ஈசனின் அருள் லீலை
அவளோடு திருவலஞ்சுழியில் உள்ளே போன ஏரண்டகரிஷிக்கு ஸ்வாமி உயிர் கொடுத்து அவளோடேயே திருவலம்புரத்தில் வெளியே கொண்டு வந்தார் என்று கதை. அவர், ''போனால் போகட்டும் இந்த உயிர்''என்று தியாகம் பண்ணினது பண்ணினதுதான். ஆனால் இப்படிப்பட்ட தியாகியைப் பலிவாங்கின பழி காவேரிக்கு இருக்கப்படாது என்றோ, அல்லது தானாக அவருடைய சரீரம் விழுகிற வரை ஜனங்களுக்கு அவரைத் தரிசிப்பதால் ஏற்படும் பரிசுத்தி நீடிக்கட்டும் என்றோ ஸ்வாமியை அவருக்குப் புத்துயிர் கொடுத்துவிட்டார்.
அதுமட்டுமில்லை, அவர் லோகத்தின் கஷ்டத்தைத் தாம் தாங்கிக் கொண்டாரென்றால், ஸ்வாமியோ அவர் தாங்கிக் கொண்ட பாரத்தைத் தாமே தம்மிடம் transfer பண்ணிக் கொண்டதாக [மாற்றிக் கொண்டதாக] இன்றைக்கும் காட்டிக் கொண்டிருக்கிறார்!
பிலத்தில் இறங்கின KS காவேரி தாரைக்குத் தம்முடைய தலையைப் பலியாகக் காட்டியதில் அவருடைய தலையிலே ஒரு பள்ளம் உண்டாகி விட்டது. இப்போது அவர் வெளியே வந்த பெரும்பள்ளத்திலிருந்த வலம்புரீச்வர லிங்கத்தின் தலைக்கு அந்தப் பள்ளம் இடம் மாறி விட்டது!ரொம்பவும் ஃபோர்ஸோடு வந்த கங்கையைக்கூட அநாயாஸமாக ஜடையிலே தாங்கிக் கொண்ட ஈச்வரன் இங்கே ஞானியும் தானும் ஒன்றே என்று காட்டுவதற்காகத் தலையில் பள்ளம் விழுந்தவராக விளங்குகிறார்!
பகீரதன் ஆகாசத்திலிருந்த கங்கையை பூமிக்கு இறக்கினான். ஏரண்டகர் பூமிக்கு அடியில் மறைந்து போன காவேரியை நில மட்டத்துக்கு ஏற்றினார்.
திருவலம்புரத்தில் காவேரி வெளியிலே வந்த பிற்பாடு, திருவலஞ்சுழியிலிருந்து அந்த இடம் வரைக்கும் அவள் 'அன்டர் கிரௌண்டாக'இருந்ததும் மாறி, பூமிக்கு மேலேயே ஓடலானாள். கொடகில் அவதாரம் பண்ணினவள் புகாரில் ஸமுத்திரத்தில் புகும்வரையில் முறிபடாத ஜீவநதியாக ஆனாள். முடிகிற இடத்தில் Granary of Tamilnadu - தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் - என்னும்படியாகத் தன் ஸாரத்தை எல்லாம் விநியோகித்து 'டெல்டா'வும் உண்டாக்கி விட்டாள். இதற்கெல்லாம் காரணம் ஏரண்டகரின் தியாகம்தான்.