண்கூடாகக் காண்கிறோம்.
இவ்வாறு சிற்றின்ப உலகியலிலிருந்து பேரின்ப ஆன்மவியலுக்கு வழிகாட்டியாக உலக நாடுகளுக்கு உதவி புரிவதையே தனது தனிப்பெருமையாகக் கொண்ட நமது நாட்டில் அந்த ஆன்மவியலை நாமே புறக்கணித்து மேநாடுகளின் உலகியல் முன்னேற்றத்தில் மோஹித்து அதன் பின்னேயே ஓடும் பேதமையை மெல்ல மெல்லப் பற்றிக்கொண்டு சுதந்திரம் பெறும் இச்சமயத்தில் அது முற்றியும் விட்டது.