ஆக, இந்த ச்லோகப்படி குரு என்ற வார்த்தைக்கு, அந்த வார்த்தைக்கான ஸ்தானத்தை வஹிக்கிற ஆஸாமிக்கு பரமாத்கர்ஷம் - ஏற்றத்திலெல்லாம் பெரிய ஏற்றம் - கொடுத்திருக்கிறது.
ஆனாலும் நாம் நம் மூல புருஷரை (ஸ்ரீ சங்கரரை) 'ஆசார்யாள்', 'ஆசார்யாள்' என்றுதானே சொல்கிறோம்? ஆகையால் அந்த வார்த்தைக்கே மறுபடி வந்து அதன் உயர்வைச் சொல்கிறேன்.
'ஆசார்ய' பதத்திற்கு, 'சாஸ்திரங்களை நன்றாக அலசிப் பார்த்து, அந்த ஆசாரப்படித் தானும் ஒழுகி, பிறத்தியாருக்கு அவற்றை போதித்து அவர்களையும் சாஸ்திராசாரத்தில் நிலை நிற்கச் செய்கிறவர்' என்று டெஃபனிஷன் இருக்கிறது.
ஆசிநோதி U சாஸ்த்ரார்த்தாத் ஆசாரே ஸ்தாபயத்யபி 1
ஸ்வயம் ஆசரதே யச்ச தம் ஆசார்யம் ப்ரசக்ஷதே 11
இது ஸம்ஸ்க்ருதம் - சாஸ்த்ரம் தெரிந்த எல்லாருக்கும் தெரிந்திருக்கக்கூடிய டெஃபனிஷன்.
'ஸ்வயம் ஆசரதே' என்று இதில் வருவதுதான் ஜீவநாடியாயிருந்து 'ஆசார்ய' என்ற வார்த்தைக்கு உத்கர்ஷம் கொடுப்பது. அதாவது, தான் என்ன போதிக்கிறானோ அதைத் தானே பண்ணிக் காட்ட வேண்டும், ஜீவித உதாஹரணம் - தன் வாழ்க்கையாலேயே உதாரணம் - படைக்க வேண்டும். அப்படிப் பண்ணினால்தான் - சிஷ்யனுக்குச் சொல்கிறபடி அந்த குருவே செய்து காட்டினால்தான் - அவன் சொல்கிறதற்கு ஜீவ சக்தி உண்டாகி, கேட்கிறவனையும் அந்த வழியில் போகச் செய்யும். இல்லாவிட்டால் காதுக்கு ரம்யமாக, மூளைக்கு ரஞ்ஜிதமாக இருப்பதோடு க்ஷணிகமாக (க்ஷண காலமே இருப்பதாக) முடிந்துபோகும், சிஷ்யனின் வாழ்நாள் பூரா அவனை guide பண்ணாது. சிஷ்யனுக்குச் சொல்கிற வழியில்தானே போகிற அப்படிப்பட்ட குருதான் ஆசார்யன்.
புத்தருக்கு அந்த மதத்தில் அநேகம் பேர் கொடுத்துச் சொல்வதில் முக்யமான ஒன்று 'ததாகதர்' என்பது. அதற்கு அநேகம் அர்த்தம் சொல்வார்கள். நேர் அர்த்தம் - 'ததா': 'அப்படியே'; 'கதர்': 'போனவர்'. அதாவது உலகத்துக்கு என்ன வழி சொன்னாரோ அதில் தாமே போனவர்.
நம் ஆசாரியரும் அப்படித்தான்! "ஸ்வயம் ஆசரதே" பண்ணிக்காட்டிய ததாகதர்தான் அவரும்! ஆனால் பெரிய வித்யாஸம், புத்தர் பூர்வ சாஸ்த்ரப்படி வழி சொல்லி அந்த வழியிலே போனவரில்லை, ஆசார்யாள்தான் அப்படிச் சொன்னார், செய்தார். தற்காலத்தில் சாஸ்திரம் பிடிக்காததால் புத்தர் ஜாஸ்தி favourite ஆகியிருக்கிறார்!...
தர்ம சாஸ்திரத்தில் ஆசார்ய லக்ஷணம் சொல்லும் போது, 'பூணூல் போட்டு, வேதாத்யயனம் பண்ணுவித்து, அப்புறம் கல்ப சாஸதிரம் ஈறான எல்லா வேதாங்கங்களையும், அதோடு நின்றுவிடாமல் 'ரஹஸ்யம்' என்று சொல்கிற வேதாந்த சாஸ்த்ரமான உபநிஷத் முடிய ஸகலமும் உபதேசிக்கிறவரே ஆசார்யர்' என்று இருக்கிறது.