ஸம்ப்ரதாயத்துக்கு விருத்தமாக (முரணாக) வேறே அபிப்ராயம் சொல்கிறவனை ஆசார்யாள் 'மூர்க்கன்' என்றே சொல்வார். அவர் கருணாலயமாக இருந்தவர். அவரே இப்படிக் கடுமையானகச் சொன்னாரென்றால், பரம ஸத்யம் என்று அவருக்குத் தெரிந்த ஒன்றை எப்படிச் சொல்லாமலிருக்க முடியும்? ஜனங்களின் நல்லதற்காவே, அவர்களை நல்ல வழியில் கொண்டு வரணும் என்ற கருணையினாலேயே, 'ஸம்ப்ரதாயத்தை ஒட்டியே போங்கள் சொந்த முடிவு பண்ணி வீணாகப் போகாதீர்கள்!'என்பதை இப்படிக் கண்டிப்பான வார்த்தை போட்டு உபதேசித்தார். அழகான ஒரு பெரிய மரபு வழிவழியாக வந்திருக்கும்போது, அதை விட்டு விட்டுப் பிடிவாதமாகத் தன்னையே வீண் பண்ணிக் கொள்கிறவன் மூர்க்கனில்லாமல் வேறே என்ன? அதைத்தான் சொன்னார்.
ஸம்ப்ரதாயத்தில் வராத புது அர்த்தத்தை சாஸ்திரங்களில் புகுத்திச் சொல்கிறவனை ஆசார்யாள் 'ஆத்மஹா', அதாவது தன்னையே கொலை பண்ணிக் கொண்டவன், 'மூடன்', மூடனாயிருந்தும் வாயைமூடிக் கொண்டிருக்காமல் ஊருக்கு உபதேசம் பண்ணி மற்றவர்களையும் குழப்புகிறவன் என்றெல்லாம் பலமாகவே கண்டித்து கீதா பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார். எனவே அவன் அத்தனை சாஸ்திரமும் படித்தறிந்தவனாயிருந்தாலும் அவனை மூர்க்கன் என்றே தள்ளவேண்டும் என்கிறார்.