கல்வித் திட்டத்தில் மாற்றம்;மத போதனைக்கு முக்கியத்துவம்
இவ்வகை செக்யூலரிஸத்தைச் சுதந்திர பாரத அரசாங்கம் மேற்கொள்ளும்போதில் இங்கு ஆன்மவியல் புத்துயிர் பெற்று உள்ள உயர்வு ஏற்படக் குறிப்பாகச் செய்யக் கூடியதும் செய்ய வேண்டியதுமான ஒரு நற்பணியைக் கூற விரும்புகிறோம். அதாவது, உலகியல் அறிவில் தேர்ச்சி பெறுவதையே ஒரே குறியாகக் கொண்டு, உள்ள வளர்ச்சிக்கான மதபோதனையை அடியோடு தள்ளிவிட்டதான, ஆங்கிலேயர் வகுத்த கல்வித் திட்டம் இனியேனும் மாற்றப்பட வேண்டும். இம் முறையால் மிகவும் பாதிப்புற்றிருப்பது ஹிந்து மதத்தினரே, ஹிந்து மதம் தவிர, பிறமதம் சார்ந்தோர் மாத்திரம் தங்களுக்கெனவுள்ள பள்ளிகளில் தமது மதபோதனையை நன்கு நடத்துவதாகவும், பெரும்பான்மையினரான ஏனைய ஹிந்துப் பள்ளி மாணவர்கள் அதனைப் பெறாமல் நன்னெறி போதனை (Moral Instruction) என்று பெயரளவுக்கு, பரீட்சைக்குரிய பாடமாகவும் இல்லாமல் ஏதோ சிறிது படிப்பதுமாகவே, ஆங்கிலேய அரசாங்கத்தினர் செய்துவிட்டனர். எனவே பள்ளிப் படிப்பு, அதன் தொடர்ச்சியாக வீட்டிலும் 'ஹோம் ஒர்க்', விளையாட்டு என்பனவே சிறார்களின் பொழுது முழுதையும் கவர்ந்துவிட்ட நிலையில் ஹிந்து மதச் சிறார்களுக்குச் சமய அறிவும், அதனால் ஏற்படும் மதாபிமானமும், மனத்தில் நன்கு பதியக் கூடிய இளவயதில் மறுக்கப்பட்டு விட்டன. இதுவே ஹிந்துக்களுக்குத் தமது நாகரிகத்தில் அகௌரவ புத்தியை ஏற்படுத்தி, மேல் நாட்டு நாகரிகத்தில் மோஹமூட்டியிருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம். இதனை அடித்தளத்திலிருந்து மாற்றி, மத போதனைகளும் பெயரளவுக்கின்றி, வெவ்வேறு மத மாணவரும் அவரவர் மதத்தில் ஆழ்ந்த போதனை பெறுமாறு புஷ்டியான ஸ்தானமளித்து புதிய கல்வித் திட்டம் வகுத்து மக்களின் உள்ள வளர்ச்சியை உண்மையாகவே பேண வேண்டியது சுதந்திர அரசாங்கத்தின் ஒரு முக்கியமான கடமையாகும்.