'க':ஸித்தியளிப்பது.

'க' ஸித்தியளிப்பது

'க' என்பது ஸித்தி தருவது. ஸித்தி என்றால் லட்சியத்தை ஸ்திரமாக ஸாதித்துக் கொள்வது. எந்த வித்யையைக் கற்றுக் கொண்டாலும் அதன் லட்சியத்தைப் பிடித்து, எந்நாளும் நழுவாமல் தக்க வைத்துக் கொள்வது ஸித்தி.

அட்சரங்களுக்கு அந்தர்கதமாக (உள்ளூர) அநேக சக்திகள் உண்டு. அதை வைத்துத்தான் மந்த்ரங்கள் என்ற அட்சரக் கோர்வை (கோவை) கள் ஏற்பட்டிருக்கின்றன. அவ்வாறு இருப்பதில் க (ga) என்ற சப்தத்திற்கே ஸித்தி தருகிற சக்தி இருப்பதாக ச்லோகம் சொல்கிறது 'ககார:ஸித்தித:ப்ரோக்த:'

அப்படிச் சொன்னதால் குரு முறைப்படிச் சொல்லிக் கொடுக்காவிட்டாலும், சிஷ்யன் முறைப்படிக் கற்றுக் கொள்ளாவிட்டாலுங்கூட, அவருக்குச் சொல்லிக் கொடுப்பதில் ஸித்தியும் இவனுக்கும் கற்றுக்கொள்வதில் ஸித்தியும் கிடைத்துவிடும் என்று அர்த்தமாகாது. எப்போதும் யதாவிதியான புருஷ யத்தனம் இருக்க வேண்டும் - நாம் செய்ய வேண்டியதை நன்முயற்சிகளோடு உரிய முறையில் செய்தேயாக வேண்டும். அப்படிச் செய்தும் அநேக ஸமயங்களில் ப்ரதிபந்தகங்கள் (இடையூறுகள்) ஏற்பட்டு ஸித்தி கிடைக்காமல் தோல்வி ஏற்படுகிறதல்லவா? அப்படி நேராமலிருப்பதற்கு தெய்வாநுகூலம் வேண்டும். அந்த தெய்வாநுகூலத்தை உண்டாக்கித் தரும் பல உபாயங்களில் சப்த சக்தியும் ஒன்று. அதைத்தான் 'க'காரம் செய்கிறது - ககார ஸித்தித ப்ரோக்த -'ககாரம் ஸித்தி தருவது என்று சொல்லப்படுகிறது'....

'க' (ga) - காரத்திற்கு ரொம்பவும் உத்கர்ஷம் (உயர்வு) உண்டு. புணர்ஜன்மா இல்லாமல் பண்ணிக் கொள்வதற்கு, அதாவது மோட்சம் அடைவதற்கு க (ga) - வில் ஆரம்பிக்கும் நாலு பேரை ஹ்ருதயத்திலே ஸ்மரித்தால் போதும். என்ன அந்த நாலு?

கீதா கங்கா ச காயத்ரீ கோவிந்தேதி ஹ்ருதி ஸ்திதே

கீதை, கங்கை, காயத்ரீ, கோவிந்தன் என்று 'க'காரத்தில் ஆரம்பிக்கிற நாலு பேர்கள்தான். வடக்கத்திக்காரர்களிடம், கார்த்தாலே எழுந்தவுடனே இந்த நாலு பேரைச் சொல்கிற வழக்கம் இருக்கிறது. இங்கே பிறவிப் பயன் என்ற ஜீவித ஸித்தியாகிய பிறவாமையைத் தருகிற நாலே 'க'வில் ஆரம்பிப்பதாகச் சொல்லியிருக்கிறது. நான் சொன்ன குரு லக்ஷண ச்லோகத்தில் பொதுவாக, ககாரம் ஸித்தி ப்ரதம் என்று இருக்கிறது ககார: ஸித்தித: ப்ரோக்த:

ரேப: பாபஸ்ய ஹாரக: "'ர' என்ற அட்சர சப்தம் பாபத்தைப் போக்குவது."


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is 'குரு' இலக்கணச் செய்யுட்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  ஸம்ஸ்கிருத 'ர'வும் தமிழ் 'ர'-'ற'க்களும்
Next