ஈடு செய்ய முடியாதது குரு உபதேசம்

ஈடு செய்ய முடியாதது குரு உபதேசம்

"நமஸ்கரித்தார்கள்" என்று இந்த இடத்தில் இல்லாமல், "அர்ச்சித்தார்கள்" என்றே உபநிஷத்தில் வார்த்தை போட்டிருக்கிறது. அப்போது அர்ச்சனை என்றால் நாமம் நாமமாகச் சொல்லிப் பூ போடுவது, குங்குமம் போடுவது என்று தெரிந்து கொண்டிருக்கிறோம். அதுவும் ஸரீதான். ஆனால் பூஜையில் ஒரு அங்கமாக உள்ள இந்த ஒன்றுக்கு மாத்திரமில்லாமல் முழுப் பூஜையையுமே - வழிபாடு என்பதையேகூட - 'அர்ச்சித்தல்' என்பது குறிக்கும். இங்கே ஆசார்ய பாஷ்யத்தில், அவர்கள் தங்களுடைய ஆசார்யரின் பாதத்தில் புஷ்பாஞ்ஜலி செலுத்தி, சிரஸால் பாதத்தைத் தொட்டு நமஸ்கரித்ததாக விரித்து அர்த்தம் பண்ணியிருக்கிறார். இன்னுங்கூட அழகாக விரித்து முன்னுரையாக ஒன்று சொல்கிறார். என்னவென்றால், குரு உபதேசத்தால் க்ருதார்த்தர்களாகிவிட்ட அவர்கள் - அப்படியென்றால் ஜீவிதத்தின் பரமப்ரயோஜனத்தை அடைந்துவிட்டவர்கள் என்று அர்த்தம், அப்படி ஆன அவர்கள் - இப்படிப்பட்ட வித்யோபதேசத்துக்கு என்ன ப்ரதி, கைம்மாறு செய்ய முடியுமென்று பார்த்தார்களாம். ஒன்றுமே அகப்படவில்லையாம்.

'ஸமுத்ரம் சூழ்ந்த பூமி பூராவையும் தக்ஷிணை கொடுத்தாலும், யோக்யதை போதாத ஒருத்தனுக்கு உபதேசிக்கப்படாது' என்று சாந்தோக்யோபநிஷத் KS சொன்னார். இங்கேயோ யோக்யதை உள்ள சிஷ்யர்களே வித்யோபதேசம் பெற்றுக் கொண்ட பிறகு, 'என்ன தக்ஷிணை கொடுத்தும் குருவுக்குப் பிரதி செய்துவிட முடியாது' என்று நினைத்தார்களாம்!இப்படிச் சொல்லும் ஆசார்யாள் தம்முடைய 'உபதேச ஸாஹஸ்ரீ' ஆரம்பத்திலும் 'ஸமுத்ரம் சூழ்ந்த லோகம் பூராவையும், அதிலுள்ள பூர்ணமான செல்வங்களோட குருவுக்குத் தந்தாலும் அவர் தருகிற உபதேசமோ அதற்கும் பெரிதானது என்று சாஸ்த்ரம் சொல்கிறது' என்கிறார்.

'ஸமுத்ரம் சூழ்ந்த பூமி பூராவையும் தக்ஷிணையாகத் தரக்கூடியவனா யிருந்தாலும், யோக்யதை போதாதவன் என்றால் அவனுக்கு உபதேசிக்கப்படாது' என்று (சாந்தோக்யத்தில்) மதுவித்யை உபதேசிக்கும் KS சொல்லியிருக்கிறார். பணத்துக்காக அறிவை விலை பேசாத குருவின் உசந்த லக்ஷணத்தை அது தெரிவிக்கிறது. அதே 'ஐடியாவை ஆசார்யாள் 'உபதேச ஸாஹஸ்ரீ'யில் சிஷ்ய லக்ஷணத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறார். இங்கே (ப்ரச்நோபநிஷத் பாஷ்யத்தில்) அந்த மாதிரிதான் சிஷ்யாள் 'குருவுக்கு என்ன ப்ரதி பண்ணினால்தான் போதுமானதாகும்?' என்று கேட்டதாகத் தம்முடைய அபிப்ராயத்தை தெரிவிக்கிறார். அந்த ஆறு சிஷ்யாள் என்ன ப்ரதியும் செய்ய முடியாது என்று முடிவு பண்ணித்தான் அப்புறம் ஏதாவது 'சிரித்து' thanks giving தெரிவத்தாகணும் என்று புஷ்பாஞ்ஜலியாகக் கை நிறையப் புஷ்பங்கள் எடுத்து அவர் பாதத்தில் போட்டு சிரஸால் நமஸ்கரித்தார்களாம் - ஆசார்யாள் சொல்கிறார்.

மூல வாசகத்தில் அவச்யத்திற்கு அதிகமாகக் கொஞ்சங்கூடக் கூட்டி பாஷ்யம் செய்யாதவர் நம்முடைய ஆசார்யாள். அப்படிப்பட்டவரே மூலத்தில் 'அர்ச்சயந்த' என்று வருகிற ஒரு சின்ன வார்த்தைக்கு இத்தனை நீளமாக விளக்கம்

கொடுத்திருக்கிறாரென்பதிலிருந்து அவருக்கு எத்தனை குரு பக்தி இருந்தது,

ஜனங்கள் குருமாரிடத்தில் எப்படி மனஸ் ரொம்பி, நன்றி விச்வாஸத்துடன் பக்தி பண்ணணும் என்று சொல்லிக் கொடுப்பதில் அவருக்கு எவ்வளவு ஆர்வம், ச்ரத்தை இருந்தது என்று தெரிகிறது.

அந்த ஆறு சிஷ்யாள் ப்ரத்யக்ஷமாகத் தாங்கள் பார்த்த அந்த ஒரு ரிஷிக்கு நமஸ்காரம் பண்ணும்போதே அவரொருத்தரை மாத்திரம் நினைக்காமல் அத்தனை ரிஷிகளையுமே நினைத்து, "பரம ரிஷிகளுக்கு நமஸ்காரம், பரம ரிஷிகளுக்கு நமஸ்காரம்" என்று சொன்னதாக உபநிஷத் முடிக்கிறது. 'இரண்டு தடவை அப்படிச் சொல்லியிருப்பது மரியாதையைக் காட்டவே' என்று ஆசார்யாள் பாஷ்யம்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is விநயத்தோடு நில்லாமல் உண்மையைத் தெரிவிப்பது
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  வழிவழி வரும் உபதேசம்
Next