சிறுபான்மைச் சமூகத்தினரும் தேசப் பற்றுக் கொள்ளச் செய்வது பெரும்பான்மையினரின் அன்புக் கடமையாகும்
சிறுபான்மைச் சமூகத்தினரும் தேசப் பற்றுக் கொள்ளச் செய்வது பெரும்பான்மையினரின் அன்புக் கடமையாகும் .
இவ்வறிக்கையில் நாம் சில சமூகத்தினர் கைக்கொண்ட முறை தவறுகளை எடுத்துக்காட்ட வேண்டியிருந்தது எதிர்காலத்திற்குப் படிப்பினை காட்டி எச்சரிக்கும் பொருட்டுத்தானேயன்றி, இன்று அச்சமூகங்களின் வழிவந்தோரிடம் ஹிந்து சமூகத்தினர் மன வேற்றுமை பாராட்டிப் பூசலிடுவதற்குத் தூண்டு முகமாகவல்ல. தங்களைப் போலவே இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தினரும் சம உரிமை பெற்ற சகப் பிரஜைகளே என்ற உணர்ச்சியை நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தினரான ஹிந்துக்களே முன்நின்று நடத்திக் காட்ட வேண்டுமென்பதே நமது விருப்பம். பிற மதத்தினர்களிடமும் அன்போடு பழகி இந்நாட்டிலுள்ள எல்லா மதப் பிரஜைகளும் ஒரே போல பாரதீயர்தாம் என்று அவர்கள் உணருமாறு செய்வதை ஹிந்துக்கள் ஒரு கடமையாக மதித்துப் பொறுப்புணர்ச்சியுடன் ஆற்ற வேண்டுமென்பது நமது விருப்பம். அவ்விதம் செய்தால் தான் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தோருக்கும் பாரதமே தமது தாயகம் என்ற சுதேசாபிமானம் உறுதியாக உருவாகி நிலைக்கும். சுதந்திரப் போராட்டத்தின் கடைசிக் கட்டத்தில் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தோரில் பலருக்கு இதற்கு மாறான உணர்ச்சி அச் சமூகத் தலைவர்களாலேயே தூண்டப்பட்டு அதனால் நிகழ்ந்த உற்பாதங்களை நாம் மறவாதிருப்பின் இவ்வாறு சிறுபான்மையினருக்குச் சதேசாபிமானம் பாரதத்திடம் உறுதிப்படாவிடில் எதிர்காலத்தில் எத்துணை அபாயம் ஏற்படக்கூடுமென்று காண்போம். மனிதகுலம் முழுவதற்கும் பொதுவான ஒரே ஈசனின் குடிமக்களாகவும் குழந்தைகளாகவும் நாட்டின் சகலப் பிரிவினரும் ஒன்றுகூடி உழைத்தால்தான் இந்நாட்டை உலகுக்கே உதாரணமானதோர் ஆன்மிய மையம் கொண்ட அமைதி நாடாக உருவாக்கவியலும்.