'கண்கூடு' என்றதும் 'கண்காணிப்பு' என்று நினைப்பு போய், அப்படியே 'அத்யக்ஷகர்' என்பதில் கொண்டு விடுகிறது! அதுவும் டீச்சருக்கு உள்ள அநேகப் பெயர்களில் ஒன்றாக வழங்கிவருவதுதான்! 'அத்யக்ஷகர்', 'அத்யக்ஷர்' என்று இரண்டு தினுஸாயும் சொல்லலாம். பாலன் - பாலகன் என்கிற மாதிரி ஒரு வார்த்தையில் நடுவே 'க' சேர்த்துச் சொல்வதுண்டு.
'அத்யாபகர்' என்பதும் (போதகருக்கான) இன்னொரு பெயர். 'அத்யக்ஷர்', 'அத்யாபகர்' என்ற இரண்டும் 'அத்ய' என்று ஆரம்பித்தாலும் அர்த்த்தில் ரொம்ப வித்யாஸம். 'அக்ஷி' என்ற 'கண்'ணை வைத்து 'அத்யக்ஷர்', கண்ணுக்கு நேர இருப்பது 'ப்ரத்யட்சம்', எவருடைய கண்ணுக்குக் கீழே, அவர் கண்காணிக்கும்படிக் கார்யம் நடக்கிறதோ அவர் அத்யக்ஷகர். அவர் கண்காணிப்பவர். 'கங்காணி' என்று தொழிலாளிகள் சொல்வது இதிலிருந்து இருக்கலாம். 'ஸ¨பர்வைஸர்' என்பது அதற்கு நேர் மொழிபெயர்ப்பு. 'ஓவர்ஸீயர்' என்பதுந்தான். சிஷ்யனைக் கண்காணித்து நல்ல வழியில் செலுத்துவதால் வாத்தியாருக்கு அத்யக்ஷகர் என்று பேர்.
'அத்யாபகர்' என்றால் 'அத்யயனம்' செய்விக்கிறவர். அத்யயனம் என்றால் பொதுவாகக் கல்வி என்கலாம். குறிப்பாக வேதக் கல்விதான் அது. குறைந்தபக்ஷம், பொதுக் கல்வியாயிருந்தால் வட வேதமரபு சார்ந்ததாக இருந்தால் 'அத்யயனம்'. 'அயனம்' என்றால் ஒரு நிர்ணயமான பாட்டையில் போவது. வாழ்க்கைப் பாதையில், ஆத்மாவைக் கடைத்தேற்றிக் கொள்கிற பாதையில் சிறப்பாக அழைத்துச் செல்லும் கல்வி 'அத்யயனம்', வேதத்தை வழிதப்பாமல் follow பண்ணி நெட்டுருப் போடுவதால் 'வேத அத்யயனம்' என்கிறோம். இவ்விதமான கல்வியை அளிப்பவர் 'அத்யாபகர்'...
குரு லக்ஷணம் என்று சொல்ல ஆரம்பித்தேன். இன்னின்ன சீலங்கள். கார்யங்கள் உள்ளவரவர் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் 'குரு'வுக்கு synonyms -ஆக (அதே பொருள் கொடுப்பதாக) அநேகப் பெயர்கள் 'ஆசார்யர்', 'தேசிகர்' என்றெல்லாம் கொடுத்து, இந்தப் பெயர்கள் எப்படி ஏற்பட்டன என்று லக்ஷணம் கொடுத்திருக்கிறதே, இவற்றைச் சொல்லியே அவருடைய சீலங்களையும் கார்யங்களையும் தெரிவிக்க முடிந்த மட்டும் தெரிவிக்கலாமென்று தோன்றி ஏதோ சொல்லிக்கொண்டு போகிறேன்...
குரு லக்ஷண ச்லோகத்தைப் பாதி எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிக் கொண்டிருக்கும்போதே மற்ற Synonym களும் ஒவ்வொன்றாக வந்து விழுந்து கொண்டிருக்கின்றன! கு-ரு என்ற அட்சரங்களைப் பிரித்துப் பிரித்து அர்த்தம் பண்ணும் போது, ' 'உ'காரம் விஷ்ணு, அவரக்கு ஸஹஸ்ரநாமத்தில் குரு என்று பெயருண்டு. அங்கே ஆசார்ய பாஷ்யப்படி, எல்லா ஜீவர்களையும் பிறப்பித்த பிதா என்பதாலும் அவர் குரு என்ற பெயருக்குரியவராகிறார்' - என்றெல்லாம் பார்த்துக் கொண்டு போனபோதே இத்தனை கதையும் வந்து சேர்ந்திருக்கிறது! பாக்கிக் கதையும் இதே மாதிரி அங்கங்கே சேர்த்து அளந்து விடுகிறேன்!