வைஷ்ணவரின் 'கோயில்':விநாயகர் அருள் விளையாடல்
சைவ க்ஷேத்ரங்கள் அளவுக்குக் காவேரிக் கரையில் வைஷ்ணவ க்ஷேத்ரங்கள் இல்லாவிட்டாலும், சைவத்துக்கும் இல்லாத ஒரு சிகரமான பெருமையை வைஷ்ணவ ஸம்பந்தப்படுத்தியே பிள்ளையார் காவேரிக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். என்னவென்றால், சைவர்கள் தங்கள் க்ஷேத்ரங்களுக்குள் முதலிடம் கொடுத்துக் 'கோயில்' என்றே குறிப்பிடுவது சிதம்பரம். அது காவேரிக்கரையில் இல்லை. வைஷ்ணவர்கள் இதே மாதிரி 'கோயில்' என்று முதல் ஸ்தானம் தந்து சொல்கிறது ஸ்ரீரங்கம். அதுதான் காவேரிக்கே ஜீவ மத்யமான ஸ்தானத்தில் இருக்கிறது. 'உபய காவேரி' என்பதாக இருப்பக்கமும் காவேரி நதி சூழ, 'காவேரி ரங்கன்' என்றே கியாதி பெற்றிருக்கிற பெருமாள் அங்கே பள்ளி கொண்டிருக்கிறார்.அந்த ரங்கராஜா எப்படி அங்கே வந்தார்? விக்நேச்வரர் பண்ணிய லீலையால்தான்!
இக்ஷ்வாகு வம்சத்தினர் வழிவழியாகப் பூஜித்து வந்த ஸ்ரீ ரங்கநாத விக்ரஹத்தை ராமசந்திர மூர்த்தி விபீஷணருக்குக் கொடுத்துவிட்டார். அது அவருடைய நன்றி பாராட்டும் பெரிய மனஸுக்கும் தியாகத்துக்கும் ஒரு பெரிய 'ப்ரூஃப்'. அயோத்தியில் நடந்த ஸ்ரீராம பட்டாபிஷேகத்தில் எல்லா வானரர்களும் ராட்சஸர்களும் கலந்து கொண்டுவிட்டு அப்புறம் தங்கள் தங்கள் ஊருக்குப் புறப்பட்டார்கள். அப்போது ராமர் அவர்கள் தனக்குச் செய்த ஸஹாயத்தை நன்றியோடு நினைத்து, அவர்களுக்குப் பொன்னையும் பொருளையும் வாரிவிட்டு வெகுமதிகள் கொடுத்தார். இவருக்குக் கைங்கர்யம் செய்ய அவர்களுக்குக் கொடுத்து வைத்திருந்ததே பெரிய வெகுமதி, பாக்கியம் எல்லாம். ஆனால் அவருடைய உசந்த குணம் அவர்களிடம் நன்றி பாராட்டி வெகுமதிகள் கொடுத்தார். இவரால்தான் ஸுக்ரீவனும், விபீஷணனும் ராஜாக்களாக ஆனதே. ஆனால் அவர்களுக்குத் தாம் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவே ஸ்வாமி நினைத்து, ராஜாராமரானவுடன் பெரிசாகப் பரிசுகள் தந்தார். முக்யமாக நவரத்னாபரணங்கள், பீதாம்பராதிகள் தந்தார்.
