சுந்தரருக்கு அருள்

சுந்தரருக்கு அருள்

அப்பர் - ஸம்பந்தர்களுக்கு அன்பிலில் ஏற்பட்டாற் போல ஸுந்தரரும் திருவையாற்றுக்குப் போனபோது காவேரியில் பெரிய வெள்ளமாக வந்து அவரைத் தடுத்தது. அவர் எதிர்க்கரையிலேயே நின்று கொண்டு, "ஐயாறுடைய அடிகளே! ஓலம் ஓலம்!" என்று கதறினார். இங்கேயும் அப்பாவுக்கு முந்தித் திருவையாற்றுப் பிள்ளையார்தான் பக்தர் கஷ்டத்தைத் தெரிந்து கொண்டு அவருடைய ஓலத்தை அப்பாவுக்குத் தாமே 'ரிலே' பண்ணினார். அதனாலே அவருக்கு 'ஓலமிட்ட விநாயகர்' என்றே பெயர். தோழர் - 'தம்பிரான் தோழர்' என்று ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளைச் சொல்வார்கள் - அந்தத் தோழர் ஓலமிட்டு, அதை ஜ்யேஷ்ட புத்ரனும் 'ஸெகன்ட்' பண்ணின தத்க்ஷணமே ஸ்வாமி வெள்ளத்தை வடிய வைத்தார்.

ஃப்ரன்ட் என்கிற முறையிலே ஸுந்தரர் ஸ்வாமிகிட்டே எதை வேணாலும் கேட்பார். பரவை நாச்சியார் என்று அவருக்கு ப்ரியாமானவள். அவள் ஸுந்தரமூர்த்திகளின் ஊரான திருவாரூர் கோவிலில் நாட்யம் பண்ணுகிறவர்களில் பரம பக்தையான ஒரு உத்தமி. ரொம்பவும் தானதர்மிஷ்டை. அவள் வாரிக் கொடுக்கிறதற்காக ஸுந்தரர் அப்பப்போ "பொன்னு தா", "நெல்லு தா" என்றெல்லாம் ஸ்வாமியிடம் நச்சரித்துப் பெற்றுக் கொள்வார். அப்படி, 'திருமுதுகுன்றம்' என்று தேவாரத்தில் சொல்லியிருக்கும் விருத்தாசலத்திலேயும் அவர் பொன் கேட்டு, ஸ்வாமியும் பன்னிரண்டாயிரம் பொன் கொடுத்தார். ஸுந்தரர் அதோடு விடாமல் "கொடுத்தது மட்டும் போறாது. இதைக் காபந்து பண்ணி எடுத்துண்டு நான் ஊர் ஊராப் போயத் திருவாரூர் சேருகிறது கஷ்டம். ஆனதாலே இதை நீயே எப்படியாவது அங்கே சேர்த்திடு" என்றார்.

ஸ்வாமியும் "ஸரி" என்றார். ஆனால் கொஞ்சம் லீலை பண்ணவும் நினைத்து, "இந்தப் பொன்னை இங்கே ஓடற மணிமுத்தாற்றிலே போட்டுடு. அப்பறம் ஊர் ஊரா என்னைப் பாடிண்டு திருவாரூருக்குப் போய் அங்கே கமலாலயத்திலே - அதுதான் அங்கே உள்ள பிரஸித்தி பெற்ற திருக்குளம் - ஈசான்ய 'வடகிழக்கு' மூலையிலிலேருந்து கலெக்ட் பண்ணிக்கோ" என்றார்.

"அப்படியே" என்று மணிமுத்தாற்றிலே பொன் மூட்டையைப் போடப் போன ஸுந்தரருக்கு ஒரு ஸந்தேஹம் வந்தது. "நாம் படுத்தியெடுக்கிறோம் என்கிறதாலே ஸ்வாமி ஏதாவது கொனஷ்டை பண்ணி வெக்கப் போறார் இங்கே உசந்த மாற்றுத் தங்கமாக் குடுத்துட்டு கமலாலயத்தில எடுக்கறப்போ மாற்று கொறைச்சுடப்போறார்" என்று நினைத்தார். மாற்று என்பது காரட் மாதிரி. 24 காரட், 14காரட் என்கிறோமே அப்படி. 24-ஐயே 14-ஆக ஸ்வாமி பண்ணி விடப் போகிறாரே என்று ஸுந்தரர் நினைத்தார். இரண்டு இடத்திலேயும் உரைத்து மாற்றுப் பார்த்துக் கொள்வதுதான் நல்லது என்று நினைத்தார்.

