புரோஹிதருக்கும் குருவுக்கும் வித்யாஸம் காட்டினாற்போலவும் ஒரு சாஸ்த்ர வசனம் இருக்கிறது.
ராஜானம் ராஷ்ட்ரஜம் பாபம், ராஜபாபம் புரோஹிதம் 1
பர்த்தாரம் ஸ்த்ரீ-க்ருதம் பாபம், சிஷ்ய பாபம் குரும் வ்ரஜேத் 11
ஸாதாரணமாக நினைப்பது, ராஜா ஜனங்களை ஆட்டிப் படைப்பவன், அவனையும் ஆட்டிப் படைப்பவர் ராஜகுரு, பதி என்கிறவன் பெண்டாட்டியை ஆட்டிப் படைப்பவன், குரு என்பவர் சிஷ்யனை ஆட்டிப் படைக்கிறவர், என்று. ஆனால் நம்முடைய தர்ம சாஸ்திரங்களில் அந்த நாலு பேருக்கும் அவர்கள் யார் யாரை ஆட்டிப் படைப்பதாகத் தோன்றுகிறதோ அந்த நாலு பேரை நல்வழிப்படுத்தியாக வேண்டிய பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறது. ராஜா ப்ரஜைகளைநல்வழிப்படுத்தும், ராஜகுரு அந்த ராஜாவையே நல்வழிப்படுத்தணும், அகமுடையானமார்கள் பொண்டாட்டிமார்களை நல்வழிப்படுத்தணும், குரு என்று இருப்பவர் சிஷ்யாளை நல்வழிப்படுத்தணும். இப்படி அவர்கள் கட்டாயப் பொறுப்பு ஏற்க வேண்டும். பயங்கரமான பொறுப்பாகவே கொடுத்திருக்கிறது. என்ன பயங்கரம் என்றால், அப்படி அவர்கள் நல்வழிப்படுத்தத் தவறினால், அந்த ப்ரஜைகளும், ராஜாவும், பெண்டாட்டியும், சிஷ்யர்களும் பண்ணுகிற பாபம் முறையே அந்த ராஜாவையும், ராஜகுருவையும், அகமுடையனையும் குருவையுமே சேரும். இப்படி ஒரு பெரிய பொறுப்பு ஏற்பதால்தான் அந்த நாலுபேரை அடங்கி நடக்கும்படிச் சொல்லியிருப்பது.