விபீஷணருக்கு மட்டும் அது போதாது, அதற்கு மேல் ரொம்ப உசந்த ஒன்று தரணும் என்ற எண்ணினார். ஏனென்றால் அண்ணாவைத் தியாகம் செய்துவிட்டு ராமரே ஸர்வமும் என்று அவர் காலில் வந்து விழுந்தவர் விபீஷணர். சரணாகதருக்கு உதாரணமாக அவரையே சொல்வது. விபீஷணருக்கும் ஸுக்ரிவனுக்கும் ஒரு பெரிய வித்தியாஸம் சொல்கிறதுண்டு:பெண்டாட்டியையும் கிஷ்கிந்தா ராஜ்யத்தையும் தனக்குப் பெற்றுக்கணும் என்றே ஸுக்ரீவன் ராமரிடம் வந்து விழுந்தது, விபீஷணர்தான் கார்யார்த்தமாக இல்லாமல் நிஜமான சரணாகதி செய்தது என்பார்கள். அதோடு, ராமசந்த்ரமூர்த்தி தன்னுடைய சரணாகத ரட்சணத்தை ப்ரகடனப் படுத்திக்கொண்டு ஸத்யப் பிரதிக்ஞையாகவே ஸகலருக்கும் வாக்குக் கொடுக்கும்படியான வாக்கியத்தைச் சொல்ல வைத்தவரும் விபீஷணரே. அவர் நிஜமான சரணாகதராக வந்திருந்த போதிலும் ராமரைச் சுற்றியிருந்தவர்கள் - ஹநுமார் ஒருத்தரைத் தவிர ஸுக்ரீவன், அங்கதன் முதலானவர்கள் - அவரை ஸந்தேஹித்துப் பேசினார்கள். அதனாலேயே, நல்ல பக்திமானை
ஸந்தேஹிக்கிறார்களே என்பதில் ராமருக்கு உண்டான உணர்ச்சி வேகத்திலே அவர் பெரிசாக ஸத்யப் பிரதிக்ஞை பண்ணிவிட்டார்:" 'நான் உன்னைச் சேர்ந்தவன்' என்று ஒருத்தன் ஒரே ஒரு தரம் சொல்லி என்னை யாசித்துவிட்டாலும் போதும், அவனுக்கு லோகத்தில் எது ஒன்றாலும் பயம், அதாவது கஷ்டம் ஏற்படாதபடி அபயம் தந்து ரட்சிப்பேன். இதுவே என் ஜீவித விரதம்" என்று ஒரு ஆவேசத்தில் சொல்லிவிட்டார்:
"ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே 1
அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் - வ்ரதம் மம 11"
அப்பேர்ப்பட்ட பக்திமானுக்கு ரொம்பப் பெரிசாக ஒன்றைத் தரவேண்டும் என்று ராமர் இப்போது பட்டாபிஷேகம் பண்ணிக்கொண்ட ஸமயத்தில் நினைத்தார். பரமத் தியாகியான அவராலேதான் அப்படிப் பண்ண முடியும் என்கிற மாதிரி, என்ன செய்தாரென்றால் இக்ஷ்வாகு வம்ச குலதனமாக, குலதேவதையாக, வழிவழியாகப் பூஜை பண்ணிக்கொண்டு வந்திருந்த ரங்கராஜா விக்ரத்தையே ப்ரணவாகாரமான விமானத்தோடுகூட விபீஷணருக்குக் கொடுத்துவிட்டார். கொடுத்து, லங்கைக்குத் திரும்ப அனுப்பிவிட்டார்.
விக்ரஹத்தோடு புறப்பட்ட விபீஷணர் அயோத்தியிலிருந்து தெற்காக ரொம்ப தூரம், அயோத்தியிலிருந்து பார்க்கிறபோது ஏறக்குறைய தேசத்தின் தெற்கோரத்தில் இருக்கிற உபய காவேரிக்கு வந்துவிட்டார்.
அதுவரை சும்மாப் பார்த்துக்கொண்டிருந்த விக்நேச்வரர்தான் சட்டென்று அப்போது, "இந்த பாரத தேசத்தை, தமிழ் தேசத்தை, ரமணீயமான இந்தக் காவேரித் தீவை விட்டுப் பெருமாள் போகவாவது?" என்று நினைத்தார். மாய விளையாட்டெல்லாம் பண்ணி, ரங்கநாதர் அந்த இடத்திலேயே அசைத்தெடுக்க முடியாதபடி ப்ரதிஷ்டை ஆகும்படிச் செய்துவிட்டார். என்ன செய்தாரென்றால்...
