தெற்கு நோக்கும் தெய்வம் மூன்று சைவ - வைணவ ஸமரஸம்

தெற்கு நோக்கும் தெய்வம் மூன்று : சைவ - வைஷ்ணவ ஸமரஸம்

விக்நேச்வரரின் அப்பாவான பரமேச்வரன்தான் தக்ஷிணாமூர்த்தியாகவும், நடராஜாவாகவும் இருக்கிறபோது தெற்குப் பார்க்க இருப்பவர். இப்போது அவர் (விக்நேச்வரர்) மாமாவையும் அதே மாதிரி தெற்கே பார்க்க வைத்துவிட்டார். லோகமே தெரியாமல் அடித்த சிலையாக த்யானத்திலே உட்கார்ந்திருக்கிறவர் தக்ஷிணாமூர்த்தி. ஸர்வ லோக வியாபாரத்தையும் ஆனந்தக்கூத்தாக்கி அமர்க்களமாக ஆடுகிறவர் நடராஜர். சயன மூர்த்தியாக நித்ரை பண்ணிக் கொண்டிருக்கும் பெருமாளோ நித்ரை என்ற பேரில் தக்ஷிணாமூர்த்தி இருக்கிற அதே ஸமாதி ஸ்திதியில் இருக்கிறவர்தான். பின்னே ஏன் இதை ஸமாதி என்காமல் நித்ரை என்கிறார்களென்றால்... அவர் மஹா மாயாவித்தனம் - நமக்குப் புரியாத இந்திர ஜாலம் எல்லாம் - பண்ணுகிறவரோல்லியோ, அதனால் ஸமாதியில் பாட்டுக்கு ஒரு பக்கம் இருந்துகொண்டே, இன்னொரு பக்கம் நாம் எப்படி நித்ரையின் போது ஸ்வப்னம் கண்டு அந்த ஸ்வப்னத்தில் நாம் ஒருத்தரே நம் ஒருவருடைய நினைப்பாலேயே மநுஷ்யர்கள், இடங்கள், ஸம்பவங்கள் எல்லாவற்றையும் கல்பிக்கிறோமோ (கற்பனை செய்கிறோமோ) அந்த மாதிரித் தன் ஒருத்தருடைய கல்பனா ஸ்ருஷ்டியாகவே இத்தனை ஜீவ - ஜகத் ஸ்ருஷ்டியையும் பண்ணுவார். அதனால் இதை அவருடைய ஸ்வப்னம் என்று வைத்தது. ஸ்வப்னம் வரவேணுமானால் தூங்கினால்தானே முடியும்? அதனால் அவருடைய ஸமாதியை நித்ரை என்கிறது. இப்படிச் சொல்ல இன்னொரு கூடுதல் காரணம், அவர் பொது வழக்கப்படி நேரே நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு ஸமாதியில் போகாமல், தம்முடைய மாயாவித்தனத்தை இதிலும் விடாமல், நன்றாக நீள நெடுகச் சயனித்துக் கொண்டு இருப்பதாகும். ஆனாலும் இந்த நித்ரை நம்முடைய நித்ரை போன்றதில்லை என்று தெரிவிப்பதாக அதை 'யோக நித்ரை' என்று ஒரு சிறப்பு அடைமொழி போட்டுச் சொல்வது, நாமெல்லாம் அறிவு மழுங்கித் தூங்குகிறாற் போலில்லாமல் நல் அறிவு விழிப்போடேயே அவர் தூக்கத்தில் லோக ஸ்ருஷ்டியாதிகளைக் கல்பனை பண்ணுவதால் தமிழிலே அழகாக 'அறிதுயில்' என்பது. அரிசெய்வது அறிதுயில்!

'அப்பாவின் ஸமாதி மூர்த்தம். ஜகத் வியாபார மூர்த்தம் இரண்டும் தெற்குப் பார்க்க இருக்கிற போது, மாமா இரண்டையும் சேர்த்துப் பண்ணிக் கொண்டிருக்கிற பள்ளிகொண்ட மூர்த்தியும் அப்படி இருக்கவேண்டாமா?' என்று விக்நேச்வரர் நினைத்துக் கொண்டிருந்தார் போல இருக்கிறது. இப்போது விபீஷணாழ்வாரிடமிருந்து அப்படிப்பட்ட மூர்த்தியைப் பறிமுதல் பண்ணினபோது... (சிரித்து) வெளிதேசத்துக்குக் கொண்டுபோகக் கூடாது என்று கஸ்டம்ஸ் அதிகாரி சரக்கைக் கைப்பற்றுகிற மாதிரிப் பண்ணினபோது, அந்தப் பரம பக்தருக்கு அநுக்ரஹமும் தடைப்படக்கூடாது என்ற பரம கருணை விக்நேச்வரருக்கு உண்டாகி, அவருடைய ஊரைப் பார்க்க விக்ரஹத்தை ப்ரதிஷ்டை பண்ணிவிடலாமென்று நினைத்து, அதே ஸமயம் அப்பா மாதிரியே மாமாவுக்கும் தெற்குப் பார்க்க மூர்த்தி உண்டாக்கித் தன்னுடைய ஆசையையும் தீர்த்துக் கொண்டார் என்று தோன்றுகிறது.

அவருடைய ஹஸ்த விசேஷமும், ஈச்வரனுக்கு எப்படியோ அப்படியே

பெருமாளுக்கும் என்ற ஸமரஸமான மனோ விசேஷமும், இரண்டும் சேர்ந்து அப்படி அவர் ப்ரதிஷ்டித்த ரங்கராஜாவே மற்ற அத்தனை க்ஷேத்ரத்துப் பெருமாள்களுக்கும் ராஜாவாக அக்ரஸ்தானம் (முதலிடம்) பெற்றுவிட்டார்!அந்த ராஜாவின் ஆஸ்தானமான க்ஷேத்ரம் ஸ்ரீரங்கம் என்றும், திருவரங்கம் என்றும் பேர் பெற்றது.

