தேசக் கொடியில் தர்ம சக்கரம் இடம் பெற்றதன் உட்காரணம்

தேசக் கொடியில் தர்ம சக்கரம் இடம் பெற்றதன் உட்காரணம்.

நாம் கருத்துச் செலுத்தாவிடினுங்கூட, நாம் அறியாமலே அவ்வீசனேதான் தனது தர்ம சக்கரம் நமது சுதந்திர நாட்டின் புதிய கொடியில் மத்திய ஸ்தானம் பெறச் செய்திருக்கிறாரென்றே தொடங்கினோம். நாமறிந்த அளவில், செல்வாக்குப் பெற்ற நவீனக் கொள்கைத் தலைவர்கள்தாம் சுதந்திர பாரதக் கொடியின் அமைப்பை வகுப்பதிலும் முக்கியம் பெற்றவர்கள். அவர்கள் உலகவியல் முன்னேற்றத்தையே பெரிதாகக் கருதுபவரெனினும், நல்லொழுக்கம், தியாகம், தீரம் ஆகியவற்றில் மிக்கவர்கள். தேசாபிமானம் என்று தங்களுக்குத் தோன்றும் ஒன்றில் தன்நலம் மறுத்துப் பற்றுதல் கொண்டவர்கள். அவர்கள் தெய்வ சம்பந்தமில்லாத நன்னெறிக் கோட்பாட்டை தர்மமாகக் கருதுபவர்கள். அத் தர்மத்தை நாட்டுப் பிரஜைகள் யாவரும் பற்றியழுக வேண்டும் என்பதே தமது கொள்கை என்பதைக் காட்டுமுகமாக நமது கொடியில் ஒரு புராதனச் சின்னம் நடுநாயகமாக இடம் பெறே வேண்டுமெனக் கருதினர். அவ்விதத்தில்தான் தற்போது நமது கொடியின் நடுவில் தர்ம சக்கரம் இடம் பெற்றிருப்பது.

தற்காலத்தில் நமது நாட்டில் வழங்காதது என்றே சொல்லக்கூடிய - தெய்வ சம்பந்தமற்ற - ஒரு பெருமதத்தின் சின்னம் என்பதாலேயே 'மதச் சார்பற்றவர்'களாகக் கருதப்படக்கூடிய அத்தலைவர்கள் இத் தர்ம சக்கரத்தை தேர்ந்தெடுத்தனர் என்றாலும் சாரநாத்திலுள்ள ஸ்தம்பத்தில் இடம் பெற்றுள்ளதான இச்சின்னம் சரித்திரப் பிரசித்தி பெற்றவரும், சாஸனம் தோறும் தம்மை 'தேவாநாம் பிரியன்' - 'தேவர்களுக்குப் பிரியமானவன்' - என்று தெரிவித்துக் கொண்டவருமான அசோகச் சக்கரவர்த்தியுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் நம்மெல்லோருக்கும் பெருமையூட்டுவதேயாகும். ஆயினும் பகவானைப் புறக்கணித்து 'அறநெறி மட்டுமே' என்ற நடைமுறைச் சாத்தியமற்ற தர்மம் குறித்துக் குறைபாடும் தெரியவே செய்கிறது. தனது உலக இராஜ்யத்தில் தர்மம் என்ற சட்டத்தை விதித்து நடத்துபவனாகவும், அதனைப் பின்பற்றுவோர்க்கு நலன்கள் வழங்குபவனாகவும், அல்லாதாரைத் தண்டிப்பவனாகவும், அவர்களுக்குப் பிறவிகளை உண்டாக்கும் ஓர் உயிருள்ள ஈசனைக் காட்டி அவனிடம் பிரியம், பயம் இரண்டுங் கலந்த பக்தி என்பது சுவாபாவிகமாக (தன்னியல்பாக) ப் பிறக்கச் செய்தாலே பொதுஜன சமூகம் தர்மம் என்ற ஒழுங்குமுறைக் கோட்பாட்டைப் பின்பற்றும். இந்த யதார்த்த உண்மையை மறந்து அறநெறியை மட்டும் போதித்த அம்மதம் நடைமுறையில் பயன் தரவில்லை. அம்மதம் பெரியோர்களும் சிறிது காலத்திலேயே நாடெங்கிலுமிருந்த அவர்களது சங்கத்தின் அலங்கோலப் போக்கிலிருந்து இவ்வுண்மையைக் கண்டு தெளிந்தனர். அதன் விளைவாக அவர்கள் தம் மத ஸ்தாபகரையே அந்த ஈசனின் இடத்தில் வைத்து ஹிந்துக்கள் தங்களது கடவுளருக்கு எழுப்பியதை விடவும் மிகப் பெரிய பிம்பங்களும், ஆலயங்களும் அவருக்குச் சமைத்து வழிபட்டு மந்திராதி ஆகமங்களும் வகுத்தனர். அதோடு ஹிந்துமத தேவதா கணங்களையே

நேராகவே தழுவலாகவோ தமது மதத்திலும் இடம் பெறச் செய்தனர். தெய்வ சம்பந்தமற்ற தர்மத்தைத் தனது இராஜ்யத்தில் பரப்பியதாக இன்றைய சீர்திருத்தவாதத் தலைவர்கள் கருதும் அசோகச் சக்கரவர்த்தியும் தம்மைத் 'தேவர்களுக்குப் பிரியமானவன்' என்ற விருதினாலேயே தெரிவித்துக் கொள்வதும் அம்முறையில்தான். இதைக் கவனியாது, அம்மத ஸ்தாபகர் அம்மதத்தின் மூல உருவத்தை தெய்வ சம்பந்தமில்லாததாகக் கூறி, அதைத் தமது 'தர்ம சக்கரப் பிரவர்த்தனம்' (ஸம்ஸ்கிருதத்தின் திரிபு மொழியான பாலியில் 'தம்ம சக்கப் பவர்த்தனம்') என்ற பிரசித்தமான வாக்குத் தொடரால் குறிப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நமது கொடி நடுவில் சக்கரத்தைப் பொறிக்கச் செய்துள்ளனர்.

அந்த வாக்குத் தொடருக்குப் பொருள் 'தர்மமாம் சக்கரத்தை நன்கு சுழன்றோடச் செய்தல்', அதாவது 'அம்மதக் கோட்பாடுகளை நாற்றிசையும் பரப்புதல்' என்பதேயாகும். எப்படியாயினும் சுதந்திர பாரதத்தில் அறநெறி நன்கு பரவித் தழைக்குமாறு அரசாங்கம் பாடுபடும் என்ற உயர்ந்த இலட்சியத்திற்கு உருவகமாகவே தர்மசக்கரம் தற்போது கொடி நடுவில் பொறிக்கப்பட்டுள்ள தென்பது அம்மட்டில் மகிழ்ச்சிக்குரியதே.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is சிறுபான்மைச் சமூகத்தினரும் தேசப் பற்றுக் கொள்ளச் செய்வது பெரும்பான்மையினரின் அன்புக் கடமையாகும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  தேசிய இலட்சணம் வாசகமாக வேதவாக்கு
Next