விநாயகரும் மாணிக்கவாசகரும்

விநாயகரும் மாணிக்கவாசகரும்

தேவாரம் பாடிய மூவரைப் பற்றி விக்நேச்வர ஸம்பந்தமாக இவ்வளவு!ஆனால் மாணிக்கவாசகர் அவருடைய திருவாசகத்திலே பிள்ளையாரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. இருந்தாலும் அவருடைய வாழ்க்கையிலே இவர் நெருக்கமா ஸம்பந்தப் பட்டிருக்கிறார். ரொம்ப பேருக்குத் தெரியாத கதை சொல்கிறேன். பழங்காலத்திலே பாண்டிய நாட்டிலேயிருந்து சோழ தேசம் போகிறதற்கு ஆவுடையார் கோவில் வழியாகத்தான் நல்ல சாலை இருந்தது. மாணிக்கவாசகர் காலத்தில் ஆவுடையார் கோவிலுக்கு திருப்பெருந்துறை என்று பெயர். அங்கே வழிப்போக்கர்கள் தங்குவதற்கு ஒரு சத்திரம் இருந்தது. அதற்குப் பக்கத்தில் வானம் பார்க்க, அதாவது வரையில்லாமல், ஒரு பிள்ளையார் உட்கார்ந்திருப்பார். வெயிலில் வந்த யாத்ரிகர்கள் ஒரு கூரையின் கீழ் 'ரெஸ்ட்' பண்ணிக் கொள்ளும் சத்திரத்துக்குப் பக்கத்திலேயே இப்படி அத்தனை வெயிலையும் தன் மேலே வாங்கிக் கொள்கிற ஒரு பிள்ளையார்!இன்னும் சில இடங்களிலும் இப்படி உண்டு. அங்கேயெல்லாம் 'வெயில் உகந்த பிள்ளையார்' என்று அவருக்குப் பேர் சொல்வார்கள். இங்கேயோ 'வெயில் காத்த பிள்ளையார்' என்று பேர். என்ன வித்யாஸமென்றால் மற்ற இடங்களில் ஜனங்கள் அநுபவிக்கிற வெயில் கஷ்டத்தை நாமும் அவர்களோடு சேர்ந்து அநுபவிப்போமே என்று 'ஸிம்பதி'யிலே அவராக வெயிலை ப்ரியப்பட்டு உகந்து ஏற்றுக் கொள்கிறார். இங்கேயோ அதற்கு மேலே ஒரு படி போய், சத்திரத்தில் தங்கினவர்கள் அப்புறம் யாத்திரை தொடரும் போது வெயிலால் கஷ்டப்படாமல் அந்த வெயிலை அவர்களுக்குமாகச் சேர்த்து vicarious suffering என்கிறார்களே, அப்படித் தாமே வாங்கிக்கொண்டு, அவர்களை உஷ்ணத்திலிருந்து காப்பாற்றுகிறார். அதனால் 'வெயில் காத்த பிள்ளையார்' என்று பெயர் பெற்றிருக்கிறார். பாண்டிய ராஜாவுக்காகத் குதிரை வாங்கப் போன மந்திரி திருவாதவூரர் அப்புறம் மாணிக்கவாசகர் என்ற மஹானான கதை தெரிந்திருக்கும். அவர் குதிரை வாங்கப் போகிற வழியிலே அந்தத் திருப்பெருந்துறைச் சத்திரத்தில்தான் ராத் தங்கினார். அப்போது அவருடைய ஸ்வப்பனத்திலே வெயில் காத்த பிள்ளையார் தோன்றினார். வெயிலோ, suffering -ஆ எதுவும் தெரியாத பரப்ரஹ்மமே தாம் என்று வாதவூரருக்குத் தெரிவிக்க நினைத்து, தான் ஒருத்தரே ப்ரஹ்ம - விஷ்ணு -ருத்ரர் ஆகிய மூன்று ரூபமாக மாறி அவருக்குக்காட்சி கொடுத்தார். கொடுத்த அப்புறம், "இந்த ஊரிலே பரப்ரஹ்மத்துக்குக் கோவில் கட்டு. அரூபமாகவும் நிர்குணமாகவும் இருக்கிற தத்வத்துக்கு எப்படிக் கோவில் கட்டுவது என்று கேட்காதே. அதற்கு நேரடியாகக் கோவில் கட்ட முடியாதுதான் ஆனாலும் அப்படி ஒரு தத்வம் உண்டு என்று ஸகல ஜனங்களுக்கும் துளியாவது நினைப்பு வர வேண்டுமல்லவா? அதற்காகத்தான் அதை 'ஸிம்பாலிக்'காக (உருவகமாக) ப் புரிந்து கொள்ளும்படி ஒரு கோவில் கட்டச் சொல்கிறேன்.

"ப்ரஹ்மம் அருவம். நாம் பார்க்கிற மூர்த்திகளுக்குள் சிவலிங்கம் தவிர பாக்கி எல்லாம் உருவம். சிவ லிங்கத்துக்கு அவயவங்கள் கொண்ட உருவமும் இல்லை, அது அருவமுமில்லாமல் ஒரு நிள உருண்டையாயிருக்கிறது. அதனால் அருவுருவம் என்று அதற்குப் பேர். சிவலிங்கத்துக்குப் பீடம் இருக்கிறதே, ஆவடையார் என்று, அதுவே ப்ரஹ்ம - விஷ்ணு - ருத்ர ஸ்வரூபம். அதற்கு மேலே சிவம் என்கிற அருவ ப்ரஹ்மம் இருப்பதை ஸிம்பாலிக்காகக் காட்டத்தான் லிங்கம் வைத்தது.