உடனே அவருக்கு ஸஹாயம் செய்வதற்காகப் பிள்ளையார் அவர் பக்கத்தில் வந்து நின்றார். பொன்னை உரைத்துப் பார்த்து, பத்தரை மாற்று - 24 காரட் - என்று - 'ஸர்டிஃபை' பண்ணினார். விருத்தாசலம் கோவிலில் அறுபத்து மூவருக்குப் பக்கத்தில் 'மாற்றுரைத்த பிள்ளையார்' என்றே அவர் இருக்கிறார், அறுபத்து மூவரையும் சொல்லித் திருத்தொண்டத்தொகை பாடியவர் ஸுந்தரர்தானே?

அந்தப் பொன்னில், பின்னாடி 'கம்பேர்' பண்ணுவதற்காக ஸாம்பிளாக 'மச்சம்'

என்று ஒரு துணுக்கை ஸுந்தரர் வெட்டியெடுத்துக் கொண்டு மூட்டையை அப்படியே மணிமுத்தாற்றில் போட்டு விட்டார்.

அப்புறம் க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகப் பாடிக்கொண்டே போய்த் திருவாரூரை அடைந்தார். பரவை நாச்சியாரைக் கமலாலயத்தின் ஈசான்யத்தில் படித்துறையில் நிறுத்தி விட்டுக் குளத்துக்குள் இறங்கினார், பொன்னை எடுப்பதற்காக

இவர் நினைக்காத ஒரு கொனஷ்டையை ஸ்வாமி பண்ணினார். ஏதோ மாற்றுதான் குறைந்தது என்றில்லாமல் முதலுக்கே மோசமாக ஸ்வாமி விளையாடினார். இவர் தேடு தேடு என்று தேடியும் பொன் மூட்டையே அகப்படவில்லை!

பரவையானால், "எங்கேயோ ஆத்துலே போட்டுட்டு இங்கே கொளத்துலே தேடறீரே ஸ்வாமி" என்று பரிஹாஸம் பண்ணினாள். அவள் சொன்னது பிற்பாடு வசனமே ஆகிவிட்டது!

ஸுந்தரருக்கு எரிச்சல் பொத்துக்கொண்டு வந்தது. உணர்ச்சி ஜாஸ்தியானால் அவருக்குப் பாட வந்துவிடும். ஆனால் வழக்கம் போல் நிந்தாஸ்துதி பண்ணினால், இந்தத் தடவை ஸ்வாமி காது கொடுக்காமலிருந்து, ஒரு பொம்மனாட்டிக்கு முன்னே தாம் இன்னும் அவமானப் படப் போகிறோமே என்பதால் ரொம்பவும் தைன்யமாகவே குழைந்து வேண்டிக் கொண்டு பதிகம் பாடினார். பொன் ஸமாசாரமானதால் "பொன் செய்த மேனியினீர்!" என்றே ஆரம்பித்துப் பாடினார். (பிறிதொரு சமயத்தில்) "பொன்னார் மேனியனே!" பாடினதும் ஸுந்தரர்தான்.

ஸ்வாமி இவருடைய பாட்டைப் பெறணுமென்றே தான் சோதித்தது இவர் பாடினவுடனே பொன் அகப்படும்படிப் பண்ணிவிட்டார்!

இங்கேயும் பிள்ளையார்தான் வந்து மாற்றுப் பார்த்தார். அதனால் திருவாரூரிலும் ஒரு மாற்றுரைத்த விநாயகர் உண்டு.

ஸுந்தரர் நினைத்த கொனஷ்டையையும் ஸ்வாமி இப்போது பண்ணியிருந்தார்!மச்சத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், மாற்று குறைந்திருந்தது!14 காரட்!

பாட்டு ப்ரியரை ஸுந்தரர் மறுபடி ஸ்துதித்தார். ஸ்வாமியும் பதினாலை இருபத்து நாலாகவே மாற்றிக் கொடுத்தார்.

அப்புறம் ஒரு ஸமயம் ஸுந்தரமூர்த்தி, சேரமான் பெருமாளுடைய ஊருக்குப் போய் அரண்மனையில் தங்கி விட்டுப் புறப்பட்டார். ராஜாவான சேரமான் அவருக்கு ராஜோபசாரம் பண்ணி வழியனுப்பும்போது மூட்டை மூட்டையாக - 'பொதி' என்று சொல்வது, அப்படி - நிறையப் பொதி பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினார். ராஜஸேவகர்கள் அவற்றைத் தூக்கிக் கொண்டு வர, ஸுந்தரர் கொங்கு நாட்டு வழியாகத் திருவாரூர் திரும்பிக் கொண்டிருந்தார்.

