அரசியல் சுதந்திரம் போல் ஆன்மிய சுதந்திரத்திற்காகவும் மக்களே போராட வேண்டும்

அரசியல் சுதந்திரம் போல் ஆன்மிய சுதந்திரத்திற்காகவும் மக்களே போராட வேண்டும்.

ஆயினும் போகிற போக்கைப் பார்க்கும்போது, 'இதையெல்லாம் புதிய பாரத சுதந்திர அரசாங்கத்தார் செய்வார்களா? அந்த விதத்திலேயே நமது தேசத்தின் அரசியல் நிர்ணயச் சட்டம் வகுக்கப்படுமா? என்ற வினாக்கள் எழத்தான் செய்கின்றன. நவீனப் புரட்சிக் கருத்துக்கள் கொண்ட தேசத் தலைவர்களிடமே முக்கியமாக ஆட்சிப் பொறுப்பு போயிருப்பதால், செக்யூலரிஸம் என்பதற்கு அரசாங்கம் எந்த மதத்தின் சம்பந்தமும் எவ்விதத்திலுமின்றி உலகியல் முன்னேற்றம் என்ற ஒன்றையே கருதி நடப்பது என்றுதான் தப்பர்த்தம் செய்துகொள்ளப்பட்டு, அந்த அனர்த்தமே காரியமாகப் போகிறதோ என்றுதான் தோன்றுகிறது.

எனவே இப்போது பொது ஜனங்களேதான் குறிப்பாக அவர்களில் ஏனைய நாடுகளின் உலகியல் சார்ந்த கொள்கைக்கு மாறாக பாரதத்திற்கேயான ஆத்மிக மரபில் நாட்டம் கொண்டோராக இன்றைக்கும் மிஞ்சியுள்ள அறிஞர் பெருமக்களேதான் - செயற்களத்தில் முழுமூச்சுடன் குதித்து, சகப் பிரஜைகளையும் தட்டியெழுப்ப வேண்டுமென வற்புறுத்துகிறோம். பாரதம் சுதந்திரம் பெற்றுள்ள இப்போதே அதை உண்மையான ஸ்வ-தந்திர ஆத்மிக நாடாகப் புத்துயிர் கொளச் செய்யும் அரிய வாய்ப்புக் கிட்டியுள்ளது. ஆனால் புதிய அரசாங்கம் அவ்வாய்ப்பை மனமறிந்து பறிகொடுக்கக்கூடிய நிலையே ஏற்படுமோ எனத் தோன்றுவதால் இந் நாட்டில் இன்றுமுள்ள உண்மையுணர்கிற மேன்மக்களே இவ்வாய்ப்பை அந்தரான்மப்பூர்வமாய் ஏற்று, மற்றோரையும் தட்டியெழுப்பும் பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு ஆர்வமுடன் ஈடுபடவேண்டுமென வற்புறுத்துகிறோம். அரசியல் சுதந்திரத்திற்கென ஆர்வத்துடன் போராடத் தொண்டர்படை திரண்டது போலவே, நமது ஆன்மிகச் சுதந்திரத்திற்கும் ஒரு சாத்துவீகப் படை திரள வேண்டுமெனக் கூவியழைக்கிறோம்!இதற்கு உறுதுணையாக என்றும் உடனிற்க ஈசனையும் கூவியழைத்து வேண்டுகிறோம் நன்மக்கள் யாவரையும் அவ்வாறு வேண்டவும் தூண்டுகிறோம்.

அரசியல் சுதந்திரப் போராட்டத்திற் போலவே இவ்வான்மியச் சுதந்திரப் போராட்டத்திலும் நமது நாட்டின் சகல மக்களும் ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக ஒன்றுகூடிச் செயற்புரிதல் வேண்டும். அந்நியராட்சியை அகற்றியது சுயாட்சியில் நாட்டைச் செவ்வனே உருவாக்குவதற்குத்தான். அந்நியராட்சியை அகற்றுவதில் ஒரே சமுதாயமாக ஒற்றுமை காட்டிய பாரத மக்கள் நாட்டை நல்லுருப்படுத்தும் பெரும் பொறுப்பினைப் பெற்றுள்ள இன்று தமக்குள் பேதங்கள் பாராட்டிப் பிரிந்து பிரிந்து நிற்கின் சுதந்திரம் பெற்றதன் பயனையே இழந்துவிட நேரிடும்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is கல்வித் திட்டத்தில் மாற்றம்;மத போதனைக்கு முக்கியத்துவம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  சிறுபான்மைச் சமூகத்தினரும் தேசப் பற்றுக் கொள்ளச் செய்வது பெரும்பான்மையினரின் அன்புக் கடமையாகும்
Next