"ஆனால் உருவ தத்வத்திலேயே ருசியுள்ள ஜனங்கள் அதை மறந்துவிட்டு லிங்கத்தையும் ஒரு உருவ மூர்த்திதான் என்று நினைக்கிறார்கள். பொது ஜனங்கள் உள்ள ஸ்திதியில் அப்படி நினைப்பதுதான் இயற்கை. அதனால் மற்ற கோவில்களிலெல்லாம் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். ஆனாலும், இத்தனாம் பெரியதேசத்தில் ஒரு இடத்திலாவது வேதத்தின் பரம தாத்பர்யமான பரப்ரஹ்மத்தை, அருவப் பரம்பொருளை அழுத்தமாக ஞாபகபப்படுத்த ஒரு ஆலயம் வேண்டாமா? உருவம் என்பதிலிருந்து அருவுருவம் என்கிற வரையில் கொண்டுவிட்டிருக்கிற ஈச்வரனுக்குத்தான் அதற்கும் அடுத்த ஸ்டேஜான அருவமாக வைத்தும் கோவில் கட்டினால் பொருத்தமாயிருக்கும், ஜனங்களின் மனோபாவத்துக்கும் அதுவே ஸரியாய் வரும்.

"ஆனபடியால் c இங்கே ஆவுடையாரை மட்டும் மூலஸ்தானத்தில வைத்து, அதற்கு மேல் லிங்கம் ப்ரதிஷ்டை பண்ணாமல் காலியாகவே விட்டுக் கோவில் கட்டு. காலி என்பதால் சூன்யமில்லை, அதுதான் நம் இத்தனை ஜீவாத்மாக்களுக்கும் மூலம் என்று ஜனங்களுக்குப் புரிவிப்பதாக அதற்கு ஆத்மாநாதஸ்வாமி என்று பெயர் வை.

"நான் சொன்னேனே என்று இப்பவே காரியத்தில் இறங்காதே!இங்கே ஒரு குருந்த மரத்தின் கீழே என் தகப்பனார் குரு ஸ்வரூபத்தில் வந்து ஆத்மாவை c அநுபவத்தில் தெரிந்து கொள்ளும்படியாக - அதாவது நம்முடைய ஆத்மா பரப்ரஹ்மமே என்பதை c அநுபவமாக அறியும்படி - உபதேசிப்பார். அதற்கப்புறமே ஆலய நிர்மாணம் பண்ணு" என்று சொல்லி விட்டுப் பிள்ளையார் மறைந்துவிட்டார்.

இப்படி ஒரு ஆனை சொன்னதன் மேல்தான் குதிரைக்கான பணத்தில் மாட்டுக்குக் கோவில் எழும்பிற்று!ஆவுடையார் என்பது மாடுதான், பரமேச்வரனின் ரிஷபம்!ஆ-மாடு, உடையார் என்றால் ஸ்வாமி. கோவில் கல்வெட்டுக்களில் பார்த்தால் 'ஸ்வாமி' என்பதற்குத் தமிழ் வார்த்தையாக 'உடையார்' என்றே போட்டிருக்கும். ராஜராஜீச்சுரமுடையார், திருநாசேக்சுரமுடையார் என்கிற மாதிரி. மற்ற மாடுகளுக்கெல்லாம் தலைமையில் அவற்றுக்கு ஸ்வாமியாக உள்ள ரிஷபந்தான் ஆவடையார். மற்ற ஊர்களில் அந்த ரிஷபத்தின் மேலே லிங்க ரூபத்தில் பரமேச்வரன். ஜீவாத்மாக்களான அத்தனை பசுக்களுக்குள்ளும் உடையாரான பசுபதி மாட்டு ஜாதிப் பசுபதியான ஆவுடையார் மேலே உட்கார்ந்திருப்பார்.

பிள்ளையார் சொன்னபடியே அப்புறம் ப்ராம்மண குருவாக ஈச்ரவன் வர, அவரடம் வாதவுரரர் உபதேசம் பெற்றுக் கொண்ட ஆவுடையாரை மட்டும் வைத்துக் கோவில் கட்டினார். ஞானாபூதி பெற்றவுடனேயே அவருக்கு மணி மயியாகத்தான் திருவாசகம் பாடவந்தால் மாணிக்கவாசகர் என்ற புதுப் பெயரும் உண்டாகி விட்டது.

அரூப ஸ்வாமி ஆவுடையார் மட்டுமே மூலஸ்தானத்தில் இருந்தால் ஜனங்கள் அந்தத திருப்பெருந்தறைக்கும் 'ஆவுடையார் கோவில்' என்று புதப் பெயர் வைத்துவிட்டார்கள்.

அம்பாளும் அங்கே அரூபந்தான். இவர் ஆத்மநாதர் என்றால் அவள் யோகாம்பிகை.

இப்படி அவர்கள் அரூபமாக விட்டதற்கு வட்டியும் முதலுமாக மாணிக்கவாகர் என்ன பண்ணினாரென்றால் கோவில் கட்டச் சொன்ன பிள்ளையாருக்கே அங்கே மூன்று மூர்த்திகள் சேர்ந்தாற்போல் வைத்து விட்டார். அவர் இவருக்கு மும்மூர்த்திகளாக மூன்று ரூபத்தில் தரிசனம் தந்தால் இவரும் அவருக்கு மூன்று மூர்த்தி வைத்துவிட்டார் - மூம்மூர்த்திகளும் அவரே என்று காட்டுவதாக.

இரட்டைப் பிள்ளையார் பல ஊரில் உண்டு. ஆவுடையார் கோவிலில் மட்டும் மூன்று பிள்ளையார்!


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is சுந்தரருக்கு அருள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  'திருமுறை' கிடைக்கச் செய்தவர்
Next