திருப்பூருக்குக் கிட்டே திருமுருகன்பூண்டி என்ற க்ஷேத்ரம். அங்கே காட்டு வழியில் ஸுந்தரர் ஆள்களோடு போய்க் கொண்டிருந்தார். அந்த ஊர் ஸ்வாமி பார்த்தார். 'வழக்கமாக நம்மிடம் அதைத்தா தா, இதைத் தா என்று நச்சரித்தபோது ஒரு க்ஷேத்ரம் விடாமல் நம்மிடம் வந்து பாடியவன், இப்போது நம்மை லக்ஷ்யமே பண்ணாமல் அல்லவா பெரிய ராஜஸம்பாவனையுடன் போகிறான்? நாம் ஏதாவது கொடுத்தால், 'நீயே அதைத் திருவாருரில் சேரு' என்கிறவன், ராஜ ஸேவகர்கள்தான்

நிஜமான துணை என்ற தைரியத்தில்தானே இப்போது காட்டிலே இத்தனை பொதியுடன் போகிறான்?' என்று நினைத்தார். கொஞ்சம் சோதனை லீலை செய்வதற்கு முடிவு பண்ணினார்.

பூதகணங்களை வேடர்களாக ஆக்கி ஸுந்தரர் கோஷ்டியை எதிர்த்து வழிப்பறி செய்ய வைத்தார். உயிரக்கு ஹானி செய்யாமல் அந்த கணங்கள் பொருளை மட்டும் பிடுங்கிக் கொண்டு ஸ்வாமியிடம் வந்து பொதியைக் கொடுத்துவிட்டன.

எல்லாம் பறி கொடுத்துவிட்டு ஸுந்தரர் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த ஊர்ப் பிள்ளையாருக்குத்தான் கருணை பெருகிற்று. ஊருக்குப் பேர் திருமுருகன்பூண்டி. அந்த முருகன் "வைதாரையும் வாழ வைப்பான்" என்கிறார்கள். ஆனால் அந்த ஊரிலோ அவனடைய அண்ணாக்காரர்தான் தன்னை 'வயிறுதாரி' என்று ஸுந்தரர் வைததையும் நினைக்காமல் அவரை வாழவைக்க நினைத்தார்! அதனால் கோவிலை விட்டே கொஞ்ச தூரம் ஓடி வந்தார். சற்று தூரத்தில் ஸுந்தரரைப் பார்த்தவுடனேயே ஒரே கூவலாகக் கூவி அவரைக் கூப்பிட்டார். "இங்கே கோவிலில் இருக்கிற என் அப்பாதான் கணங்களை அனுப்பி வழிப்பறி செய்தது. அதிலே கணபதியான எனக்குப் பங்கு இல்லை. c கோவிலுக்கு வந்து அவரைப் பாடு. c பாடிவிட்டால் அவர் மனஸு குளிர்ந்து, தான் பண்ணினதை அப்படியே மாற்றி விடுவார்" என்று தகவல் கொடுத்து உபாயமும் சொல்லிக் கொடுத்தார். ஸுந்தரமூர்த்தியைக் கூவிக் கூவிக் கூப்பிட்ட அந்தப் பிள்ளையார் 'கூப்பிடு பிள்ளையார்' என்று பெயரில் திருமுருகன்பூண்டியிலிருந்து அவிநாசிக்குப் போகிற வழியில் இருக்கிறார்.

அவருக்கு ரொம்பவும் நன்றி சொல்லி விட்டு, அவர் பரம கருணையோடு வழிகாட்ட ஸுந்தரர் கோவிலுக்குப் போனார். 'நிந்தாஸ்துதி பண்ணி இன்னும் கஷ்டம் ஏற்பட இடம் கொடுக்க வேண்டாம்.ஸ்வாமியேதான் கொள்ளை நடத்தினது என்பதுகூட நமக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டாம். துஷ்ட வேடர்கள் நிறைந்த இந்த ஊரில் c இருக்கலாமா என்று ஸ்வாமியிடம் அங்கலாய்த்துக் கொள்கிற ரீதியிலேயே பாடலாம்' என்று ஸுந்தரர் நினைத்தார். 'இங்கே ஏன் ஸவாமி, c வாஸம் பண்ணணும்,' என்று அர்த்தம் கொடுக்கும்படியாக ஒவ்வொரு பாடலும் "எத்துக்' (கு) இங் (கு) இருந்தீர், எம்பிரானே?" என்று முடித்துப் பதிகம் பாடினார்.

ஸ்வாமியும் தாம்தான் அந்த வழிப்பறியை 'அரேஞ்ஜ்' பண்ணினது என்று காட்டிக் கொள்ளாமல், அந்த வேடர்களுக்கு மனஸ் மாறிவிட்ட மாதிரிக் காட்டி, கணங்களை மறுபடி வேடர்களாக்கி அவர்கள் பொதியை எல்லாம் ஸந்நிதியலேயே ஸுந்தரருக்கு முன்னாடி கொண்டு வந்து போட்டுவிடும்படிப் பண்ணினார்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is தேவாரத்தில் விநாயகர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  விநாயகரும் மாணிக்கவாசகரும்
Next