காவேரி தொடர்புள்ள மூன்று ரிஷிகள் ;
மூன்றாமவர் ஏரண்டகர்
காவேரியோடு ஸம்பந்தப்பட்டவர்களாக மூன்று ரிஷிகள் இருக்கிறார்கள். முதலாவதாக அவளுடைய பிதாவான கவேர மஹர்ஷி. அவர் ராஜரிஷி. கவேர புத்ரி என்பதால் தான் அவளுக்குக் காவேரி என்றே பெயர். 'காவேரி'என்பதைத் தமிழில் 'காவிரி'என்கிறார்கள். காக்காய் விரித்ததால் காவிரி, பாயுமிடமெல்லாம் 'கா'என்னும் சோலைகளை விரித்துக் கொண்டே போவதால் 'காவிரி'என்றெல்லாம் விளக்கம் சொல்கிறார்கள்.... பிதா கவேரர் அவளை வீட்டை விட்டு வெளிவராமல் கன்யகா தர்மப்படி காப்பாற்றி வந்தார்.
அடுத்த KS அகஸ்திய மஹர்ஷி. இவர் காவேரியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு, 'படிதாண்டாப் பத்தினி'என்பதற்கு ஒரு படி மேலாக அவளைத் தம்முடைய கமண்டலுவை விட்டு வெளியே வர முடியாதபடி பிரேமையினால் அடைத்து வைத்திருந்தார். ஆனால் இவள் கொடகு, கன்னட தேசம், தமிழ் தேசம், மூன்றின் ஜனங்களுக்கும் தாயாக அவர்களுடைய உடம்புக்கும் உள்ளத்துக்கும் தன் தீர்த்தத்தையே க்ஷீரமாக ஊட்ட வேண்டுமென்பதுதான் ஈச்வர ஸங்கல்பம். அந்த ஸங்கல்பம் காரியமாகணுமென்றுதான் பிள்ளையார் வந்து கமண்டலுவைத் தட்டிவிட்டார். அப்படியும் அவள் ஏதோ சின்ன நதியாக ஓடி முடிந்துபோன போதுதான் சோழ ராஜா அவளை வழி திருப்பிவிட்டுக் கொடகிலிருந்து கர்நாடகம், அப்புறம் தமிழ்நாட்டில் முதலில் கொங்குநாடு (கோயம்புத்தூர், சேலம்) அப்புறம் சோணாடு (திருச்சி, தஞ்சாவூர்) என்று பாய வைத்தார்.
தஞ்சை ஜில்லாவுக்கு அவள் வந்த பின்னும் ஒரு கட்டத்தில் அவள் முடிந்து போகாமல் அவளை விஸ்தரித்துவிட வேண்டியிருந்தது;அப்படி விஸ்தாரமாக ஓடப் பண்ணினவர்தான் மூன்றாவது KS. அவர்தான் ஏரண்டகர். முதல் இரண்டு ரிஷிகள் ஒரு ஸாதாரணப் பெண்ணுக்கான தர்மப்படிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காவேரியை இவர்தான் தெய்வத் தன்மை பொருந்தின மாதா என்று புரிந்து கொண்டு அவள் அநுக்ரஹம் இன்னும் பல ஊர்களுக்குக் கிடைக்கும்படியாக நீட்டிவிட்டார்.
அகஸ்தியரிடமிருந்து சோழ ராஜா வரம் பெற்றுக் காவேரியை நம் சீமைக்குக் கொண்டு வந்ததை 'மணிமேகலை'யில் சொல்லியிருக்கிறது. அந்த ராஜாவின் பேர் காந்தமன் என்று அதில் வருகிறது:
செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை
செங்குணக் கொழுகிய சம்பாபதி அயல்
பொங்குநீர்ப் பரப்போடு பொருந்தித் தோன்ற
சம்பாபதி என்பதுதான் காவேரிப் பூம்பட்டினம். காவேரி அங்கேதான் ஸமுத்திர ராஜனோடு ஸங்கமிக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். அதனாலேயே அதற்கு அப்படி (காவேரி பூம்பட்டினம் என்று) பெயர். காவேரி அங்கே வருவதற்கு முற்காலத்தில் அந்த சோழ ராஜதானிக்கு சம்பாபதி என்றே பெயர். புகார் என்றும் ஒரு பெயர் உண்டு. 'பூம்புகார்'என்று சிறப்பித்துச் சொல்வதுண்டு.