"விமான விக்ரஹங்களை பூமியில் எங்கேயும் வைக்கப்படாது. எங்கே கீழே வைத்தாலும் அங்கேயே அது நிலையாக ப்ரதிஷ்டை ஆகிவிடும். அதனால் நேரே லங்காபுரிக்கே அதைக் கொண்டு போய் அங்கேதான் கீழேவைக்கணும்" என்று ராமர் சொல்லியினுப்பியிருந்தார்.
விக்நேச்வரர் என்ன பண்ணினார் என்றால், காவேரி அலை புரட்டிக்கொண்டு போகிற அழகைப் பார்த்ததும் விபீஷணருக்கு அதிலே ஸ்நானம் பண்ணணும் என்ற ஆசை தோன்றும்படிப் பண்ணினார். தாமும் ஒரு ப்ரஹ்மசாரிப் பையனாக அங்கே போய் நின்று கொண்டார். ஸாதுப் பிள்ளை, சமர்த்துப் பிள்ளை என்று தோன்றும்படியான ரூபத்தோடு நின்று கொண்டார்.
"அப்பா, கொழந்தே!நான் ஸ்நானம் பண்ணிட்டு வரவரையிலே இதை c பூமியிலே வெச்சுடாம, கையிலேயே வெச்சுக்கறயா?" என்று விபீஷணர் கேட்டார்.
"அப்படியே பண்றேன். ஆனாலும் எனக்குக் கை கனத்துப் போனா என்ன பண்றது? மூணு தரம் ஒங்களைக் கூப்பிடறேன். அப்டியும் நிங்க வல்லேன்னா கீழே வெச்சுப்புடுவேன்" என்று விக்நேச்வரர் சொன்னார்.
"ஆனா ஸரி" என்று விபீஷணரும் ஒப்புக் கொண்டார். விக்நேச்வரர் என்ன பண்ணினார் என்றால், விபீஷணர் பிரவாஹம் கண்ட உத்ஸாஹத்தில் காவேரிக்குள் ரொம்ப தூரம் நீச்சலடித்துப் போய்விட்ட ஸமயம் பார்த்து, சட் சட் என்ற அவர் மூன்று தரம் கூப்பிட்டார்.
அவர் அதற்குள் வரமுடியவில்லை.
"நான் சொன்னபடி கூப்டுட்டேன். நீங்க சொன்னபடி வரல்லை. கனம் தாங்காம இதோ பூமியிலே வெச்சுட்டேன்" என்ற சொல்லிக்கொண்டு உபய காவேரி மத்தியிலிருந்த திட்டில் விக்ரஹத்தை வைத்துவிட்டார்.
விக்ரஹம் அங்கேயே அப்படியே ஆழமாக ப்ரதிஷ்டை ஆகிவிட்டது.
கதையைப் பார்த்தால் அதுவரை நல்ல பலிஷ்ட பாலர் ஒருத்தர் கையிலே தாங்கி கொள்கிற அளவுக்கே - (சிரித்து) Portable size என்கிறார்களே, அப்படித்தான்- விக்ரஹமும் அதற்கான விமானமும் சேர்ந்தே இருந்திருக்கணும் என்று ஆகிறது. இக்ஷவாகு வம்ச ராஜாக்கள் தாங்களே பண்ணுகிற தங்களது அகத்துப் பூஜையில் வைத்துக்கொண்டிருந்தார்கள் என்றால், அப்படித்தானே (சிறிய அளவினதாக) இருந்திருக்கணும்?
