ஸம்ப்ரதாயமாக வந்த ஒரு குரு பரம்பரை என்றால் அதனிடம் அவருக்குச் சொல்லிமுடியாத மரியாதை. மூலத்திற்கு அதிகமாக அவர் பாஷ்யத்தில் போவது ரொம்பவும் அபூர்வம் - முன்னேயே சொன்னேன். ஆனால் அப்படி ஒன்று, நம் 'டாபிக்' விஷயமாக அவர் அத்தனை உபநிஷத்திற்கும் பாஷ்யம் எழுதி முடிக்கிறபோது செய்திருக்கிறார்.
'தசோபநிஷத்' என்று பத்து - ஈசாவாஸ்யத்தில் ஆரம்பித்து ப்ருஹதாரண்யகத்தில் முடிவதாக அவர் தேர்ந்தெடுத்து பாஷ்யம் பண்ணியிருக்கிறார். இன்னும் சில உபநிஷத்துக்களுக்கும் அவர் பேரில் பாஷ்யமிருந்தாலும் இந்த பத்துதான் ப்ரஸித்தமாகச் சொல்வது. அவற்றில் ஆரம்ப உபநிஷத், அந்த்ய (முடிவான) உபநிஷத் இரண்டுமே சுக்ல யஜுர் வேதத்தைச் சேர்ந்தவையாயிருக்கின்றன. அது இருக்கட்டும்... அந்த்ய (முடிவான) உபநிஷத்தின் அந்த்ய பாகத்திற்கு ஆசார்யாள் வந்துவிடுகிறார். அதில் அத்தனை ரிஷிகளுக்கும் லிஸ்ட் கொடுத்து. . பெரும்பாலும் அம்மா பேரிலேயே ஒவ்வொரு ரிஷியையும் குறிப்பிடுவதாக முன்னேயே சொன்னேன்... முடிக்குமிடத்தில் அதை மாற்றிப் புருஷ ரிஷிகள் கிரமத்திலேயே பிள்ளை - அப்பா- தாத்தா - அவருக்கு அப்பா என்று மூதாதைகளைச் சொல்லிக்கொண்டே போய் 'ப்ரஜாபதி - ப்ரஹ்மன்' என்று முடித்திருக்கிறது. அந்த ப்ரஹ்மனுக்கு நமஸ்காரம் என்று நமஸ்கார வாசகத்தோடு உபநிஷத் பூர்த்தியாகிறது. தசோபநிஷத்துக்களுக்குமே அதுதான் பூர்த்தி.
இங்கே 'ப்ரஹ்ம' என்றிருப்பதற்கு 'ப்ரஹ்மா' என்கிற ஸ்வாமி என்றும், சப்த ப்ரஹ்மமாகிய வேதம் என்றும் அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம். வேதத்தையே ஆதி குருவாக Personify பண்ணிச் சொன்னதாக எடுத்துக்கொள்ளலாம். பரப்ரஹ்மத்திலிருந்துதானே ஸகலமும் உத்பவித்திருப்பது? அதனால், அந்த 'ப்ரஹ்மம்' என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
இங்கேதான் ஆசார்யாள் பார்த்தார்."அந்த ஆதிகுருவுக்கு மட்டும் நமஸ்காரம் சொல்லி உபநிஷத் உபதேசத்தை முடித்துவிடுவதா? அந்த ஆதியிலிருந்து வந்திருக்கிற தொடர் சங்கிலியான குரு பரம்பரை முழுவதற்கும் இந்தப் பூர்த்தி ஸ்தானத்தில் சேர்த்து (சிரித்து) ஒரு omnibus நமஸ்காரம் பண்ணினால்தானே ஹ்ருதயத்திற்கு நிறைவு ஏற்படும் போலிருக்கு? ஸத் - ஸம்ப்ரதாயத்திற்கு அந்த கெனரவம் தராமல் முடித்து விடலாமா?" என்ற அவருக்குத் தோன்றிற்று. அதனால் பாஷ்யத்தின் அந்த்ய வாசகமாக, 'ப்ரஹ்மணே நம:' என்று மூலத்தில் முடிவாயுள்ளதைச் சொன்ன அப்புறம், "நம:தத் - அநுவர்த்திப்யோ குருப்ய:" என்றும் சேர்த்தவிட்டே எழுத்தாணியைக் கீழே வைத்தார். அப்படியென்றால் 'ப்ரஹ்மமாகிற வேதத்தை அழகாகப் பின்பற்றிப்போகிற குருமார்களுக்கு - குரு பரம்பரைக்கு - நமஸ்காரம்' என்று அர்த்தம். நம்முடைய ப்ரஹ்ம வித்யா குரு பரம்பரைக்கே மத்யமணியாகப் பிரகாசிக்கும் ஆசார்யாள் இப்படி குரு வந்தனம் பண்ணி உபநிஷத் பாஷ்யத்தை முடித்திருக்கிறார்.
தைத்திரீய பாஷ்ய ஆரம்பத்திலே, மங்களச்லோகத்தில், ஆசார்யாள், தமக்கு
முந்தி உபநிஷத்துக்களை வியாக்யானம் பண்ணிக்கொண்டு வந்திருக்கிற அத்தனை
பூர்வகால குருக்களுக்கும் நமஸ்காரம் தெரிவித்திருக்கிறார். (அவர்களை) 'நித்யம் நமஸ்கரிக்கிறேன்' என்கிறார். 'பதம்' என்கிற வ்யாகர்ணம், 'வாக்யம்' என்கிற மீமாம்ஸா சாஸ்த்ரம், 'ப்ரமாணம்' என்ற ந்யாய சாஸ்த்ரம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் உபநிஷத்துக்களுக்கு அர்த்தம் பண்ணினார்கள் என்ற அவர்களுடைய வித்வத்தை ச்லாகித்துச் சொல்கிறார்
யைரிமே குருபி பூர்வம் பத - வாக்ய - ப்ரமாணத:1
வ்யாக்யாதா:ஸர்வவேதாந்தாஸ் - தாந் - நித்யம் ப்ரணதோஸ்ம்யஹம் 11
நாமெல்லாருமே ப்ரஹ்மவித்யா குரு பரம்பரா வந்தனமாகச் சொல்லக் கூடிய - நித்யமும் சொல்ல வேண்டிய -ச்லோகம்.