மேல் நாட்டினரின் மறைமுக சாமர்த்தியமும் இரு 'புரட்சி'களும்

மேல் நாட்டினரின் மறைமுக சாமர்த்தியமும் இரு 'புரட்சி'களும்

சாமர்த்தியசாலிகளான அவர்கள், பெரும்பாலும் மறைமுகமாகவே தங்கள் காரியமாகிய ஆட்சி பிடிப்பதையும், அது மாத்திரமின்றி நம் நாட்டின் உயிர்நிலையான மதவியலையே நாம் பின்தள்ளி, அவர்களது உலகியல் வலையில் பிடிபட்டு, வாழ்க்கை முறையை முற்றிலும் அவர்தம் பாணியிலேயே மாற்றிக்கொண்டு, அவர்களது ஊழிய வர்க்கமாக இருப்பதிலேயே பெருமைப்படுபவர்களாக ஆகும்படியும் பலவித சாதுரிய உபாயங்களால் வெற்றிகரமாக நடத்திக்கொண்டுவிட்டனர். தமது உலகியல் நாகரிகம் நம்முடைய ஆன்மிய நாகரிகத்திலும் மேம்பட்டது என நாம் மயங்குமாறு அவர்கள் செய்ய முடிந்ததே இதற்குக் காரணம். இதற்கு இரு 'புரட்சிகள்' உதவின.

அவர்கள் இங்கு வந்த காலத்தை அடுத்தே அவர்களது நாட்டில் பிரமிக்கத்தக்க நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஆரம்பித்தன. இப்போக்கு, நீராவிச் சக்தியில் பெரிய பெரிய இயந்திரங்களை இயக்கி வேக கதியில், குறைந்த பொழுதில் ஏராளப் பண்டங்களை உற்பத்தி செய்து, கைத்தொழிலாக நடந்த குடிசைத் தொழிலைப் பின் தள்ளி, ஆலைத் தொழில் என்பதைக் கொணர்ந்து தொழிற்புரட்சி என்ற Indus trial Revolution -ல் பெருமித ஸ்தானம் பெற்றது. இதனால் ஏற்பட்ட 'புரட்சி' என்னவெனில், பெரும் ஆலைகளை நிருமாணித்து அவற்றில் ஏராளமான பண்டங்களைக் குறுகிய காலத்தில் இயந்திரங்களின் மூலம் உற்பத்தி செய்து கைத்தொழில் குடிசைத் தொழில்களுக்கு அவசியமில்லாமல் செய்ததே.

சிறிய ஜனத்தொகையும், உலகியல் சுகபோக சாதனங்களிலேயே நாட்டமுள்ள மனப்பான்மையும் கொண்ட மேநாடுகளுக்கு அது நலன் பயக்கலாம். ஏனைய நாடுகளிலும் தங்களுக்குக் காலனிகள் பிடித்து, அவற்றிலிருந்து கச்சாப் பொருட்களைத் திரட்டி வந்து அவற்றைக் கொண்டு தங்களது ஆலைகளில் ஏராளமாக உற்பத்தி செய்து அதில் பெரும்பங்கை அக்காலனி நாடுகளின் தலையில் கட்டுவது இந்நாடுகளின் கொள்கையாதலாலும் இப்'புரட்சி' அவர்களுக்கு நற்பயனளித்தது. ஆனால் எளிய வாழ்க்கை - சீரிய சிந்தனை என்றும், சிறுகக் கட்டிப் பெருக வாழ்வது என்றும் உலகியல் சுகங்களை அத்தியாவசிய அதம பட்சத்திற்கே குறைத்து ஆத்ம பரிணாமத்திற்கே அதிக முக்கியத்துவம் தந்த நமது மாபெரும் ஜனத்தொகை கொண்ட பெரிய நாட்டின் உன்னத உள் நாகரிகத்திற்கு இப்'புரட்சி' பெருத்த ஹானியே உண்டாக்கியது. ஆயினும் நாமோ, தங்களது வியாபார லட்சியங்களுக்கு வெற்றி காணும் பொருட்டும், தங்களுக்கு அடிமைப்பட்டவர்களைத் தயார் செய்வதற்கென்றுமே அடிமைப்பட்டவர்களைத் தயார் செய்வதற்கென்றுமே அந்த ஐரோப்பிய அந்நியர்கள் செய்த சாமர்த்தியங்களில் - குறிப்பாக, அவர்கள் அளித்த கல்வி முறைத்திட்டத்தில் - மதிமயங்கி, நமது உள்நாகரிகத்தின் உயர்வை மறந்தோம். நவீன விஞ்ஞானத்தில் பின்தங்கியிருந்த நாம் அத்துறையில் அவர்களது கண்டுபிடிப்புகளைக் கண்டு அவர்களையே நம்மைவிட நாகரிகத்தில் மேலோராகவும் முன்மாதிரியாகவும்

மதித்து, அவர்தம் வெளி நாகரிகத்தையே நமக்கும் சுவீகரித்துக் கொண்டோம்.

போதாக் குறைக்கு இங்கிலாந்தின் தொழிற் புரட்சியுடனேயே பிரெஞ்சுப் புரட்சி எனப்படும் தனிமனித சுதந்திரப் புரட்சி கைகோத்துக் கொண்டு வந்தது. தவறான அரசாங்க அதிகாரக் கட்டுப்பாட்டிலிருந்து மனிதர் விடுதலை பெற வேண்டும் என்ற உத்தம லட்சியமானது அப்புரட்சியின் வரம்பற்ற போக்கால் சிதைந்து, அறத்தை நாட்டும் வழிமுறைகள், சட்ட திட்டங்கள் முதலியவற்றின் நல்ல கட்டுப்பாட்டிலிருந்தும் விடுபட்டு அவரவரும் மனம் போனபடிச் செய்யும் சுதந்திரம் என்ற ஒழுங்கீனத்தில் கொண்டுவந்துவிட்டது. அதன்பின் இவ்வரம்பரறியாத சுதந்திரப் போக்கு அம்மேனாட்டுச் சமுதாயத்தினர் எல்லோர் கருத்திலுமே சுவடு பதித்து, அவர்களுக்கிருந்த உலகளாவிய செல்வாக்கினால் ஏனைய நாடுகளிலும் பரவலாயிற்று. தலைமுறை தலைமுறையாக தர்மம், தெய்வம், பெரியோர் ஆகியோருக்குக் கட்டுப்பட்டு, இதன் வழி தத்தம் மனத்தையே கட்டுப்படுத்தி உலக ஆசைகளைக் குறைத்து ஆத்ம சத்தியத்தை நாடிய நம் மக்களும் மிகப் பரிதாபமாகப் புதிதே வந்த தான்தோன்றிச் சுதந்திரத்தால் கவரப்பட்டு அதற்குப் பலியாகலாயினர்.

இப்போக்குகள் முற்றிய நிலையில்தான் சுதந்திரம் வந்துள்ளது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is இந்தியாவில் மத உணர்வின் நலிவு;ஆயிரம் ஆண்டு வரலாறு காட்டுவது
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  நம் முன் நிற்கும் பெரிய கேள்விக்குறி
Next