நடுவிலே வந்த ஆபத்து

நடுவிலே வந்த ஆபத்து

இப்போதைய தஞ்சாவூர் ஜில்லாவுக்குச் சோழ ராஜாவின் பின்னால் வந்த காவேரி முதலில் சம்பாபதி வரைக்கும் பாய்ந்து ஸமுத்திரத்தில் விழவில்லை. இது சீர்காழிக்குத் தென்கிழக்கில் பத்து மைலில் உள்ள இடம். முதலில் காவேரி அவ்வளவு தூரம் வரவில்லை. கும்பகோணத்துக்குக் கிட்டத்தில் கொட்டையூர் என்று இருப்பதாகச் சொன்னேனே, அதற்கும் இன்னும் கொஞ்சம் தள்ளி அதாவது கும்பகோணத்திலிருந்து நாலு மைல் மேற்கே உள்ள ஒரு இடத்தோடு காவேரி முடிந்து விட்டது.

ஸாதாரணமாக ஒரு நதி என்றால் அது ஸமுத்திரத்தில் விழுந்துதான் முடியும்; அல்லது வேறே ஒரு மஹாநதியில் கலந்துவிடும் - யமுனை கங்கையில் கலக்கிறாற் போல. கும்பகோணத்துக்கு மேற்கே ஸமுத்திரமோ வேறே நதியோ ஏது? பின்னே, காவேரி என்ன ஆச்சு என்றால், அந்த இடத்தில் பெரிசாக ஒரு பிலம் இருந்தது; அதாவது பூமிக்கடியில் குகை மாதிரி, 'டன்னல்'மாதிரி, அதுபாட்டுக்குப் பெரிசாக ஒரு பள்ளம் போய்க் கொண்டேருந்தது. அந்தப் பள்ளம் அழகாக பிரதக்ஷிண ரீதியில் சுழித்து வெட்டினது போல பூமியைக் குடைந்து கொண்டு போயிருந்தது. இந்தப் பள்ளத்தின் பக்கம் காவேரி வந்ததோ இல்லையோ, அப்படியே அந்தப் பிரதக்ஷிணக் குடைசலில் வலம் வருகிறது போல சுழித்துக் கொண்டு உள்ளே ஓடி, அகாதமான பிலத்துக்குள் மறைந்தே போய் விட்டது. அதனால் அந்த ஊருக்கே திருவலஞ்சுழி என்று பேர் ஏற்பட்டு விட்டது.

''சோழ சீமையிலே இன்னம் நாற்பது ஐம்பது மைல் காவேரி ஓடி, வளம் உண்டாக்கி விட்டு ஸமுத்திரத்தில் விழும் என்று நினைத்தால், இப்படி நடுப்பறவே மறைந்து போய் விட்டதே''என்று ராஜாவுக்கு துக்கம் துக்கமாக வந்தது.

இதிலே இன்னொரு சமாசாரம் என்னவென்றால், இந்த மாதிரி திடுதிப்பென்று ஒரு நதி பள்ளத்தில் விழுந்து மறைந்து போகாமல், ஸம பூமியிலேயே கொஞ்சம் வித்யாஸமாயுள்ள ஏற்ற-இறக்கங்களை அநுஸரித்து ஓடி, இயற்கையாக ஸமுத்திரத்திலே விழும்போதுதான், கடைசியில் ஸங்கமிக்கின்ற இடத்துக்குக் கொஞ்சம் முன்னாலிருந்து ஆரம்பித்து, அதுவரைக்கும் ஆறு அடித்துக் கொண்டு வந்திருக்கும் பூஸாரமெல்லாம் அதை சுற்றிப்பரவி, டெல்டா என்று 'ஃபார்ம்'ஆகி, ரொம்பவும் வளப்பமான பகுதி உண்டாகும். இப்படி இல்லாமல், ஸாரமெல்லாம் வீணாகிப் பள்ளத்துக்குள் போகிறதே என்று ராஜாவுக்கு வியஸனமாய் விட்டது.

நெய்வேலியில் லிக்னைட் எடுப்பதற்குத் தோண்டியபோது முதலில் பூமிக்கடியிலிருந்து எத்தனையோ கோடி காலன் ஜலம் பம்ப் பண்ண வேண்டியிருந்ததைப் பார்த்தோமில்லையா?சில 'கோல் மைன்'களில் [நிலக்கரிச் சுரங்கங்களில்] பூமிக்கடியிலிருந்து ஜலம் குபீர் என்று வெள்ளமாக வந்து பொருட் சேதம், உயிர்ச் சேதம் உண்டாக்குவதாகவும் அவ்வப்போது 'ந்யூஸ்'பார்க்கிறோம். இதற்கான பல காணங்களில் ஒன்று இம்மாதிரி இடங்களில் பூர்வத்திலே ஏதாவது ஆறு பூமிக்குள்ளே போய்ப் புகுந்து கொண்டிருப்பதாகும். மேலே பூமி மட்டத்திலே ஆறே இல்லாமல் வற்றிப்போயும் கூட, அடியிலே மட்டும் ஆதியில் தேங்கின ஜலம் அப்படியே இருப்பதுண்டு. அப்புறம் அந்த பிரதேசத்தில் எதற்காகவாவது வெட்டி, கொத்தி, தோண்டும்போது அது பொங்கிவந்து பெரிய உத்பாதத்தை ஏற்படுத்துகிறது.

''அருள் தாயாகத் தமிழ் தேசத்துக்கு வந்திருக்கிற காவேரியின் ஸாரம் வீணாக்கப்படாது;பிற்காலத்தில் அவள் உத்பாத ஹேதுவாகிக் கஷ்டத்தைத் தருபவளாக ஆகிவிடக்கூடாது. இதற்கு என்ன செய்யலாம்?பிலத் துவாரத்துக்குள் ஓடி அந்தர்தானமாகி விட்டவளை எப்படி வெளியிலே கொண்டு வந்து, ஸமுத்ரத்துக்குக் கொண்டு சேர்பபது?''என்று ராஜா நிரம்பவும் விசாரமாக யோஜித்தார். அதே யோஜனையாக உலாத்திக் கொண்டிருந்தார்.

அப்போது பக்கத்தில் கொட்டையூரில் ஏரண்டக KS தபஸ் கொண்டிருப்பதைப் பார்ததார். அவருகு ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, பிலத்துக்குள் போய்விட்ட காவேரி வெளியிலே வருவதற்கு அவர் அநுக்ரஹம் செய்ய வேண்டும், உபாயம் சொல்லவேண்டும் என்று பிரார்த்தனை பண்ணினார்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is காவேரி தொடர்புள்ள மூன்று ரிஷிகள் ; மூன்றாமவரி ஏரண்டகர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  மஹரிஷி கண்ட உபயம்
Next