ஸம்ஸ்கிருத 'ர'வும் தமிழ் 'ர'-'ற'க்களும்

ஸம்ஸ்கிருத 'ர'வும் தமிழ் 'ர'- 'ற'க்களும்

அ-காரம், இ-காரம், க-காரம் என்று சொல்கிறாற் போல ர-காரம் என்று சொல்லக்கூடாது, 'ரேபம்' என்றே அந்த எழுத்துக்கு மட்டும் தனிப் பெயர் கொடுத்திருக்கிறது. ம்ருதுவான சப்தமாக இல்லாமல் கொஞ்சம் முரட்டு சப்தமாக இருப்பது ரேபம் என்று விளக்கம் கொடுத்திருக்கிறது.

இதிலிருந்து Linguistics -ல், Semantics -ல் அதாவது பாஷா சாஸ்திரத்தில் ஒரு பெரிய விஷயம் அகப்படுகிறது. (என்னவெனில்) தமிழில் இடையினம் என்பதைச் சேர்ந்ததாக 'ர' என்று ஒரு ம்ருது சப்தமான எழுத்தும், வல்லினத்தைச் சேர்ந்ததாக 'ற' என்று ஒரு முரட்டுச் சப்த எழுத்தும் இருக்கின்றன. பேச்சு வழக்கில் 'சின்ன ர', 'பெரிய ர' என்கிறோம். 'தமிழிலும், தமிழைப் போல் த்ராவிட பாஷைகளிலேயே இன்னொன்றான தெலுங்கிலுந்தான் வல்லின 'ற' உண்டு, ஸம்ஸ்க்ருதத்தில் கிடையாது' என்று பொதுவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். பாஷா சாஸ்த்ரஜ்ஞர்கள் (மொழியியல் வல்லநர்கள்) கூட அப்படிச் சொல்வதாகப் பார்க்கிறேன். வாஸ்தவத்திலோ ஸம்ஸ்க்ருத ர-சப்தம் தமிழில் உள்ள இடையின 'ர'வுக்கும் வல்லின 'ற'வுக்கும் மத்தியிலே உள்ள சப்தமே ஆகும், வார்த்தை யாரம்பத்தில் வருகிறபோது இடையினம் மாதிரியும் மத்தியில் வருகிறபோது வல்லினம் மாதிரியும் அது த்வனிக்கும்.

தமிழில் இடையின ர, வல்லின ற இரண்டுமே வார்த்தையின் ஆரம்ப எழுத்தாக வராது.

ர-ரா-ரி-ரீ... ரௌவரை எந்த எழுத்துமே வார்த்தையாரம்பத்தில் வராது. 'ற'விலும் இதேபோல்தான். 'வல்லின 'ற' விஷயம் ஸரிதான். ஆனால் இடையின 'ர'வில் ஆரம்பிப்பதாக அநேக வார்த்தைகள் இருக்கிறதே!' என்று நினைக்கலாம். வாஸ்தவத்தில் அந்த வார்த்தைகள் எல்லாமே ஸம்ஸ்க்ருதம் முதலான பிற பாஷைகளிலிருந்து எடுத்துக் கொண்டதாகத்தான் இருக்கும். முறைப்படி அவற்றைத் தமிழில் எழுதும்போது 'ர'வுக்கும் முந்தி, வார்த்தை யாரம்பமாக இ,உ,அ- இப்படி ஒரு எழுத்தைச் சேர்த்துத்தான் எழுதுவார்கள். இரகசியம், இராமன், இலக்குவன், இராவணன், உலோஹம்,.... 'உலகம்' என்கிறது கூட 'லோகம்'தான்..., உரோமம், உருசி, அரங்கன், அரம்பை என்றிப்படித்தான் எழுதுவார்கள்.

ரஸ்தா, ரஜா, ரயில், ரிக்க்ஷ£, ரோஜ்கார், ரோட் இத்யாதி வார்த்தைகள் அந்நிய பாஷைகள்தான்.

தெலுங்கிலே, ஸம்ஸ்க்ருதத்திலிருந்து கடன் வாங்காமல், தெலுங்கு வார்த்தையாகவே 'ர'வில் ஆரம்பிக்கிறதாக வார்த்தைகள் இருக்கின்றன.

ய,ர,ல,வ,ழ,ள என்ற ஆறு இடையின சப்தங்களில் 'வ' ஒன்றைத் தவிர பாக்கி ஐந்திலுமே அகாரத்திலிருந்து ஒளகாரம் வரை அதாவது, ய,யா,யி,யீ... யௌ வரை, ல, லா, h... லௌ வரை, இப்படியே ர,ழ,ள-விலும் - எந்த சப்தமும் தமிழ் வார்த்தைகளின் ஆரம்பத்தில் வராது... 'யா' மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு மாதிரி. 'ஆர்' என்பதை 'யார்' என்கிறது. 'நான்' என்பதை 'யான்' என்கிறது. யாக்கை, யாத்தல், தமிழ் தேசத்தின் சிறப்பு வாத்யமான யாழ், யானை - இதை ஆனை

என்பதும் உண்டு - இப்படிச் சிலது.

தமிழறிஞர்கள் இயக்கர் (யக்ஷர்) , இயமானன் (யஜமானன்) , இயமன், உயுத்தம் என்றுதான் யகாரத்தில் வார்த்தை ஆரம்பிக்காமல் எழுதுவார்கள்.

