'யதாவத்' சொல்லிக்கொடுப்பது என்பது பற்றிக் கொஞ்சம் விஸ்தாரம் பண்ணணும். அப்பா முழு ஸொத்தையும் பிள்ளைக்கு எழுதி வைக்கிற மாதிரி ஆசார்யன் தனக்குத் தெரிந்த வித்யை முழுதையும் சிஷ்யனுக்குச் சொல்லிக் கொடுப்பதுதான் இந்த 'யதாவத்'. இரண்டு பிள்ளை இருந்துவிட்டால் அப்பா ஒவ்வொருத்தனுக்கும் முழு ஸொத்து எழுதி வைக்க முடியாது. ஆனால் குருவோ எத்தனை சிஷ்யாள் இருந்தாலும் ஒவ்வொருத்தனுக்கும் பூர்ணமகா வித்யாப்யாஸம் பண்ணுவிக்க முடியும். இது வித்யையின், அறிவின் விசேஷம். எத்தனை பங்கு போட்டாலும் குறையாத ஸ்ரீ அது.
சிஷ்யனிடம் பரம ப்ரேமையும், அவனுக்கு வழிகாட்டணும் என்பதில் முழு ஈடுபாடும், தனக்குத் தெரிந்த வித்தையை தன்னோடு போகாமல் நாலு பேரிடம் பிரகாசிக்கவேண்டும் என்பதாக அந்த வித்யையிடமே பக்தி - ப்ரேமைகளும் இருந்தாலொழிய இப்படிப் பூர்ணமாகக் கற்றுக்கொடுக்க முடியாது. இக் காலத்தில் அபூர்வமாகத்தான் அப்படிப் பார்க்க முடிகிறது. அடியோடு இல்லாமல் போய் விடவில்லை என்று இன்றைக்குப் பல துறைகளில் பெரியவர்களாக இருக்கப் பட்டவர்கள் தங்கள் ஆசிரியர்மார்களைப் பற்றிச் சொல்வதிலிருந்து தெரிகிறது, என்னிடம் பல இள வயஸுக்காரர்கள் 'தீஸில்' கொண்டு வந்து கொடுக்கிறார்கள், அவர்களுள் சொல்வதிலிருந்து தற்காலத்திலும் அப்படிப் பூர்ணமாக அநேக ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதாகத் தெரிகிறது. ஆனாலும் நேர்மாறாக, 'கம்ப்ளெய்ன்ட்'களும் கேட்கிறேன்
ஆனால் உபநிஷத்துக்களைப் பார்த்தால், ஏதோ ரொம்ப ஸ்வல்பமான விலக்குத் தவிர அக்காலத்தில் அத்தனை ஆசார்யர்களுமே தாங்கள் கற்றறிந்த வித்யையைப் பூர்ணமாக சிஷ்யர்களுக்கு உபதேசித்தார் என்று தெரிகிறது. அத்தனை கர்வியாக இருந்த ச்வேதகேதுவே அப்பாக்காரர் கேட்ட ஸமாசாரம் தனக்குத் தெரியவில்லை என்கிறபோது, தன்னுடைய குருமார் அதை உபதேசிக்கவில்லை என்று சொல்லி, கூடவே, "அவாளுக்கும் விஷயம் தெரியாது போலேயிருக்கு, தெரிஞ்சிருந்தா எனக்கு ஏன் சொல்லித்தராம இருந்திருக்கப் போறா?" என்று சொல்கிறான். அதொன்றே போதும். அந்த ஸந்தர்ப்பத்தில் அப்படிப்பட்ட ஒரு பாத்திரம் இப்படி ஒன்று சொன்னது விசேஷம்.
'ப்ரச்நோபநிஷத்'திலிருந்து கொஞ்சம் முன்னே சொன்னேன். அதன் முடிவிலே சிஷ்யர்கள் ஆசார்யரைப் பார்த்து, "அவித்யையின் அக்கரையில் எங்களைச் சேர்த்த நீங்கள்-னா எங்க அப்பா!" என்று வருவதாகச் சொன்னேன். ஆரம்பத்தை இப்போது சொல்கிறேன்.
ஆறு பேர் சிஷ்யர்களாகப் புறப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தாங்களே குருஸ்தானம் வரிக்கும் யோக்யதை பெற்றவர்கள் - ஸுகேசர், ஸத்யகாமர், கார்க்யர், கெனஸல்யர், பார்கவர், கபந்தி என்றிப்படி ஆறு பேர். அவர்களுக்கும் ப்ரஹ்ம வித்யையில் இன்னும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்தன. தெரிந்துகொள்ளணும் என்று ஆசைப்பட்டார்கள். அதற்காக ஆறு பேரும் 'பகவந்தர்' என்று உபநிஷத்
சிறப்பித்துச் சொல்லும் மஹரிஷி பிப்பலாதரை ஆசார்யராக வரித்து, உபஹாரமாக-
அதாவது, குரு காணிக்கையாக - ஸமித்தை எடுத்துக்கொண்டு அவரிடம் போனார்கள். ஸமித்து என்றால் வெறும் சுள்ளிதான். ஹோமத்திலே போட உபயோகமாகிற சுள்ளி. 'வெறும்' சுள்ளி என்று நான் சொன்னதையே பெரிய தக்ஷிணையாக அந்தக் கால ரிஷி-குருமார் நினைத்தார்கள். அத்தனை எளிமை!அதிலேயே வஸ்துவைவிட வஸ்துவைத் தருகிறவரின் மனோபாவத்தை மதிக்கத் தெரிந்த பண்பும்!