நான் மாற்றிச் சொல்லிவிட்டேன் 'ரங்கராஜா' இருக்கிறதால் அந்த இடம் 'ரங்கம்' என்பது ஸரியில்லை, அந்த இடத்துக்கு 'ரங்கம்' என்ற பேர் இருப்பதால்தான் அங்கே ராஜாவாக இருக்கிறவருக்கு 'ரங்கராஜா'என்று பேர் ஏற்பட்டது. இக்ஷ்வாகு வம்ச ராஜாக்கள் - ராமர் வரை இருந்தவர்கள்- ஆராதித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு நாராயணன், விஷ்ணு என்று பொதுப் பெயரோ, அல்லது ஆதிசேஷ ஸர்ப்பத்தின் மேல் சயனித்துக் கொண்டிருப்பதால் சேஷசாயி, அனந்தசாயி என்கிற மாதிரி ஒரு பெயரோதான் இருந்திருக்கும். உபய காவேரி மத்தியில் விக்நேச்வரர் அவருக்கு ரங்கமாக ஒரு ஸ்தானத்தை ஏற்படுத்திய இப்போதுதான் அவர் ரங்கராஜா என்ற பெயரைப் பெற்றிருக்கவேண்டும்.

அதென்ன 'ரங்கம்'?

ரங்கம் - தமிழில் 'அரங்கம்' - என்றால் நாட்டிய நாடகங்கள் நடக்கும் மேடை. அதைப் பார்க்க ஜனங்கள் கூடியிருக்கும் ஹாலையும் சேர்த்து, என்றும் சொல்லலாம். அதாவது 'ஸ்டேஜ்' மாத்திரம் என்றும் சொல்லலாம், 'தியேட்டர்' முழுவதும் என்றும் சொல்லலாம். லோக நாடகத்தை ஸ்வப்ன கல்பனையாகப் பண்ணும் மஹா பெரிய நாடகக்காரன் ரங்கத்தில்தானே அந்த நாடகம் நடத்தணும்? இதே கார்யத்தைப் பரமேச்வரனாக இருந்து கொண்டு நாட்டியமாக அவன் பண்ணும் சிதம்பரத்தில் அவனுடைய ஸந்நிதிக்கு 'ஸபை' என்று பெயர். 'சித்ஸபை' என்பார்கள். ஜனங்களுக்குத் தெரிந்த பெயர் 'கனக ஸபை'. இந்த இடத்தில் 'ஸபை' என்பதற்கு, 'ரங்க'த்துக்கு என்ன அர்த்தமோ அதே அர்த்தந்தான். அதாவது நாட்டிய - நாடக சாலை என்றே அர்த்தம். இப்போதுங்கூட ஸங்கீதக் கச்சேரி, டான்ஸ் கச்சேரி நடத்துகிற ஸங்கங்களெல்லாம் 'ஸபா', 'ஸபா' என்றுதானே பேர் போட்டுக்கொள்கின்றன? 'ஸபா'வில் ஒருத்தர் முதல் தடவையாக டான்ஸ் கச்சேரி பண்ணுவதை 'அரங்கேற்றம்' என்கிறார்கள். இங்கே சித்ஸபை, ஸ்ரீரங்கம் இரண்டும் ஜாடையடிக்கின்றன.

நடைமுறையிலுள்ள வழக்கத்தை அநுஸரித்து நாட்டியம் என்றால் டான்ஸ், நாடகம் என்றால் ட்ராமா என்ற அர்த்தத்தில் நாட்ய - நாடக சாலை என்று நடுவே சொன்னேன், ஆனால் 'நாட்ய சாஸ்த்ரம்' என்கிற பரதரின் பெரிய ப்ரமாணப் புஸ்தகத்தில் 'நாட்டியம்' என்பது முக்யமாக இப்போது நாம் 'நாடகம்' என்று சொல்வதைத் தான் குறிக்கிறது, அதிலேயே டான்ஸைப் பற்றியும் வருகிறது. அது மட்டுமில்லாமல் ஸங்கீதம் பற்றியும் வருகிறது. 'நட' என்ற வேர்ச் சொல்லிலிருந்துதான் நாடகம், நாட்யம், நடனம் - தமிழில் 'நடப்பது' - எல்லாமே வந்திருக்கிறது. அது அசைவை, motion -ஐக் குறிக்கிற தாது (வேர்ச்சொல்) ....

டான்ஸ் பண்ணும் தகப்பனாருக்குக் கோவிலாக ஒரு நாட்டிய - நாடக சாலை 'ஸபை' என்றே இருக்கிறதென்றால், ஸ்வப்னமாகவே ட்ராமா பண்ணும் மாமாவுக்கும் அப்படி ஒன்று இருக்கணும் என்று தீர்மானித்த விக்நேச்வரர், தத்வத்தில்

ஒன்றேயானாலும், பெயரில் வித்யாஸம் இருந்தால்தான் அழகு என்று தாம் ப்ரதிஷ்டித்த மூர்த்தியின் ஸந்நிதிக்கு 'ரங்கம்' என்று பெயர் வைத்தார்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is வைஷ்ணவரின் 'கோயில்':விநாயகர் அருள் விளையாடல்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  விநாயகர் லீலையின் மெய்ம்மையும் பொருத்தமும்
Next