இவர் இறங்குவதற்குள், முன்னே பிலத்தில் பிரவேசித்த காவேரி அண்டர்-க்ரவுண்டாகவே நாற்பது ஐம்பது மைல் ஓடிவிட்டான். இவர் இங்கே இறங்கிப் பலியானோரோ இல்லையோ, அந்த க்ஷணமே, அந்த நாற்பது ஐம்பது மைல் தாண்டியுள்ள இடத்தில் பூமிக்கடியிலிருந்து அப்படியே பீச்சிட்டுக் கொண்டு வெளியில் வந்துவிட்டாள். மேலே வருவதற்கு அவள் கன வேகமாக வழி பண்ணிக் கொள்ளும்போது முதலில் பெரிசாக ஒரு பள்ளம் உண்டாயிற்று. அதனால் இந்த இடத்துக்கு இப்போதும் 'பெரும் பள்ளம்'என்று ஒரு பேர் இருக்கிறது. ஜனங்கள், ''இதென்னடா பள்ளம்? பூகம்பமா என்ன?'' என்று பார்த்துக் கொண்டே இருக்கும் போது அதில் அன்டர்-கிரௌண்டாக இருந்த காவேரி கிடுகிடுவென்று நிரம்பி பூமிக்கு வெளியிலே வந்தாள்.
பூமியை அவள் தொடுகிற இடத்தில் லிங்கம் ஒன்று இருந்தது. இந்த லிங்கத்தை பூஜை பண்ணித்தான் மஹா விஷ்ணு வலம்புரிச் சங்கு பெற்றார் என்பது கதை. அதனால் அந்த லிங்கத்துக்கு வலம்புரீச்வரர் என்று பெயர். அவரை வலம் புரிந்தே, அதாவது பிரதக்ஷிணம் பண்ணிக் கொண்டே காவேரி மேற்கொம்டு பூமிக்கு மேலாக ஓடினாள். அந்த ஸ்தலத்துக்கு திருவலம்புரம் என்றும் பெயர் இருக்கிறது.
பாடல் பெற்ற ஸ்தலங்கள் மொத்தம் 274. அதில் மூவரும் பாடியவை நாற்பத்து நாலுதான். இந்த நாற்பத்து நாலில் திருவலம்புரமும் ஒன்று.
திருவலஞ்சுழியில் பிலத்துக்கு உள்ளே போன காவேரி திருவலம்புரத்தில் மறுபடி வெளியிலே வந்தாள். அங்கிருந்து தென் கிழக்காக மூன்று மைல் ஓடி சம்பாபதி, புகார் என்றெல்லாம் சொல்லப்படும் ஊரில் காவேரிப்பூம்பட்டினமாக்கிக் கொண்டு அங்கேயே ஸமுத்திரத்தில் கலந்து விட்டாள்.