இது யோக்யதையுள்ள சிஷ்யர்களென்றால் தக்ஷிணையைப் பொருட்படுத்தாமல் வித்யை போதிக்கிறதைக்காட்டுகிறது. இதன் தொடர்ச்சியாகவே இன்னொன்றும், அதாவது யோக்யதை போதாதவன் என்றால் அவன் எத்தனை பெரிசான தக்ஷிணை கொடுக்கிறானென்றாலும் அவனை சிஷ்யனாக ஏற்றுக் கொள்வதில்லை என்றே அந்த குருமார்கள் இருந்திருக்கிறார்கள். 'ஸமுத்ரம் சூழ்ந்த பூமி பூராவையும் தக்ஷிணையாகத் தரக் கூடியவனாயிருந்தாலும் யோக்யதை போதாதவன் என்றால் அவனுக்கு உபதேசிக்கப்படாது' என்றே மதுவித்யை உபதேசிக்கும் KS சொல்லியிருக்கிறார். ஆசார்யாளும் இதை நினைப்பில் கொண்டு தம்முடைய 'உபதேச ஸாஹஸ்ரீ' ஆரம்பத்தில் 'ஸமுத்ரம் சூழ்ந்த லோகம் பூராவையும், அதிலுள்ள பூர்ணமான செல்வங்களோடு குருவுக்குத் தந்தாலும் அவர் தருகிற உபதேசமோ அதற்கும் பெரிதானது என்று சாஸ்திரம் சொல்கிறது' என்கிறார். இந்த விஷயம் இருக்கட்டும்.
ஸுகேசர் முதலான ஆறு பேர் ஸமித்தை எடுத்துக்கொண்டு பிப்பலாதரிடம் போனார்கள். பெரியவர்களாக இருக்கப்பட்ட ஆறு பேர் தங்களுடைய வித்யா ஞானம் பூர்த்தியாகவில்லை என்று ஒருத்தருக்கொருத்தர் மனஸ்விட்டுச் சொல்லிக் கொண்ட சிஷ்யர்களாகப் புறப்பட்டார்கள் என்பதிலிருந்து அவர்களுடைய விநய மனப்பான்மையையும் வித்யா தாஹமும் தெரிகிறது. 'வித்யா -விநய ஸம்பன்ன' என்று சேர்த்துச் சேர்த்தே நம்முடைய மரபில் சொன்னது நடைமுறையிலேயே நடந்த ஸமாசாரந்தான் என்று தெரிகிறது. அது இருக்கட்டும்.
பிப்பலாதருக்கு ப்ரஹ்மவித்யை பூர்த்தியாகத் தெரியும் என்று இவர்களுக்குத் தெரிந்ததாலேயே அவரிடம் உபதேசம் பெறுவதற்குப் புறப்பட்டது. அப்போது இவர்கள், அவர் பூர்த்தியாக அறிந்ததைத் தங்களுக்கும் பூர்த்தியாகச்சொல்லிக் கொடுப்பார் என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டே புறப்பட்டதாக வருகிறது. "தத் என்கிற ப்ரஹ்மத்தைப் பற்றி ஸர்வமும் அவர் நமக்குச் சொல்லுவார்" என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.
அப்படியே அவரிடம் போக, அவர், "இன்னும் ஒரு வருஷம் கட்டுப்பாட்டோடு தபஸ் பண்ணிக்கொண்டு முறைப்படி ச்ரத்தையோடு இங்கே இருங்கோ!அப்புறம் கேட்கவேண்டியதையெல்லாம் உங்கள் இஷ்டம்போல கேட்டுக்கோங்கோ. நீங்கள் கேட்பது எனக்குத் தெரிஞ்சிருந்தால் தெரிஞ்சமட்டில் முழுக்க - ஸர்வமும் - சொல்லித் தரேன்" என்கிறார்.
ஒரு குருவானவர் தாம் அறிந்த ஸர்வமும் சிஷ்யனுக்கு போதிக்காமல் விடமாட்டார் என்பதற்கே இதைச் சொல்லவந்தேன்.
ரொம்ப அழுத்தமாக ஒன்று ஞாபகம் வருகிறது. ஜனகருக்கு யாஜ்ஞவல்க்யர்
அநேக உபதேசங்கள் கொடுத்துக் கொண்டே போகிறார். ஒவ்வொரு
உபதேசத்தையும் கேட்டவுடன் ஜனகருக்கு ஸந்தோஷம் பொங்கிக் கொண்டு வருகிறது, 'இதோ ஆயிரம் பசு, ஆனை மாதிரி காளையோடுகூடத் தருகிறேன்' என்கிறார். ஆனால் யாஜ்ஞவல்க்யர், "பூர்த்தியாக உபதேசம் கொடுக்காமல் தக்ஷிணை வாங்கிக் கொள்ளக்கூடாதென்று என் அப்பா தீர்மானம்" என்று பிதாவுக்குப் பெருமை கொடுத்துச் சொல்லி, தேடி வருகிற ஸம்பாவனையை நிராகரிக்கிறார். சிஷ்யன் என்ன தக்ஷிணை தருகிறான் என்பதைவிட தாம் முழுக்கச் சொல்லிக் கொடுக்கணும் என்பதைத்தான் குரு முக்யமாக நினைத்தார் என்று இங்கே தெரிகிறது.