வழிவழி வரும் உபதேசம்

வழிவழி வரும் உபதேசம்

ப்ரத்யட்ச குருவைப் பிதா என்றால், அந்தப் பிதா அவருக்கு ஒரு பிதா இல்லாமல் எப்படி உண்டாவார்? அப்படியே அந்தப் பிதாவுக்கும் பிதா, அவருக்குப் பிதா என்று போகுந்தானே? அப்பா இருந்தால் தாத்தா, கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா என்று அப்படியே போய்க்கொண்டுதானே இருக்கிறது? அப்பாவுக்கு ச்ராத்தம் என்றாலும் தாத்தா, கொள்ளுத் தாத்தாவையும் அங்கே கூப்பிடத்தானே செய்கிறோம்? அதே மாதிரி குரு என்ற அப்பாவையும் பரம்பரா க்ரமமாகச் சேர்த்துதானே பூஜிக்கணும்? ஆதியிலிருந்து அந்தந்தக் கால சிஷ்யர்களுக்குப் பரமோபகாரம் பண்ணிவந்திருக்கிற குரு பரம்பரையை நாம் மறக்கவே கூடாது. 'பரமரிஷிகள்' என்று (மூலத்தில்) வருவதை ஆசார்யாள் 'ப்ரஹ்மவித்யா ஸம்ப்ரதாய கர்த்தாக்கள்' என்று மரபு வழி வந்த குரு பரம்பரையாகவே அர்த்தம் பண்ணியிருக்கிறார்.

வழி வழி வழியாக ஒரு உபதேசமோ அநுஷ்டானமோ வந்திருக்கணும். அதற்குத்தான் Weight. அதிலே வந்த ஒவ்வொருத்தரின் அநுஷ்டான பலமும், அநுபவ பலமும் சேர்ந்து சேர்ந்து அதுதான் வஜ்ரம் பாய்ந்த மரம் மாதிரி எது ஸத்யமோ, எது ஹிதமோ அதை உறுதிப்பண்ணித் தரும். பல பேர் பல தலைமுறைகளாக வாழ்க்கையிலேயே நடத்திக் காட்டி, பலனைடந்து வெற்றி கண்ட வழியாக ஒன்று இருக்கிறெதென்றால் அவர்கள் அத்தனைபேரும் கண்டு கொண்ட லட்சியம் ஸத்யமாகத்தானே இருக்க முடியும்? Free thinking, சுதந்திர சிந்தனை, அது - இது என்று சொல்லிக் கொண்டு நம் ஒருவருடைய அல்ப புத்தியைக் கொண்டு மாத்திரம் கண்டுகொள்வது எப்படி இத்தனை நிலைப்பட்ட ஸத்யமாயிருக்கமுடியும்?


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is ஈடு செய்ய முடியாதது குரு உபதேசம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  ''மரபு மீறுபவன் மூடன்''- ஆசார்யாள்
Next