இப்போது காவேரிக் கரையில் வைத்தபின்தான், பெருமாளும் க்ஷீரஸாகரமா யில்லாவிட்டாலும் மஹாநதியாக இருக்கிற இடத்தில் ஸந்தோஷப்பட்டுக்கொண்டு பெரும் ஆளாகவே நன்றாக நீள நெடுக ஆக்ருதி எடுத்துக்கொண்டிருக்கணும். அதே மாதிரி விமானமும் பெரிசான ஆலய ஸந்நிதியாக ஆகியிருக்கணும்.
வேக வேகமா ஸ்நானம் முடித்து ஓடிவந்த விபீஷணருக்கு ஒரே ஏமாற்றமும் கோபமுமாக வந்தது. 'கீழே வைக்கப்படாது என்று 'கன்டிஷ'னாயிற்றே, இந்த பிள்ளை வைத்து விட்டதே!என்ன ஆயிருக்குமோ?' என்று விசாரப்பட்டுக் கொண்டு விக்ரஹத்தை பூமயிலிருந்து எடுக்கப்போனார். ஆனால் அவர் எத்தனை பிரயத்னம் செய்தும் விக்ரஹம் அசைந்தே கொடுக்காமல் பூமியிலே நன்றாகப் பதிந்துவிட்டிருந்தது. விபீஷணருக்கு ப்ரஹ்மசாரிப் பிள்ளை மேல் கோபம் கோபமாக வந்தது. அவரைக் குட்டுவதற்காகக் கையை மடக்கிக்கொண்டு வந்தார். பிள்ளையார் ஒட்டமாக ஒட, "விட்டேனா பார்" என்று விபீஷணரும் துரத்தினார். மலைக் கோட்டை உச்சிக்குப் போய்விட்ட பிள்ளையார் தாமே மனஸ் இரங்கி விபீஷணருக்குப் பிடிபட்டார். பகவானாக நமக்குப் பிடிபட்டால்தான் உண்டே தவிர, நாமாக ஸொந்த பலத்தால் அவரைப் பிடித்துவிடமுடியுமா என்ன? யசோதைக்கூடப் பாடாகப் படுத்தின பாலக்ருஷ்ணமூர்த்தியை உரலில் கட்டிப் போடப் போய், எத்தனை கயிறும் போதாமல் வேர்த்து விருவிருத்துத் தினறின போது, பகவானேதான் மனஸ் இரங்கி கயிற்றைப் போதும்படியாக்கி அவள் தன்னை உரலோடு சேர்த்துக் கட்டிப் போடும்படிப் பண்ணினான் என்றுதானே பாகவதத்தில் இருக்கிறது?
பிள்ளையார் விபீஷணருக்குப் பிடிபட்டு அவர் தன்னுடைய சிரஸில் குட்டுவதற்கும் பரம கருணையோடு காட்டிக்கொண்டிருந்தார். எல்லாரையும் எவர் குட்டுப் போட்டுக்கொள்ள வைக்கிறாரோ, அவரே அப்போது தனக்குக் குட்டு வாங்கிக்கொண்டார்.
அந்த க்ஷணமே பிரம்மசாரி ரூபம் மாறி விக்நேச்வர மூர்த்தியாகி தர்சனமும் கொடுத்தார்.
அந்த தர்சனத்திலேயே விபீஷணருடைய ஏமாற்றம், துக்கம், கோபம் எல்லாம் பாதிவாசி சமனமாகிவிட்டது. பாக்கிப் பாதியும் சமனமாகும்படியாக விக்நேச்வரர், அவரிடம், "பெருமாளை நான் லங்கைக்குப் போக விடவில்லையே என்று வருத்தப்படாதே. இங்கே இருந்தபடியே அவர் லங்கையைப் பார்த்து அநுக்ரஹம் பண்ணும்படியாகத்தான் அவரை நான் வைத்திருக்கிறேன். தெற்குப் பார்க்கப் பெருமாளை ப்ரதிஷ்டை செய்கிற வழக்கமே இல்லாவிட்டாலும் நான் இங்கே அப்படித்தான் வைத்திருக்கிறேன்" என்றார்.