பெண்டிருக்கு ஆசார்யாள் தரும் உயர்வு

பெண்டிருக்கு ஆசார்யாள் தரும் உயர்வு

ஸ்த்ரீகளின் ஸ்தானத்தை ஆசார்யாள் குறைத்துச் சொன்னதாக நினைக்கவே கூடாது. ஏனென்றால் ஸம்ப்ரதாய க்ரமத்தில் வேத- வேதாந்தங்கள் படிக்கவும் சொல்லிக் கொடுக்கவும் அவர்களுக்கு அதிகாரமில்லாவிட்டாலும், ' informal ' - ஆக என்கிறார்களே, அப்படித் தங்கள் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதில் அம்மாமார்களுக்கு இருந்த சக்தியை ஆசார்யாள் நிரம்பவும் புரிந்து கொண்டு ஆமோதித்துச் சொல்லியிருப்பதும் உண்டு.

இப்படி informal -ஆக அவர்கள் (பெண்டிர்) ப்ரஹ்ம ஞானமேகூட பெறமுடியும் என்றும் ஆசார்யாள் சொல்லியிருப்பதுமுண்டு.

மாண்டூக்யோபநிஷத்தின் தத்வார்த்தத்தை விளக்கி ஆசார்யாளின் குருவுக்கு குருவான கௌடபாதாசார்யாள் 'காரிகை' என்று எழுதியிருக்கிறார். '' pure Advaita classic (சற்றும் கலப்படமற்ற அத்வைதத்தையே சொல்லும் தலைசிறந்த இலக்கியம்) என்று அதை ரொம்பப் படிப்பாளிகளும் சொல்கிறார்கள். அதில் ஒரு இடத்தில், "பிறப்பில்லாததும், அது - இது என்ற பேதமில்லாமல் ஸர்வ ஸமமாயிருப்பதுமான ப்ரஹ்மம் ஒன்றே ஸத்யம் என்பதில் எந்தச்சில பேர் அசைக்க முடியாத நிச்சய உறுதி உள்ளவர்களோ அவர்களே மஹா பெரிய ஞானத்தைப் பெற்றவராவார்கள். ஆனால் பொதுவாக ஜீவலோகத்திற்கு அது பிடிபடுவதில்லை" என்று ச்லோகம் இருக்கிறது. இங்கே 'எந்தச் சில பேர் - யே கேசித் - என்று வருவதற்கு ஆசார்யாள் பாஷ்யத்தில், 'ஸ்த்ர்யாதயோபி' - அதாவது 'ஸ்த்ரீ முதலானோர் உள்பட எவரானாலும் எந்தச் சிலருக்கு, ப்ரஹ்மமே ஸத்யம் என்ற நிச்சய உறுதி இருக்கிறதோ' - என்று சொல்லியிருக்கிறார். இதனால் ஸ்த்ரீகளும் ப்ரஹ்ம ஞானம் அடையமுடியும் என்று அவர் அபிப்ராயப்பட்டது தெரிகிறது. அதற்குத் தகுதி பெறாமலே பொதுவாக ஜீவலோகம் இருந்தாலும், அஸாதாரணமான சில பேர், பொம்மனாட்டிகளிலும் அப்படி அஸாதாரணமாக இருக்கிற சில பேர், ப்ரஹ்ம ஞானம் அடைய முடியும் என்று இங்கே சொல்லியிருக்கிறார்.

ப்ரஹ்ம ஞானம் வரைக்குமே பெண்கள் போக முடியும் என்று சொல்லும் ஆசார்யாள் லௌகிகத்திலும் அவர்களுக்கான உசந்த ஸ்தானம் கொடுக்கவே செய்கிறார். குழந்தைகளுக்கு அம்மாவும் ஒரு குருவாக இருப்பதில் மட்டும் இந்த உசத்தி இல்லை. பதிக்கே அவள்தான் உற்ற ஸகா என்று ஆசார்யாள் 'ப்ரச்னோத்தர ரத்ன மாலிகா'வில் சொல்லியிருக்கிறார். "கிருஹஸ்தனுக்கு உற்ற ஸகா யார்?" என்று அதில் ஒரு கேள்வி கேட்டுவிட்டு பதிலாக, "பத்தினி" என்கிறார்:

"க்ருஹமேதினஸ்ய மித்ர் கிம்?"

"பார்யா."


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is பெண்களின் பாண்டித்யம்;அக்கால-இக்கால மாறுபாடு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  அன்னையும் குருவாக:ஆசார்யாளின் ஆமோதிப்பு
Next