இப்போது நாம் யாது செய்யப் போகிறோம்? நமது ஆத்மிக நாகரிகத்திற்குத் திரும்பி உலகியலில் எளியராகவும், உள்ள உயர்வில் பெரியவர்களாகவும் உலக நாடுகளிடையே தனி ஸ்தானம் பெற்ற ஒரே நாடாகி, அவர்களுக்கும் நல்வழி காட்டி உயர்வு பெற முயற்சி செய்யப் போகிறோமா? அல்லது நமது ஆன்மிக நாகரிகத்தை நாமே மனமறிந்து மிச்சசொச்சமும் பறிகொடுத்து, நமக்கு அரசியல் சுதந்திரம் கொடுத்து வெளியேறியவர்களின் உலகியல் நாகரிகத்திற்கே தொடர்ந்தும் அடிமைப்பட்டவர்களாக இருந்து, ஏனைய நாடுகளில் பின்தங்கிய ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கப் போகிறோமா? மனத்தை மிகவும் வியாகுலப்படுத்தும் பெரிய கேள்வியாக இதுவே இன்று எம் முன் நிற்கிறது.
பாரதம் மெய்யான சுதந்திர பாரதமாக இருக்கப்போகிறதா? அதாவது "ஸ்வ - தந்திரம்" என்பதை இந்நாட்டுக்கென்றே சுயமாக ஏற்பட்ட வாழ்க்கை முறை என்ற உண்மையான சுயமாக ஏற்பட்ட வாழ்க்கை முறை என்ற உண்மையான பொருளில் கண்டு அநுபவிக்கப் போகிறதா? அல்லது மேநாட்டினரிடம் அரசியல் சுதந்திரம் பெற்றிருந்தும் இந்தியர் உடம்புக்குள் உள்ள மேநாட்டினரின் ஆவியாக நம்மவர்களே சட்டதிட்டங்கள் செய்து, அவர்களது கொள்கை, வாழ்க்கை முறை ஆகிவற்றுக்கே இனியும் நாட்டின் உயிரானது பரதந்திரப்பட்டிருக்கும் நிலைதான் வாய்க்கப்போகிறதா?