ப்ரச்னோபநிஷத் கதையில், பூராவும் உபதேசிப்பது பற்றிச் சொல்லு மிடத்திலேயே குரு லக்ஷணம், சிஷ்ய லக்ஷணம் குறித்து இன்னும் அநேக விஷயங்களும் வந்து விடுகின்றன.
முதலாவதாக "இன்னும் ஒரு வருஷம் நியமம் காக்கணும்" என்று தம்மிடம் வந்திருக்கும் அந்த ஆறு பேரிடம் KS சொல்வதால் அவர்கள் ஏற்கெனவே நல்ல அநுஷ்டாதாக்கள் என்று அவருக்குத் தெரியுமென்று தெரிகிறது. இருந்தும் அவர்களை மேலும் ஒரு வருஷம் தபஸும், சிஷ்யர்களுக்கான இதரக் கட்டுப்பாடுகளும் அநுஷ்டிக்கச் சொல்கிறார். ஏன்? தம் கூடவே வஸித்து அவர்கள் தங்கள் யோக்யதாம்சத்தை 'ப்ரூவ்' பண்ணிக்காட்டவேண்டும், அது ப்ரத்யக்ஷமாகத் தமக்கு உறுதிப்பட வேண்டும் என்பதற்காக அப்படிச் சொல்லியிருக்கலாம். இங்கே நல்ல யோக்யதை நிருபணமானவருக்கே உசந்த ஆத்ம தத்வங்களை உபதேசிக்க வேண்டும் என்பதற்குச் சான்று கிடைக்கிறது. இன்னொரு காரணம் என்னவாயிருக்கலாமென்றால், ஏற்கெனவே அநேகம் கற்றுத் தெரிந்த கொண்டவர்களான அவர்களுக்குச் கொஞ்சம் 'தான்' உண்டாகியிருக்க இடமுண்டு. அப்படி இல்லாவிட்டால்தான் புது உபதேசம் உள்ளே இறங்கும், டெஸ்ட் பண்ணி இதைத் தெரிந்துகொள்ளவே,"இன்னும் ஒரு வருஷம் தபஸ் இத்யாதி" என்று சொல்லியிருக்கலாம். குரு என்ன கட்டளையிட்டாலும் கீழ்ப்படிய வேண்டியது சிஷ்ய லக்ஷணமானதால் அந்த லக்ஷணம் அவர்களுக்கு இருக்கிறதா என்று பார்ப்பதற்கு இப்படிப் பரீ¬க்ஷ வைத்திருக்கலாம். 'தான்' என்கிறது அவர்களுக்கு உள்ளே கொஞ்சமோ நஞ்சமோ இறங்கியிருந்தாலும் இநத் தபஸ்சர்யம் அதைப் போக்கடித்து சத்தி பண்ணும் என்பதாலும் இருக்கலாம்.
அந்தக் காரணம் அல்லது இந்தக் காரணம் என்றில்லாமல் எல்லாக் காரணத்திற்காகவுமே அப்படிச் சொல்லியிருக்கலாம்.
இதில் சிஷ்ய லக்ஷணங்கள் அநேகம் தெரிந்துவிடுகின்றன. "என்கூட முறைப்படி ஒரு வருஷம் இருங்கோ -ஸம்வத்ஸ்யத" என்று KS சொல்கிற இடத்தில் 'முறைப்படி' என்பதற்கு ஆசார்யாள் 'ஸம்யக் குரு சுக்ரூஷா பரா:' என்று பாஷ்யம் செய்திருக்கிறார். 'ஸம்யக்' என்றால் ஸரியானது, பூர்ணமாக இருப்பது என்று அர்த்தம். இங்கே அர்த்தம், பூர்ணமாக, முற்றிலும். 'குரு சுச்ரூஷாபரா:' என்றால் குருவுக்கு சுச்ரூஷை செய்வதே எல்லாவற்றுக்கும் மேலே என்று total dedication -ஓடு இருப்பது. ஒரேயடியாக த்யானம் என்று பிடித்துக்கொண்டு அதிலேயே முழுகிப் போனவர்களை 'த்யானபரர்' என்கிறது போல, சிஷ்யர்களை 'குரு சுச்ரூஷா பரர்'களாக இங்கே ஆசார்யாள் நமக்குத் தெரிவிக்கிறார். அந்த அபிப்ரயாத்திற்கு மேலும் கனம் சேர்ப்பதற்காக முதலில் 'ஸம்யக்' வேறு போட்டிருக்கிறார்
தபஸ், ப்ரஹ்மசர்யம், ச்ரத்தை என்ற மூன்றோடும் இருக்கும்படி அவர்களிடம் KS சொல்வதால் இந்த மூன்றும் சிஷ்ய லக்ஷணங்கள் என்று தெரிகின்றன. தபஸ் என்றால் சரீர ச்ரமம் முதலியவற்றைப் பாராட்டாமல் ஒரே குறியாக ஒரு லக்ஷ்யத்தில் ஈடுபட்டிருப்பது. ச்ரத்தை என்றால் நம்பிக்கை -
சாஸ்த்ரம் சொல்வதும் குரு சொல்வதுமே பரம ஸத்யம், அதுவே நமக்கு நல்லது
என்று பாறாங்கல் மாதிரியான த்ருட ந்மபிக்கை. 'ஆஸ்திக்ய புத்தி' என்றே ஆசார்யாள் ச்ரத்தைக்கு அர்த்தம் பண்ணுவது வழக்கம்.
இப்படியெல்லாம் குரு சொல்லி ஒருத்தன் ஒழுகுகிறானென்றால் அவனிடம் சிஷ்யனின் ப்ரதம லக்ஷணமான விநயம் - அடக்கம், பணிவு - இருந்தால்தான் முடியும்.