அன்னையும் குருவாக:ஆசார்யாளின் ஆமோதிப்பு

அன்னையும் குருவாக:ஆசார்யாளின் ஆமோதிப்பு

'நல்வழிப்படுத்துவது' என்பதுதானே குருவின் முக்யமான கார்யம்? அதனால் அம்மாவுக்கும் அப்பா மாதிரியே குரு ஸ்தானம் உண்டு. இதையும் ஆசார்யாள் எடுத்துக்காட்டிச் சொல்லியிருப்பதுண்டு. சித்தே முந்தி தானே பார்த்தோம், பிள்ளை குணவானாக இருப்பதில் அம்மாவுக்கே ப்ராதான்யம் (பிரதானமான ஸ்தானம்) என்று அவர் சொன்னதை? குணவதியான மாதாவின் கர்ப்பத்தில் ரூபமாகி, அவளிடமிருந்து ஆஹாரம் - பானம் பண்ணிக் குழந்தை வளர்வதாலேயே முக்யமாக ஒரு ப்ரஜைக்கு குண ஸம்பத்து ஏற்படுகிறது. இது அவளுக்கே தெரியாமல் அவள் புத்ரனை நல்வழிப்படுத்துவது!அப்புறம் சின்ன வயஸில் அதற்குக் கதை புராணம் சொல்லி, ஸ்தோத்ரங்கள், நீதிப் பாடல்கள் சொல்லிக் கொடுத்து நல்வழிப்படுத்துகிறாள். 'இப்படிப் பண்ணப்பா, இப்படிப் பண்ணாதேப்பா!' என்று அநகேம் சொல்லிக் கொடுக்கிறாள். அவளுடைய நல்ல நடத்தையைப் பார்த்துப்பார்த்தே - அதன் ஸூக்ஷ்மமான சக்தியாலேயே கூட - பாலப்பிராயத்தில் ஒருத்தன் நல்லவற்றைத் தெரிந்து கொண்டு அந்தப்படி செய்கிறான். 'தாயைப் போலப் பிள்ளை' என்று வசனமே இருக்கிறது.

இதையெல்லாம் ஆசார்யாள் கவனித்து - ரொம்பவும் 'ஸிம்பதெடிக்'காகவும் கெளரவம் கொடுத்தும் கவனித்துத்தான் - கடோபநிஷத்திலே ஒரு இடத்தில் ப்ருஹதாரண்யகத்தையும் Quote பண்ணிக் காட்டி, வேதம் வகுத்துக் கொடுக்கிற விதிமுறையின்படி குருவைப் போலவே அம்மா - அப்பாவுக்கும் - 'அம்மாவுக்கும்' என்பதைக் கவனிக்க வேண்டும், மாதா - பிதா - குரு என்று மூன்று பேருக்குமே - 'ப்ரமாண காரணம்' என்ற பெருமை, உரிமை இருப்பதாகக் காட்டியிருக்கிறார். 'ப்ரமாண காரணம்' என்பதற்கு 'அதிகாரபூர்வமான குரு ஸ்தானம்' என்று இங்கே அர்த்தம்.

அதாவது, தாயாருக்கும் குருஸ்தானம் உண்டு.

தாயார்களின் பெயரைச் சொல்லி ப்ருஹதாரண்யகத்தில் ஏராளமான ரிஷிகளைத் தெரிவித்திருக்கிறதென்றால், சாந்தோக்யத்திலும் இரண்டு பேரை அந்த மாதிரியே சொல்லியிருக்கிறது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is பெண்டிருக்கு ஆசார்யாள் தரும் உயர்வு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  அன்னையின் வழியில் கண்ணனையே!
Next