வித்யாகுரு வும் தீக்ஷ£குருவும்
வருங்காலத்திற்கு எது ஹிதமோ அதற்கு முன்கூட்டியே வழிசொல்லித் தருகிறவர்தானே குரு? அதனால் அவர் 'புரோஹிதர்' ஆகிறார். எட்டு வயஸில் ப்ரம்மசாரியாகி குருகுலம் சேர்ந்துவிட்ட சிஷ்யனுக்கு ப்ரம்மசர்ய ஆச்ரமத்தில் அவன் எப்படி ஒழுகவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதோடு மாத்திரம் அவர் முடித்து விடுவதில்லை. பிற்பாடு, வாழ்நாள் முழுவதற்குமேயான எல்லா விஷயங்களும் உபதேசிக்கிறார். இவரை 'வித்யாகுரு' என்பார்கள். எல்லா வித்யைகளும், அதாவது கல்வியின் பல துறைகளையும் போதிக்கிறவர் இவர். ஆனாலும் ஆத்ம வித்யையை மாத்திரம் காரிய ரூபத்தில் உடனே ஏற்று அநுஷ்டிக்கச் செய்கிற அளவுக்கு போதிக்கமாட்டார். அதிலும் அறிவை வளர்த்துக் கொடுத்து, அதன் லக்ஷ்யத்தில் ஒரு பிடிமானத்தையும் உண்டாக்கித் தருவாரானாலும், அதை நடைமுறையில் ஏற்றுச் செய்வதற்கு ஸந்நியாஸப் பக்குவம் அவசியம் என்பதால், முதல் ஆச்ரமத்தில் (ப்ரம்மசரியத்தில்) இருக்கும். சிஷ்யனை அவர் இரண்டாம் ஆச்ரமத்தில் (க்ருஹஸ்தாச்ரமத்திற்கு) த் தான் அனுப்பி வைப்பார், நாலாம் ஆச்ரமத்திற்கு (ஸந்நியாஸத்திற்கு) அல்ல. பிற்பாடு அந்த ஆச்ரமம் கொடுத்த ஆத்மவித்யை - ப்ரஹ்ம வித்யா எனப்படுவதை - மட்டுமே போதிப்பவரை 'தீக்ஷ£ குரு' என்பது. தெய்வங்களைக் குறித்து ஜபிப்பதற்காக இருக்கும் பல விதமான மந்த்ரங்களில் ஒன்றை உபதேசிக்கிறவரையும் தீக்ஷ£ குரு என்று சொல்வதாக ஏற்பட்டிருக்கிறது.
எந்த குருவானாலும் 'வரும் முன் காப்பது' என்றபடி, சிஷ்யாள் தப்புப் பண்ணாதபடி முன்னதாகவே ஜாக்ரதை பண்ணி அவர் உபகரிப்பார். அதனால் 'புரோ'ஹிதர் என்று பேர். 'ஜாக்ரதை பண்ணி' என்னும்போது கொஞ்சம் மிரட்டி, உருட்டி, எச்சரிக்கை பண்ணுவதாக த்வனிக்கலாம். இவர் அப்படி மிரட்டல் - உருட்டல் பக்கம் போகாதவர். பக்வமாக, பதமாகவே சொல்கிற 'ஹிதர்'! ஏற்கெனவே வந்துவிட்ட கட்டிக்கு வைத்யம் பண்ணுவதோடு , இனி மேலும் பாபம் சேர்க்காமலிருக்கவும் preventive medicine (பின்னர் நேரக்கூடிய நோய்க்குத் தடுப்பு மருந்து) கொடுக்கும் புரோ-ஹிதராக குரு இருக்கிறார்.