உருத்திரன், உருத்திராக்கம் (ருத்ராக்ஷம்) என்றெல்லாமும் பார்க்கிறோம். ரொம்பவும் வழக்கிலுள்ள 'உருவம்' என்பது ஸம்ஸ்கிருத 'ரூபம்'தான்

க-ச-ட-த-ப-ற என்ற ஆறு வல்லின எழுத்துக்களில் ட (ta-da) , ற இரண்டிலும் தமிழ் வார்த்தை எதுவும் ஆரம்பிக்காது. 'ட'வில் தற்போது வழங்குகிற தமிழ் வார்த்தைகள் பிற பாஷை இரவல்தான்.

ங-ஞ-ண-ந-ம-ன என்ற ஆறு மெல்லின எழுத்துக்களில் ங,ண,ன என்ற மூன்றிலும் வார்த்தை ஆரம்பிக்காது.

'ந-ன இரண்டும் ஒரே சப்தமாகத்தானே இருக்கு? எதற்கு இப்படி இரண்டு எழுத்து?' என்று ரொம்பப் பேருக்குத் தெரியவில்லை. வாஸ்தவத்தில் அவை வித்யாஸமான சப்தங்கள்தான். 'ந' என்கிறேபாது நாக்கு நுனி பல்லும் மேலண்ணமும் சேர்கிற இடத்துக்குக் கிட்டே பல், அண்ணம் இரண்டையும் தொடணும். 'ன' என்கிறபோது நாக்கு நுனி இன்னும் வளைந்து அண்ணத்தின் உள்பக்கமாக மட்டும் தொடணும். 'அந்த' என்று சொல்லிப் பாருங்கள். அப்போது 'ந்'-னில் நாக்கு எங்கே தொடுகிறதோ அங்கேதான் 'ந'வரிசை பூராவிலும் தொடணும். 'அவன்' என்கிற போது 'ன்'-னில் நாக்கு தொடுகிற இடத்திலேயே 'ன' வரிசை பூரா தொடணும். இது தமிழுக்கே உரியதான சப்தம்.. 'ந' பல்லை நாக்கு தொடுகிற dental, 'ண' அண்ணத்தைத் தொடுகிற cerebral. தமிழில் மட்டுமே உள்ள 'ன'வும் cerebral மாதிரிதான். 'ந'வுக்கும் 'ண'வுக்கும் நடுவிலுள்ள இடத்தைத் தொட்டால் உண்டாகும் சப்தம். இடையின வல்லின 'ர'க்கள் தமிழில் வார்த்தையாரம்பமாக வராது என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இரண்டுமே வார்த்தை மத்தியில், (சிரித்து) அதாவது இடையில் 'இடை'யினமாகத்தான் வரும்

ஸம்ஸ்க்ருத 'ர' பொதுவாக நம்முடைய இடையின - வல்லின 'ர'க்களுக்கு இடைப்பட்ட சப்தம் எனலாம். அதிலும் வார்த்தையாரம்பத்தில் கொஞ்சம் ம்ருது - இடையினம் மாதிரி த்வனிக்கும், (வார்த்தை) மத்தியில் வரும் போது ஜாஸ்தி வல்லின சப்தமாக இருக்கும்.

இங்க்லீஷ் Christ -ஐ 'கிறிஸ்து' என்று வல்லின 'P' போட்டுச் சொல்கிற மாதிரியேதான் 'க்ருஷ்ண' என்பதையும் (வல்லிணமாகச்) சொல்லவேண்டும் என்றுகூட ஒரு அபிப்ராயம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இங்கிலீஷில் பார்த்தால், world, girl போன்ற வார்த்தைகளில் 'r' ஸைலன்ட் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இன்னும் பெரும்பாலான வார்த்தைகளிலும் வெள்ளைக்காரர்கள் க்ஷீ-ஐ ஒரே மழுப்பாக மழுப்பிக் கொண்டுதான் போவார்கள். ஆனாலும் Christ என்பது மாதிரி 'ர'வைத் தெளிவாக உச்சரிக்கிறபோது நம்முடைய வல்லினம் மாதிரியே சொல்வதால்தான் நாம் 'கிறிஸ்து' என்பது. ஸம்ஸ்க்ருதத்திலும் கிட்டத்தட்ட அப்படித்தான்.

அதாவது, 'ர'காரம் என்காமல் 'ரேபம்' என்று சொல்லும் அட்ரம் ஒரு ஸம்ஸ்க்ருத வார்த்தையாரம்பத்தில் வருகிறபோது ம்ருது பண்ணி நம்முடைய

இடையினம் மாதிரி சொல்லவேண்டும், வார்த்தையின் நடுவில் அது வரும்போது

வல்லினம் தொனிக்கும்படிச் சொல்லவேண்டும். இதைத் தெரிந்து கொண்டு சில பேர் 'நாறாயணஸ்வாமி', 'நடறாஜன்' என்று கையெழுத்துப் போட்டுக்கூடப் பார்த்திருக்கிறேன்!இப்படி இரட்டை வித சப்தங்களாக 'ர' மட்டும் இருப்பதால்தான், அது மட்டுமே peculiar- ஆக இப்படி இருப்பதால்தான், மற்ற எழுத்துக்களை அகாரம், தகாரம், நகாரம் என்கிறது போல அதை 'காரம்' சேர்த்துச் சொல்லாமல் 'ரேபம்' என்பது. (சிரித்து) அந்த சப்தத்தின் ஒரு ரூபத்திலேயே காரமும் - முரட்டுத்தனமும் - சேரும்போது பேரில் வேறே 'கார'த்தைச் சேர்த்து (ரகாரம் என்று சொல்லி) ஒரே உறைப்பாக்கிவிட வேண்டாமென்று போலிருக்கிறது!


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is 'க':ஸித்தியளிப்பது.
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  'ர': பாபத்தைப் பொசுக்குவது
Next